Published:Updated:

என்.ஆர்.ஐ-களுக்கு பாதகம், குழப்பத்தில் தனிநபர் வரி... பட்ஜெட் 2020 எப்படி?

பட்ஜெட் 2020
பட்ஜெட் 2020

பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் உள்கட்டமைப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டிய நிலையில், ஏற்கெனவே அறிவித்த ரூ.103 லட்சம் கோடித் திட்டத்தை மீண்டும் பேசி என்ன பயன்?

எதிர்வரும் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2003-ம் ஆண்டு ஜஸ்வந்த் சிங்கின் முந்தைய சாதனையான 2 மணி 17 நிமிடங்களை முறியடித்து, 2 மணி 43 நிமிடங்கள் பட்ஜெட் பற்றிய உரையை வாசித்து, புதிய சாதனையைப் படைத்திருக்கிறார். ஆனாலும் நேரமின்மை காரணமாகவோ, வேறு காரணங்களாலோ கடைசி இரண்டு பக்கங்களை படிக்காமலேயே முடித்துக்கொண்டார் நிதியமைச்சர்.

> எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட அல்லது கணிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) அளவு, இந்த 2019-20-ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த சதவிகிதத்தை மதிப்பீட்டு நிறுவனங்களும் பல பொருளாதார வல்லுநர்களும் சமீபகாலமாக கூறிவந்தார்கள். நாட்டின் நிதி நிலை பற்றிய நிதர்சனத்தை அரசாங்கம் ஒப்புக்கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவே இது தெரிகிறது.

> பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் (Disinvestment) மூலமாக 2020-21-ம் நிதியாண்டில் ரூ.2.10 லட்சம் கோடி வருமானத்தைப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.90 ஆயிரம் கோடி திறன் வாய்ந்த நடவடிக்கைகள் (Strategic Investment) மூலம் பெற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிக அதிகமான இலக்கு என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

> '2020-21 நிதியாண்டில் சிறுசேமிப்பு நிதித் தொகுப்பிலிருந்து ரூ.2.4 லட்சம் கோடி பெறப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2019-20-ம் நிதியாண்டில் ரூ.2.1 லட்சம் கோடியாக இருந்தது. இந்தத் தொகை நிதிப் பற்றாக்குறை கணக்கீட்டுக்குள் வராது. இந்தத் தொகையையும் அரசாங்கம் புதிய கடனாக வாங்குவதாகக் கணக்கிட்டால், நிதிப் பற்றாக்குறை அளவு நான்கு சதவிகிதத்தைத் தாண்டும். இப்படி சிறுசேமிப்பு நிதித் தொகுப்பிலிருந்து பெறப்படும் கடன் தொகை, இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் அரசுக்குப் பெரிய சுமையாக மாறும் அபாயமிருக்கிறது.

என்.ஆர்.ஐ-களுக்கு பாதகம், குழப்பத்தில் தனிநபர் வரி... பட்ஜெட் 2020 எப்படி?

> 'ரிசர்வ் வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தொகை ரூ.89,640 கோடியாக இருக்கும்' என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2018-19-ம் (18 ஜூலை முதல் 19 ஜூன் வரை) ஆண்டில் ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடி பெற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது வரும் 2020-21-ம் நிதியாண்டிலும் ரிசர்வ் வங்கியின் லாபத்தை 100% ஈவுத் தொகையாக அரசாங்கம் பெறப் போகிறது என்பதுதான் இதன் மூலம் தெரிய வருகிறது. இப்படி சிறுசேமிப்பு நிதித் தொகுப்பிலிருந்து மறைமுகமாகவும், ரிசர்வ் வங்கியிலிருந்து நேரடியாகவும் தொகையைப் பெற்று நிதிப் பற்றாக்குறை அளவைக் கணக்கிடுவதை வைத்து, மதிப்பீட்டு நிறுவனங்கள் நம் பொருளாதாரத்தை தரமிறக்க வாய்ப்பிருக்கறது என்பதை மறுப்பதற்கில்லை.

> கடந்த ஆண்டு நாடு முழுக்க நல்ல மழை பெய்ததால், விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு 16 அம்சத் திட்டங்களை அறிவித்ததற்காக நிதியமைச்சரைப் பாராட்டலாம். விவசாயத்துறைக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் இலக்கு; விவசாயம் மற்றும் பாசனம் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1.60 லட்சம் கோடி ஒதுக்கீடு; ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட்டத்துக்கு ரூ.1.23 லட்சம் கோடி ஒதுக்கீடு என விவசாயத்துறையின் மீது நன்றாகவே கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனால், இந்த அறிவிப்புகளால் ஏற்படும் பயன்கள் ஏழை விவசாயியையும் சென்றடையுமா?

> தொழில் மற்றும் வர்த்தகத்துறை வளர்ச்சிக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு செய்து, பல திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கலாம். என்றாலும், தற்போது நிலவும் மந்தநிலையைப் போக்க இந்த அறிவிப்புகள் போதுமா... பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் உள்கட்டமைப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டிய நிலையில், ஏற்கெனவே அறிவித்த ரூ.103 லட்சம் கோடித் திட்டத்தை மீண்டும் பேசி என்ன பயன்?

என்.ஆர்.ஐ-களுக்கு பாதகம், குழப்பத்தில் தனிநபர் வரி... பட்ஜெட் 2020 எப்படி?

> பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கும் இந்த பட்ஜெட் மனநிறைவைத் தரவில்லை. பட்ஜெட் தாக்கலான அன்றே சென்செக்ஸும் நிஃப்டியும் சமீபத்தில் இல்லாத அளவுக்கு இறக்கம் கண்டன. தனிநபர் வரிச் சலுகை வரம்பை மாற்றியமைத்ததில் சம்பளதாரர்களுக்கு பெரிய அளவில் நன்மை எதுவும் இல்லை என்பதும் கவலைதரும் விஷயமே.

> வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான குடியுரிமைத் தகுதி அளவுகோலை 182 நாள்களிலிருந்து 240 நாள்களாக மாற்றப்பட்டு இருப்பது என்.ஆர்.ஐ.களுக்குப் பாதகமே. இந்தியக் குடிமகன் ஒருவர் 240 நாள்களுக்குக் குறைவாக வெளிநாட்டில் இருந்தால், அவர் வெளிநாட்டு வருமானத்துக்கும் இந்தியாவில் வரி கட்டியாக வேண்டும்!

> தனிநபர் வருமான வரியைப் பொறுத்தவரை தற்போதுள்ள மூன்றுவித வரிவிதிப்பு அடுக்கை, ஆறு வித வரிவிதிப்பு அடுக்காக மாற்றியுள்ளார் நிதியமைச்சர். இந்தப் புதிய வரி விதிப்பு அடுக்கில் பயன் பெறவேண்டுமென்றால், வருமானம் கழித்தலும், வருமான வரிவிலக்கும் கிடையாது என்று கூறியுள்ளார். எந்த வருமானத்துக்கு கழித்தல் கிடையாது; எந்த வருமானத்துக்கு வரி கிடையாது என்பது இனிமேல்தான் தெளிவாகத் தெரியவரும்.

ஆனால், தனிநபர் ஒருவர் இனிமேல் ஆடிட்டர் ஒருவரின் துணையின்றி வருமான வரித் தாக்கல் செய்வது கடினமாகிவிடும். 'வரி விதிப்பையும், வரித் தாக்கலையும் எளிமைப் படுத்துகிறோம்' என்று கூறிவிட்டு, பலவிதமான வரிவிதிப்பு முறைகளை அமல்படுத்தினால் அது அவர்களை மேலும் குழப்பமடையவே செய்யும். இந்த பட்ஜெட் தனிநபர்களுக்கு சிறிய அளவில் லாபத்தைத் தந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கானத் திட்டங்கள் இன்னும் அதிக அளவில் அறிவித்திருக்கலாம்!

என்.ஆர்.ஐ-களுக்கு பாதகம், குழப்பத்தில் தனிநபர் வரி... பட்ஜெட் 2020 எப்படி?

> "நலிந்துகிடக்கும் தொழில்துறையைத் தூக்கி நிறுத்த மத்திய அரசாங்கத்துக்கு ஏகப்பட்ட பணம் தேவை. அதற்காக அது பல பொதுத்துறை நிறுவனங்களில் அதன் பங்கு மூலதனத்தைக் கணிசமாக விலக்கிவருகிறது. எல்.ஐ.சி என்பது நாட்டின் மிகப் பெரிய ஒரே பொதுத்துறை நிறுவனம். அதன்மீது நல்ல நம்பகத்தன்மையும் இருக்கிறது. 'எல்.ஐ.சி-யின் பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்."

- நாணயம் விகடன் இதழின் பட்ஜெட் அலசல் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் இவை. விரிவான கட்டுரைகளுக்கு...

> எதிர்பார்ப்பை நிறைவேற்றினாரா நிதி அமைச்சர்? https://www.vikatan.com/government-and-politics/budget/finance-minister-fulfill-the-expectation-in-budget

> வரி விகித மாற்றம்... என்ன லாபம்? https://www.vikatan.com/government-and-politics/budget/tax-rate-change-whats-the-profit

> ஷேர்லக் : பட்ஜெட் 2020 பங்குச் சந்தைக்கு ஏமாற்றம்! https://www.vikatan.com/news/share-market/shareluck-share-market-25

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு