தமிழகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்தே, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளை மும்முரமாகச் செய்துவருகின்றன. நாளை முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டதைத் தொடர்ந்து, தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்படுவதாக மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர், புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மாவட்டப் பொறுப்பாளர்களே முடிவு செய்வார்கள் என்றும், தேர்தலில் போட்டியிடும் மக்கள் இயக்கத்தினர் இயக்கத்தின் கொடியையும், விஜய்யின் படங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கிறார். முன்னதாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றிபெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
