Published:Updated:

இடிந்து விழும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் - விரைவாகப் புதிய கட்டடம் அமைக்கக் கோரிக்கை!

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
News
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

ஆரம்ப சுகாதார நிலையத்தின் குறிப்பிட்ட அந்த கட்டடத்துக்கு பதில் கிராம சேவை மையத்துக்கு தற்காலிகமாக மாற்ற தஞ்சாவூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் அருகிலிருக்கும் வாண்டையார் இருப்பு கிராமத்தில் செயல்பட்டுவருகிறது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். 2000-ல் கட்டப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் சில வருடங்களாகவே சிதிலமடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. குறிப்பாக மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டடச் சுவரில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையிலிருந்தது. சிறிது நேரம் மழை பெய்தலாலே நீர் ஒழுகத் தொடங்கிவிடும் அளவுக்கு அந்தக் கட்டடம் மிகவும் மோசமான நிலையிலிருக்கிறது.

சிதிலமடைந்த கட்டடம்
சிதிலமடைந்த கட்டடம்

அதனால், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவருமே மிகுந்த அச்சத்துடனேயே பணி செய்துவந்தனர். மேலும் கட்டடத்தின் நிலை குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்துக்கும் தெரியப்படுத்தி, புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திவந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், தற்போது பெய்துவரும் தொடர்மழையால் கட்டடத்தின் மேல்பகுதியிலிருந்து நீர் ஒழுகிக்கொண்டிருக்கிறது. அதனால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள், பணிபுரியும் மருத்துவர்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக, துணை இயக்குநர் அலுவலகத்துக்கு மீண்டும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவத்துறை அதிகாரிகள் வாண்டையார் இருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுசெய்தனர். அதில், கட்டடம் மிக மோசமான நிலையில், பயன்பாட்டுக்கு உகந்தது இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்ட கல்வெட்டு
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்ட கல்வெட்டு

அதைத் தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தைக் குறிப்பிட்ட அந்தக் கட்டடத்துக்கு பதில் கிராம சேவை மையத்தில் தற்காலிகமாக மாற்ற தஞ்சாவூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் உத்தரவிட்டார். அதையடுத்து, மருந்து உள்ளிட்ட சில உபகரணங்கள் மட்டும் கிராம சேவை மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நோயாளிகளுக்கு அங்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. கிராம சேவை மையத்தில் சுகாதார நிலையம் இயங்குவதைக் குறிப்பிடும்விதமாக, சிறிய அளவிலான விளம்பரப் பலகையும் அங்கு எழுதிவைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாவட்டத்தில் வாண்டையார் இருப்பு கிராமத்தைப்போலவே, இன்னும் ஏராளமான கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். ``வாண்டையார் இருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டு இருபது வருடங்கள் ஆகிவிட்டதால் பயன்படுத்த முடியாத வகையில் சிதிலமடைந்திருந்தது. அதைப் பார்வையிட்ட அதிகாரிகள் தற்காலிகமாக கிராம சேவை மையத்தில் செயல்படுத்த ஏற்பாடு செய்தனர். இதனால் மருத்துவ ஊழியர்களும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

வெடிப்பு ஏற்பட்டிருக்கும் சுவர்
வெடிப்பு ஏற்பட்டிருக்கும் சுவர்

குறிப்பாக, கிராம சேவை மையத்தில் போதுமான கழிப்பறை வசதி இல்லை. கிராமப்புறப் பகுதி என்பதால் ஏராளமான பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதிகள் எதுவும் இல்லை. மருத்துவச் சிகிச்சைக்குரிய உபகரணங்களை வைத்துக்கொள்வதற்கும் போதுமான இட வசதியில்லை என மருத்துவர்கள் புலம்புகின்றனர்.

எனவே, அதிகாரிகள் விரைவாக அனைத்து வசதிகளுடன்கூடிய புதிய கட்டடத்தைக் கட்டித் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டுவருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 76 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டுவருகிறது. அதில் பெரும்பாலான கட்டடங்கள் மோசமாகவே காணப்படுகின்றன" என்றனர்.

சிதிலமடைந்த கட்டடம்
சிதிலமடைந்த கட்டடம்

இது குறித்து தஞ்சாவூர் சுகாதரப் பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது, ``கட்டடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், தற்காலிக இடத்தில் வாண்டையார் இருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டுவருகிறது. குறிப்பிட்ட அந்தக் கட்டடத்தைப் பராமரிக்கவும், புதிய கட்டடம் கட்டுவதற்கும் நிதி கேட்கப்பட்டிருக்கிறது. மேலும் இதேபோல மோசமான நிலையிலிருக்கும் பழைய கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டுவருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கட்டடமாக இருந்தால் அதைப் பராமரித்து புதுப்பிக்கவும், 20 வருடங்களுக்கு மேல் ஆன கட்டடங்களாக இருந்தால் புதிய கட்டடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம்" என்றார்.