Published:Updated:

தேர்தல் குறித்த புதிய சட்டத் திருத்தங்கள்... போர்க்கொடி உயர்த்தும் எதிர்க்கட்சிகள்!

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

கொரோனா பேரிடர் காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவருவதாகத் தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் சொல்கின்றன. ஆனால்...

இந்திய தேர்தல் ஆணையத்தின் சில புதிய சட்டத் திருத்தங்கள் இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2019’ மற்றும் ‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2020’ ஆகிய இரண்டு திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது, இந்தியத் தேர்தல் ஆணையம். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி மூத்த குடிமக்களுக்கான வயது 80-லிருந்து, 65 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் தபால் வாக்குச் சீட்டுப் போடுவதற்கு தகுதியானவர்கள் என்றும் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மத்தியில் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவருவதாகத் தேர்தல் ஆணையம் சொல்கிறது. இதை மத்திய அரசும் வழிமொழிகிறது. தன்னாட்சி கொண்ட அமைப்பாகத் தேர்தல் கமிஷன் இருந்தாலும், மத்திய அரசின் வாய்ஸ் ஆகத்தான் செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு உண்டு. அகில இந்திய அளவில் பிரதான கட்சித் தலைவர்களிடம் இந்தச் சட்டத் திருத்தங்கள் பற்றி முன்கூட்டியே கருத்து ஏதும் கேட்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கு சாதகமாகவும், எதிர்க்கட்சியினருக்கு பாதகமான அம்சங்கள் அதில் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

''இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கணிசமான தபால் வாக்குகள் அதிகரித்து, தேர்தலில் முறைகேடான செயல்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. தேவையில்லாத இந்தச் சட்டத் திருத்தங்களால் அரசுக்கு கூடுதல் செலவுதான் ஏற்படும். தற்போதுள்ள மொத்த வாக்காளர்களில் 30% பேர் தபால் வாக்காளர்களாக மாற வாய்ப்புகள் இருக்கின்றன'' என்று குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். எனவே, புதிய சட்டதிருத்தங்கள் இரண்டையும் ரத்து செய்ய வேண்டுமென இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Vikatan

மத்திய அரசின் இந்தப் புதிய சட்டத் திருத்தம் குறித்து, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் குழு தலைவரும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவிடம் கருத்து கேட்டபோது,

"வெளிப்படையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடத்த வேண்டும் என்பது ஜனநாயக நாட்டின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று. ஆனால், மத்திய அரசு தற்போது செய்துள்ள திருத்தங்கள் அதற்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. அரசியல் கட்சிகளின் பங்கு இல்லாமல் ஜனநாயகமோ, தேர்தலோ கிடையாது. நாடாளுமன்றம் நடக்காத காலத்தில் பி.ஜே.பி அரசு, மாநில உரிமைமைகளைப் பறிக்கிற சில அவசரச் சட்டங்களை இயற்றிவிட்டு, பின்னர் அவை கூடும்போது இதை நிறைவேற்றாவிட்டால், ஏற்கெனவே நடைமுறைக்கு வந்த பலவற்றை சரிசெய்ய முடியாமல் போய்விடும் என்று சமாதானம் சொல்லுவார்கள். இப்படிப் பல முறை நடந்திருக்கிறது. ஏற்கெனவே தேர்தல் ஆணையம் தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வர முயலும்போது... உதாரணத்துக்கு மின்னணு முறையை அமல்படுத்தும் முன் 'பழைய முறையே இருக்கலாமா?' என்று அனைத்துக் கட்சியினரை பலமுறை அழைத்து ஆலோசனை செய்தார்கள். இதுதான் நடைமுறை. இந்த மாற்றத்தை திடீரென கொண்டுவருவது இந்திய நாட்டின் ஜனநாயகத்தின் உயர்ந்த பண்புகளுக்கு ஆரோக்கியச் சீர்கேடு என்றுதான் நான் சொல்லுவேன்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தில் நேரில் வாக்களிக்க முடியாதவர்களை 'ஆப்சன்டீஸ்' என மாற்றி, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருப்போர் என்கிற லிஸ்டில் சேர்த்து, அனைவருக்கும் தபால் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவோர் யார்? என்பதை அவ்வப்போது தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்து, மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிக்க அனுமதி அளிக்கும் பிரிவில், எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளவர்கள் என்கிற வரையறை குறிப்பிடப்படவில்லை. இன்னொன்று... 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் சீனியர் சிட்டிசன் என்கிற வயது வரம்பை 65 வயதாகத் தற்போது குறைத்திருக்கிறார்கள். இதன்படி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போது, யார் வேண்டுமானாலும் தங்கள் வயதை 65-க்கு மேல் என்று வாய்மொழியாகக் கூறினாலே அதை கிராஸ் செக் செய்யாமல் அதிகாரிகள் பதிவு செய்வார்கள். இது வழக்கமாக நடக்கும் நடைமுறைதானே?

கொரோனா பாசிட்டிவ் சர்டிபிகேட் வைத்திருப்பவர்கள், கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்துக்கு உரியவர்களும் தபால் வாக்கு அளிக்கலாம் என்று புதிய சட்டம் சொல்கிறது. அதன்படி பார்த்தால், வெளிநாடு சென்று திரும்பியவர்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை அரசு சொல்லுகிறபடி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் அனைவருமே தபால் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், பல வருடங்களாக நடைமுறையில் உள்ள சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்தினாலே போதும். புதிய சட்டங்கள் ஏதும் தேவையில்லை. அப்படியே தேவை என்றால், நடுநிலையாக செயல்பட வேண்டிய இந்தியத் தேர்தல் கமிஷன் தரப்பில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் அழைத்து ஆலோசித்து பிறகுதான் முடிவு செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், திடீரென இப்படி அறிவித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது" என்றார்.

கிருஷ்ண மூர்த்தி
கிருஷ்ண மூர்த்தி

இந்திய தேர்தல் கமிஷனின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்...

"யார் யார் வாக்குச்சாவடிக்கு நேரில் போக முடியவில்லையோ... அவர்கள் தபால் ஒட்டு முறையைப் பயன்படுத்தலாம் என்று புதிய சட்டம் சொல்கிறது. இதுவும் விருப்பப்பட்டால்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். யாரையாவது வற்புறுத்தி அவர்களின் கையெழுத்தை வாங்கிவிட வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறார்கள். எல்லா தபால் ஓட்டுகளிலும் அப்படி நடக்க முடியாது. அமெரிக்காவில் தேர்தல் நடந்தால், வெளிநாடுகளில் இருந்து தபால் ஓட்டுகள் போடுகிற சிஸ்டம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், புதிய சட்டத்தைக் கட்டாயம் என்று சொல்லியிருந்தால் அது தவறு. தேவைப்படுகிறவர்கள் அதுவும் 'ஆப்ஷனல்'தான் என்று சொல்வதால் அதில் எந்தத் தவறும் இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு