Published:Updated:

நீதிமன்ற உத்தரவை மீற அவசரச் சட்டம்... உத்தரப்பிரதேச அரசின் புது டெக்னிக்!

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச அரசு சர்ச்சைக்குரிய புதிய அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியிருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மூன்று மாதங்களைக் கடந்தும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியிலும் உத்தரப்பிரதேசத்திலும் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களில் வன்முறைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரின் சொத்துகள் சேதத்திற்குள்ளாகின. இந்தப் போராட்டங்களைக் காவல்துறை கையாண்ட விதம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

நீதிமன்ற உத்தரவை மீற அவசரச் சட்டம்... உத்தரப்பிரதேச அரசின் புது டெக்னிக்!

உத்தரப் பிரதேச காவல்துறை மீது தொடர் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதிக அளவின காவல்துறை என்கவுன்டர்கள் நடந்துள்ளதும் உத்தரப்பிரதேசத்தில்தான். போராட்டங்களின்போது பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்குப் பல இஸ்லாமிய அமைப்புகள், சிவில் அமைப்புகள், பொது மக்களிடம் உத்தரப்பிரதேச அரசு இழப்பீடு பெறுவதற்கு நோட்டீஸ் அனுப்பி வசூல் செய்தது. இது கடும் கண்டனத்திற்குள்ளானது. பல்வேறு சந்தர்ப்பங்களில் நீதிமன்றம் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தியது.

சில நாள்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச நிர்வாகம் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்காக இழப்பீடு வசூலிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் தகவல்களை பேனராக அடித்து ஒட்டியது. அதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களின் பெயர், புகைப்படம், முகவரி மற்றும் இழப்பீட்டிற்கான தொகை ஆகியவை இடம்பெற்றிருந்தன. இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் குற்றம்சுமத்தப்பட்டவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவது சட்டவிரோதமானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

பேனர்
பேனர்

இதை அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. உ.பி அரசின் இத்தகைய நடவடிக்கை சட்டத்துக்குப் புறம்பானது என்று கண்டித்த நீதிமன்றம் பேனர்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உ.பி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை மற்றுமொரு அமர்வுக்கு மாற்றியது. மேலும் இதுபோன்று பேனர் அடித்து ஒட்டுவதற்கு எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை என்று கருத்து தெரிவித்தது. பேனரை அகற்ற உயர்நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு மார்ச் 16-ம் தேதியுடன் முடிவடைந்தது.

`சின்மயானந்த் மற்றும் செங்காரிடம் பெண்கள் கவனத்துடன் இருங்கள்' - உ.பி-யில் உச்சம் தொட்ட பேனர் வார்!

இந்த நிலையில் தற்போது உ.பி அரசு புதிய அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. வன்முறையின்போது பாதிப்புக்குள்ளாகிற பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கான இழப்பீடு பெறுவதற்கான அவசரச் சட்டமே அது. இந்தச் சட்டத்திற்குத் தற்போது உ.பி ஆளுநர் ஒப்புதல் அளித்து நடைமுறைக்கும் வந்துள்ளது. பேனர் அடித்து ஒட்டிய தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதே உ.பி அரசு அவசரமாக இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளது.

அந்தச் சட்டத்தின் மூலம், ‘கலவரங்களின்போது ஏற்படுகிற பாதிப்புகளைத் தீர்மானித்து, இழப்பீடு வழங்குவதற்கான தீர்ப்பாயங்களை அமைப்பதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பாயங்களில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி நியமிக்கப்படலாம். காவல்துறைப் பதிவு செய்கிற எஃப்.ஐ.ஆர் மூலம் இந்தக் குற்றங்கள் விசாரிக்கப்படும்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

குற்றம்சுமத்தப்பட்டவர் விசாரணையின் போது ஆஜராக முடியவில்லையென்றாலும் தீர்ப்பாயம் விசாரணையைத் தொடரலாம். குற்றம் சுமத்தப்பட்டவரை விசாரிக்காமலே தீர்ப்பு வழங்கலாம். முக்கியமாக தீர்ப்பாயத்தின் முடிவுகளை வேறு எந்த நீதிமன்றத்திலும் முறையிட முடியாது என்றும் அந்த அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு இழப்பீடு கோரி நோட்டிஸ் அனுப்பப்படுபவர்களின் தகவல்களை வெளியிடும் அதிகாரத்தையும் அரசுக்கு வழங்குகிறது.

இந்தக் குறிப்பிட்ட பிரிவுதான் பேனர் ஒட்டிய செயலை செல்லுபடியாக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ள சமயத்திலே உ.பி அரசு இந்த அவசரச் சட்டத்தை அவசர கதியில் இயற்றியுள்ளது.

''பேனர் ஒட்டுவதற்கு அனுமதிக்கும் எந்தச் சட்டமும் இல்லை என்கிற போதாமையை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதனால்தான் இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது''என உ.பி அமைச்சர் சுரேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு