Published:Updated:

“காஷ்மீர் இனி வளரும்...” “போராட்டங்கள் தொடரும்!” இரு வேறு குரல்கள்

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது உள்ளிட்ட மத்திய பா.ஜ.க அரசின் திடீர் நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக ஆளும் தரப்பினர் பல காரணங்களை அடுக்கிவருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்வோம் ஆகியவை பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கைகளில் நீண்டகாலமாகச் சொல்லப்பட்டும் வாக்குறுதிகள். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை இன்றைக்கு திடீரென ரத்து செய்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. இது, இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பா.ஜ.கவின் மாநிலச்செயலாளர் கே.டி.ராகவனிடம் பேசினோம்...

‘‘பிரிவு 370-ஐ இந்திய அரசியல் சாசனச் சட்ட வரைவின் தலைவராக இருந்த அம்பேத்கரே எதிர்த்தார். அதனால், அரசியல் சாசனச் சட்ட வரைவில், பிரிவு 370-ஐ தாம் எழுத முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். அதனால், அன்றைய பிரதமர் நேருவின் ஆலோசனையின்பேரில் அரசியல் சாசனச் சட்ட வரைவுக் குழுவில் இருந்த கோபால் அய்யங்கார்தான் பிரிவு 370-ஐ எழுதினார்.

பா.ஜ.க-வுக்கு முன்பாக பாரதிய ஜனசங்கம் தோன்றுவதற்கு முதல் காரணமாக இருந்ததே காஷ்மீர் பிரச்னைதான். எங்களுடைய ஜன சங்கத்தின் தலைவராக இருந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்தார். ‘அது இந்தியாவின் ஒரு பகுதி. அதற்கு தனிச் சட்டம் கூடாது’ என்று சொன்னார். நேருவின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி. சிறப்பு அந்தஸ்து கொடுத்ததை எதிர்த்து அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். பிறகு, ஜம்மு காஷ்மீருக்குப் போனார். சிறப்பு அந்தஸ்த்தை எதிர்த்துப்போராட்டம் செய்த அவரைக் கைது செய்தார்கள். சிறையிலேயே அவர் உயிரிழந்தார்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

பிரிவு 370-ஐ நீக்குவது குறித்து இத்தனை ஆண்டுகளாக எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லிக்கொண்டுவந்தோம். இப்போது, அதை நிறைவேற்ற எங்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. எனவே, அதை நிறைவேற்றுகிறோம். நேரு மற்றும் ஷேக் அப்துல்லா ஆகியோரின் தவறான கொள்கை காரணமாகவே சிறப்பு அந்தஸ்து என்று கொண்டுவந்து, இன்றைக்கு அங்கு பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்குப் போய்விட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்கவே முடியாது. காஷ்மீரில் உள்ள ஒரு காஷ்மீரி பெண், இந்தியாவில் பிற பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்தால், அவரின் சொத்துரிமை போய்விடும். பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்த ஐ.கே.குஜ்ரால் இந்தியாவின் பிரதமராக ஆக முடிகிறது. ஆனால், இங்குள்ள ஒருவர் காஷ்மீரில் ஒரு கவுன்சிலராகக் கூட ஆக முடியாது.

தற்போது மத்திய பா.ஜ.க அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் மூலமாக, தமிழ்நாட்டைப்போல இனிமேல் இந்தியாவின் ஓர் அங்கமாக காஷ்மீர் இருக்கும். இங்குள்ளவர்கள் அங்கு நிலம் வாங்கலாம், தொழில் செய்யலாம். அங்குள்ள காஷ்மீரி பெண்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்களைத் திருமணம் செய்துகொண்டால், அவர்கள் சொத்துரிமை இழக்க மாட்டார்கள். இனி, இந்தியாவின் எல்லாச்சட்டங்களும் அங்கு செல்லுபடியாகும். இனிமேல் இரண்டு கொடிகள் இருக்காது. இனி தீவிரவாதத்தை ஒழிக்க முடியும். உச்ச நீதிமன்றத்தின் ஆளுமைக்குள் அது வரும். மத்திய அரசின் கட்டுப்பாடு இருக்கும்.

மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் தற்போது அகதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் இனி அங்கு போவார்கள். எதிர்காலத்தில் ஒரு நல்ல சூழலை இது உருவாக்கும். இனி எல்லோரும் அங்கு போவார்கள். நிலம் வாங்குவார்கள். தொழில் தொடங்குவார்கள். சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும்” என்றார்.

ஜம்மு - காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்திவரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகுவிடம் பேசினோம்...

