Published:Updated:

சி.பி.ஐ-யில் சிக்கிய ப.சிதம்பரமும்... விட்டுவைக்கப்பட்டிருக்கும் விஜயபாஸ்கரும்!

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

15 ஆண்டுகளுக்கு முன்பு நிதித்துறைக்காக ப.சிதம்பரம் ஆடிய பரமபதம்தான், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அவரைப் பதம் பார்க்க வைத்திருக்கிறது.

ப.சிதம்பரம், விஜயபாஸ்கர்
ப.சிதம்பரம், விஜயபாஸ்கர் ( விகடன் )

ப.சிதம்பரம் கைதுக்குச் சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் இது.

2004 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2004 மே 22-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். அவருடன் தி.மு.க அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, பழனிமாணிக்கம் உள்ளிட்ட ஏழு பேர் மத்திய அமைச்சர்கள் ஆனார்கள். அப்போது யார் யாருக்கு என்னென்ன துறைகள் என அறிவிக்கப்படவில்லை. அடுத்த நாள் இரவில்தான் அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியாகின. உடனே அறிவாலயம் அலறியது. கருணாநிதியின் காரசார அறிக்கை 2004 மே 23-ம் தேதி தி.மு.க தலைமை அலுவலகத்தில் இருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு ஃபேக்ஸ் மூலம் பறந்தன.

கருணாநிதியுடன் ப.சிதம்பரம்
கருணாநிதியுடன் ப.சிதம்பரம்
விகடன்

அந்த அறிக்கையில் தி.மு.க அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்பட்டதாக அதிருப்தி தெரிவித்தார் கருணாநிதி. இதனால், தி.மு.க அமைச்சர்கள் பொறுப்பேற்கவில்லை. 'டி.ஆர்.பாலுவுக்கு நெடுஞ்சாலைத் துறையோடு கப்பல் போக்குவரத்துத் துறையும் ஒதுக்கப்படும்' என வாக்குறுதி அளித்திருந்தது காங்கிரஸ். இதேபோல தி.மு.க இணை அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு நிதித்துறைக்குப் பதிலாக வர்த்தகத்துறை ஒதுக்கப்பட்டதையும் தி.மு.க ஏற்கவில்லை. 'தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படுவதாகக் காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன ரெட்டி அளித்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை. இந்தக் குதர்க்கத்துக்கு யார் காரணகர்த்தா என்பது தெரிந்து, இந்தப் பிழை திருத்தப்படும் வரை தி.மு.க அமைச்சர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்' என அறிக்கையில் சொல்லியிருந்தார் கருணாநிதி.

தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் நிதித்துறை கேபினட் அமைச்சராகவும், மணிசங்கர் அய்யர் பெட்ரோலியத்துறை கேபினட் அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டார்கள். நிதித்துறையின் கீழுள்ள வருவாய்த்துறையைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேரிடம் தரக்கூடாது. அதாவது, பழனிமாணிக்கத்துக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காக, இலாகா ஒதுக்கீட்டில் சிலர் விளையாடிவிட்டார்கள் எனச் சர்ச்சை எழுந்தது.

மன்மோகன் சிங்குடன் கருணாநிதி
மன்மோகன் சிங்குடன் கருணாநிதி
விகடன்

அடுத்த நாள் இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட கருணாநிதி, "இலாகா ஒதுக்கீடு பற்றி எட்டு நாள்கள் டெல்லியிலேயே தங்கிப் பேசி, விவாதித்து எடுக்கப்பட்ட முடிவை, சில பேர் மாற்றியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சோனியா காந்தியையும் பிரதமரையும் சுற்றியிருப்பது நல்லதல்ல. இருவரையும் அந்தக் கும்பலிடமிருந்து காப்பாற்ற வேண்டும்'' என்றார். "கும்பல் யார்?'' எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, "அது ரகசியம்'' என்றார். உடனே பத்திரிகையாளர்கள், "அதென்ன சிதம்பர ரகசியமா?'' எனக் கொக்கிபோட்டார்கள். "சிதம்பர ரகசியமோ, மாயவரம் ரகசியமோ எனக்குத் தெரியாது'' எனச் சொல்லி ப.சிதம்பரத்தைச் சீனுக்குக் கொண்டுவந்தார் கருணாநிதி.

2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புவரையில் த.மா.கா ஜனநாயகப் பேரவை என்கிற கட்சியை நடத்திக்கொண்டிருந்தார் ப.சிதம்பரம். தேர்தல் சமயத்தில் காங்கிரஸில் சேர்ந்து வேட்பாளராகி, வெற்றிபெற்று, மந்திரியும் ஆனார். நிதித்துறையை மன்மோகன் சிங் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, சோனியாவிடம் முறையிட்டு, அந்தத் துறையைக் கேட்டு வாங்கினார் ப.சிதம்பரம். அந்தத் துறையின்கீழ் வரும் வருவாய்த்துறை தி.மு.க அமைச்சருக்குப் போய்ச் சேர்ந்தால் தனது துறைக்குச் சிக்கல் ஏற்படும் என நினைத்தார் ப.சிதம்பரம். அதனால்தான் பழனிமாணிக்கத்துக்கு நிதித்துறைக்குப் பதிலாக வர்த்தகத் துறையைத் தள்ளிவிட்டார்கள். இந்தக் கோபத்தைதான், "சிதம்பர ரகசியமா என எனக்குத் தெரியாது'' என மறைமுகமாக ப.சிதம்பரத்தைச் சாடினார் கருணாநிதி. கடைசியில் ஒருவழியாக இலாகா பிரச்னை முடிவுக்கு வந்தது.

கருணாநிதியும் சிதம்பரமும்
கருணாநிதியும் சிதம்பரமும்
விகடன்

15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிதித்துறைக்காக ப.சிதம்பரம் ஆடிய பரமபதம்தான், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அவரைப் பதம்பார்க்க வைத்திருக்கிறது. நிதித்துறையை ப.சிதம்பரம் போராடிப் பெற்றது 2004-ல். ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் புகார் எழுந்தது 2007-ல்.

மும்பையைச் சேர்ந்த மீடியா நிறுவனமான ஐ.என்.எக்ஸ் வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (FIPB) விதிமுறைகளை மீறி, 305 கோடி ரூபாய்க்கும் மேலாக வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றதாகக் குற்றச்சாட்டுக் கிளம்பியது. அதுபற்றி ஐ.என்.எக்ஸ் மீடியாவிடம் எஃப்.ஐ.பி.பி விளக்கம் கேட்டது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தைத் தொடர்புகொண்டு ஐ.என்.எக்ஸ் உதவி கோரியது. கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்குச் சில ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் உதவியோடு, ஐ.என்.எக்ஸ் மீடியாவை அந்த விவகாரத்திலிருந்து காப்பாற்றினார்.

மன்மோகன் சிங்குடன் ப.சிதம்பரம்
மன்மோகன் சிங்குடன் ப.சிதம்பரம்
விகடன்

அதற்காக, கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான ‘அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக்’ நிறுவனம் பெரும் தொகையை ஆலோசனைக் கட்டணமாகப் பெற்றது. இந்த விவகாரத்தைக் கண்டுபிடித்த சி.பி.ஐ, கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியது. வழக்கும் பதிவுசெய்தது. பணப் பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ-யும் வழக்கு பதிவு செய்தன. ஐ.என்.எக்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜியிடம், சி.பி.ஐ. விசாரணை நடத்தியபோது அவர் அப்ரூவராக மாறினார். அது, ப.சிதம்பரத்தின் கைதில் முடிந்திருக்கிறது.

தாம் உள்துறை அமைச்சராக இருந்தபோது திறந்துவைக்கப்பட்ட சி.பி.ஐ தலைமை அலுவலகத்திலேயே ப.சிதம்பரம் சிறை வைக்கப்பட்டார். 2011 ஏப்ரல் 30-ம் தேதி டெல்லியில் புதிதாக சி.பி.ஐ தலைமை அலுவலகத்தைப் பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அந்த விழாவில், மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி, கபில் சிபல் ஆகியோருடன் சிதம்பரமும் கலந்துகொண்டார். அன்றைக்குத் துறையின் அமைச்சராகக் கெளரவிக்கப்பட்ட சிதம்பரம், இன்றைக்கு அதே கட்டடத்தில் விசாரணைக்காக லாக்கப் எண் 3-ல் அடைக்கப்பட்டார்.

சி.பி.ஐ. அலுவலக திறப்பு விழாவில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில் சிபில்
சி.பி.ஐ. அலுவலக திறப்பு விழாவில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில் சிபில்

"பணமதிப்பு நீக்கம், கோமாளித்தனமான ஜி.எஸ்.டி சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவந்த திரு. மோடி அவர்களே, உங்கள் மடியில் இன்னும் உள்ள ஆயுதங்கள் என்னவோ?" என ட்விட்டரில் முன்பு கேள்வி எழுப்பியிருந்தார் ப.சிதம்பரம். ''அந்த ஆயுதங்கள் இப்போது வெளியே வந்திருக்கின்றன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் கூட்டணி நடத்திய அரசியல் சதுரங்கம்தான் சிதம்பரம் கைதுக்குக் காரணம்'' என்கிறார்கள் உள் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகள்.

சிதம்பரம் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிடுவார் என்பதுபோல் லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பதும், இரண்டு மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் ஒட்டுவதும், சுவர் ஏறிக் குதிப்பதும் சி.பி-ஐ-யின் நியாயமான நடவடிக்கையாகத் தெரியவில்லை. 1,000 கோடிகளில் மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டு ஓடிய பொருளாதாரக் குற்றவாளிகள் லலித் மோடி, விஜய் மல்லய்யா, நிரவ் மோடியிடம் காட்டாத வீரத்தைச் சிதம்பரத்திடம் மட்டும் காட்டியிருக்கிறது சி.பி.ஐ. தமிழகத்தின் 40 கோடி குட்கா வழக்கையும் சி.பி.ஐ-தான் விசாரித்துக்கொண்டிருக்கிறது.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்
விகடன்

"குட்கா விற்பனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கினார். அவர்மீது நடவடிக்கை எடுங்கள்" எனத் தலைமைச் செயலாளருக்கும் டி.ஜி.பி-க்கும் கடிதம் எழுதியது வருமானவரித் துறை. விசாரணைக்கு எல்லாம் ஆஜரான விஜயபாஸ்கர் விட்டு வைக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரம் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சொன்ன வார்த்தைகள் இப்போது உயிர் பெற்றிருக்கின்றன. சி.பி.ஐ அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், ''யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் சி.பி.ஐ செயல்பட வேண்டும். முக்கிய வழக்குகளைக் கையாள்வது சி.பி.ஐ அதிகாரிகளுக்குப் பரிசோதனை போன்றது.

`தயவுசெய்து திகாருக்கு அனுப்பிவிடாதீர்கள்’ - உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு வாதம்

சட்டத்தை மீறுபவர்கள், எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் ஊழல் புரிந்தவர்களாக இருந்தால், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ தயங்கக் கூடாது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். தங்கள் பணிகளில் எந்தக் குறுக்கீடு வந்தாலும் அதற்கு சிபிஐ அதிகாரிகள் பயப்படக் கூடாது. நடுநிலை தவறக் கூடாது'' என்றார்.