Published:Updated:

விகடன் நிருபர்கள் மீது வழக்கு... கருத்தைக் கேட்டால் கழுத்தை நெரிக்கும் தமிழக அரசு!

விகடன் நிருபர்கள் மீது வழக்கு
விகடன் நிருபர்கள் மீது வழக்கு

மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிவது அந்த அளவுக்குக் கடுமையான குற்றமா என்பது தமிழகக் காவல்துறைக்கே வெளிச்சம்.

இந்தியக் குடியுரிமை விஷயம் தொடர்பாக இலங்கைத் தமிழ் அகதிகளின் கருத்து என்ன என்பதற்காக ஜூனியர் விகடன் கருத்துக்கேட்பு நடத்தியது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், களியக்காவிளை ஆகிய ஊர்க் காவல் நிலையங்களில் ஜூனியர் விகடன் நிருபர்கள் மீது வழக்குகளைப் பாய்ச்சி அதிர வைத்துள்ளது தமிழக அரசு.

``இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும். அவர்கள் யாரும் தம் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை’’- வைகோ, திருமாவளவன் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் இப்படி முழங்குகிறார்கள்.

``இலங்கை அகதிகள், இலங்கைக்குத் திரும்பிச் செல்லத்தான் விரும்புகிறார்கள்‘’ - இது பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசனின் வாதம்.

இதற்கு நடுவே, ``இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதுதான் சரியான தீர்வு'' என்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சரி, சம்பந்தப்பட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகத்தான் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. சுமார் 37 முகாம்களைச் சேர்ந்த அகதிகளை சந்தித்துக் கருத்துக்கேட்பு படிவத்தை அளித்து பதில்களைப் பெற்றோம். இந்தியாவிலேயே இருக்க விருப்பமா, இலங்கைக்குச் செல்லவிருப்பமா, இரட்டைக் குடியுரிமை பற்றி உங்களின் பதில் என்ன என்பது போன்ற கேள்விகளே அதில் இடம்பெற்றிருந்தன.

விகடன் நிருபர்கள் மீது வழக்கு...  கருத்தைக் கேட்டால் கழுத்தை நெரிக்கும் தமிழக அரசு!

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று (27/12/2019) போலீஸ் தரப்பு பரபரப்பாகிவிட்டது. இப்படி கருத்துக்கேட்பு நடத்தியவர்கள் மீது வழக்குப் பதியவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதாக முதலில் செய்தியைக் கசியவிட்டனர். எதுவாக இருந்தாலும் எதிர்கொண்டே ஆகவேண்டும் என்கிற சூழலில், அடுத்த கட்டத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தோம். அன்றைய தினமே, கன்னியாகுமரி மாவட்ட நிருபர் சிந்து மற்றும் புகைப்படக்காரர் ராம்குமார் ஆகியோர் மீது மூன்றுபிரிவுகளின் கீழ் மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன.

பிரிவு 447- குற்றமுறு அத்துமீறி நுழைதல் (குற்றம்புரியும் நோக்கத்துடன் அத்துமீறி நுழைதல்); பிரிவு -188 அரசாங்க அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் இருத்தல். அதன் காரணமாக மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துதல்; பிரிவு-505 (1) பி மக்களிடம் பயம் அல்லது பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராகக் குற்றம் புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல், பிரசுரங்களை விநியோகித்தல் ஆகியவைதான் அந்தப் பிரிவுகள்.

இதில் பிரிவு-505 (1) பி, என்பது பிணையில் விடமுடியாத சட்டப்பிரிவாகும்.

மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிவது அந்த அளவுக்குக் கடுமையான குற்றமா என்பது தமிழகக் காவல்துறைக்கே வெளிச்சம். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்கள் அவ்வப்போது நடப்பது வழக்கமே. அதையெல்லாம் மிஞ்சும் வகையில் மக்களின் கருத்துகளைக் கேட்டறியக்கூடாது என்கிற அளவுக்குத் தமிழக அரசு இந்த விஷயத்தில் கெடுபிடி காட்டுவது பெரும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

இந்த வழக்கை சட்டப்படியாக எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தையும் தாண்டி பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரசின் இந்த அடாவடி நடவடிக்கைகளுக்காக கண்டனக் குரல்கள் பாய ஆரம்பித்துள்ளன. பத்திரிகையாளர் சங்கங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

கடந்த காலங்களில் ஜூனியர் விகடன் உட்பட விகடன் குழும இதழ்களுக்காகப் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கருத்துக்கேட்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விகடன் இணையதளம் மூலமாக அடிக்கடி இத்தகைய கருத்துக்கேட்பு நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

உதாரணமாக, `பணத்தட்டுப்பாடு எப்படியிருக்கிறது?’, விஜயகாந்த்தின் செல்வாக்கு, தமிழகத்தின் சட்டம்&ஒழுங்கு நிலை, அடுத்த தமிழக முதல்வர் யார்?, பணமதிப்பிழப்பு ஏற்படுத்திய பாதிப்பு என்ன?, தங்கம் விலையேற்றம், எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விகடன் சார்பில் மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது. பொதுநலன் கருதி நடத்தப்பட்ட கருத்துக்கேட்புகள்தான் அனைத்துமே. இதில் கிடைத்த முடிவுகள், மக்களின் எதிர்கால வளர்ச்சிக்கும், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒரு தெளிவையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில்தான் ஈழத் தமிழ் அகதிகளின் மனநிலையை இந்திய மக்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்தில்தான் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது.

கருத்துக்கேட்புக்குப் பயன்படுத்தப்பட்ட படிவம் இங்கே இடம்பெற்றுள்ளது. இதில் பங்கேற்றவர்களின் விருப்பங்கள், முடிவுகள் உள்ளிட்ட தகவல்களைத் தொகுக்கும் பணியில் ஜூனியர் விகடன் குழு ஈடுபட்டுள்ளது. அதன் விவரங்கள், வரும் புதன்கிழமையன்று (01/01/2020) வெளியாகும் ஜூனியர் விகடன் இதழில் வெளியாகும்.

அடுத்த கட்டுரைக்கு