தியாகு
தியாகு

“ஜம்மு - காஷ்மீர் மக்கள் மீது ஏற்கெனவே ராணுவத்தைக் கொண்டு இந்திய அரசு நடத்திவரும் போரின் ஒரு தொடர்ச்சிதான், தற்போது மத்திய பா.ஜ.க எடுத்துள்ள நடவடிக்கை. முன்பு, ராணுவத்தைக் குவித்து ஆயுதங்களை வைத்து போர் நடத்திவந்தார்கள். இப்போது சட்டத்தை வைத்து அந்த ஒடுக்குமுறையை முழுமையாக்குகிறார்கள். அந்த மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமை அடிப்படையில்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும். காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன, ஆள் கடத்தல் நடக்கிறது, மனிதர்கள் காணாமல் போகிறார்கள், மோதல் கொலைகள் நடந்துள்ளன என்றெல்லாம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து கண்டனங்கள் வந்தன. அதை இந்திய அரசு மதிக்கவே இல்லை.

பிரிவு 370 நீக்கப்பட்டதற்காக பலர் வருந்துகிறார்கள். ஆனால், பிரிவு 370 என்பதே ஒரு வகையில் மோசடியானதுதான். காஷ்மீர் மக்களின் கோரிக்கை பிரிவு 370 அல்ல. 1947 அக்டோபர் 27-ம் தேதிதான் இணைப்பு உடன்படிக்கையில் மன்னர் ஹரிசிங் கையொப்பமிட்டார். இந்திய ராணுவம் வந்தால்தான் அவரைப் பாதுகாக்கவே முடியும் என்கிற சூழல் அன்று இருந்தது. அந்த நேரத்தில், ‘இப்போது இணைந்துகொள்ளவில்லையென்றால், நிரந்தரமாக காஷ்மீர் போய்விடும். எனவே, இந்தியாவுடன் இணைந்தால் உங்களைப் பாதுகாப்போம்’ என்று மன்னர் ஹரிசிங்குக்கு நிபந்தனை போடுகிறார்கள். வல்லபபாய் படேலை நேரு அனுப்பினார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரிடம் வல்லபபாய் படேல் பேசினார். இந்தியாவுடன் இணைய கோல்வால்கர்தான் ஹரிசிங்கை ஒப்புக்கொள்ளவைத்தார்.

‘காஷ்மீர் மக்களின் ஒப்புதல் பெறாமல் இணைப்பை நிரந்தரமாக்க மாட்டோம்’ என்று இந்திய அரசு உறுதிமொழி கொடுத்தது. இதற்கென ஐ.நா-வில் வாக்கெடுப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது. ‘இந்தியாவுடன் இணைய வேண்டுமா, பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா?’ என்பதை காஷ்மீர் மக்களே முடிவுசெய்துகொள்ளட்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், ராணுவத்தைக் கொண்டு போய் அங்கு நிறுத்தினார்கள். இன்றுவரை அதைத் திரும்பப் பெறவில்லை. பாகிஸ்தானும் ராணுவத்தைத் திரும்பப் பெறவில்லை. இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு வாக்கெடுப்பு நடத்தவில்லை.

1954-ல்தான் பிரிவு 370 கொண்டுவரப்பட்டது. அதற்கு ஒரு நோக்கம் இருந்தது. 1947-ல் இணைப்பு நடந்தது. 1950-ல் அரசியலமைப்புச் சட்டம் வந்தது. இந்திய அரசியலமைப்பில் மாநிலங்கள் பட்டியல் உள்ளது. காஷ்மீருடன் ஒரு ஒப்பந்தம் போடுகிறார்கள். ஒரு சமஸ்தானம் நிபந்தனை போட்டு இந்தியாவுடன் இணைந்தது காஷ்மீர் மட்டும்தான். ‘இது நிரந்தரமல்ல. காஷ்மீர் மக்களின் கருத்தறிந்து இறுதி முடிவு செய்யப்படும்’ என்று சொன்னதை இன்றுவரை செய்யவில்லை. பிரிவு 370-ஐ கொண்டுவந்ததன் மூலம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாநிலங்கள் அட்டவணையில் ஜம்மு காஷ்மீரைச் சேர்த்துவிட்டார்கள். இந்தியாவின் ஒரு நிரந்தரப் பகுதியாக காஷ்மீரை மாற்றுவதுதான் பிரிவு 370.

பிற பகுதியினர் அங்கு நிலம் வாங்க முடியாது போன்ற சட்டங்கள் எல்லாம் அங்கு முன்பே இருந்தது. பிரிவு 370 மூலம் அது வரவில்லை. பிரிவு 370 கொண்டுவரப்படுவது ஒரு மோசடி என்றால், இப்போது அதை நீக்குவது இன்னொரு மோசடி. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த மாநிலமும் இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அந்த மக்களைப் பணிய வைக்க முடியாது. சமரசமற்ற போராட்டத்துக்கு அந்த மக்களை இவர்களே தள்ளிவிட்டார்கள். அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள்” என்றார்.

கே.டி.ராகவன் , தியாகு கருத்துகளில் உங்கள் நிலைப்பாட்டை கமென்ட்டில் பதிவு செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு