Published:Updated:

``அரசாங்கத்தின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்!’’ - அரசு மருத்துவர்கள் தீர்க்கம்

`ஒரு அமைச்சராக அவர் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் சுகாதாரத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை நாங்கள் வெளியிட வேண்டிய சூழல் வரும்.’

Protest
Protest

``அமைச்சர் விஜயபாஸ்கரின் மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. வேண்டுமென்றே பணிமாற்றம் செய்வது, வேலையை விட்டு தூக்கிவிடுவோம் என மிரட்டுவது, வீட்டுக்குப் போலீஸை அனுப்புவது போன்ற வேலைகளை எல்லாம், அவர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்'' எனக் கடந்த ஒரு வாரகாலமாக, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், போராடிவரும் அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Vijaya baskar
Vijaya baskar

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒருவார காலமாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். வெறும் உள்ளிருப்புப் போராட்டமாக ஆரம்பித்த மருத்துவர்களின் போராட்டம் அரசு கண்டுகொள்ளாததையொட்டி, உண்ணாவிரதப் போராட்டமாக மாறியது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் எட்டு மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் செய்து வருகின்றனர்.

மருத்துவர்களை அச்சுறுத்தி அவர்களின் போராட்டத்தை முடக்க நினைப்பது, எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைப் போலாகும். தமிழக அரசு இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளக் கூடாது. மருத்துவர்களின் கோரிக்கைகளை கனிவோடு ஏற்கவேண்டும்.
கி.வீரமணி.

மருத்துவர்களின் இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.

நேற்று போராட்டக்காரர்களின் ஒரு சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். பின்னர், மருத்துவர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ``அமைச்சருக்கு ஆதரவான மருத்துவர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எங்களின் கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை'' என்று கூறி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ``மாலைக்குள் பணிக்குத் திரும்பாத மருத்துவர்கள் வேலை இழந்ததாக அறிவிக்கப்படுவார்கள்'' என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்தார்.

Stalin
Stalin

அமைச்சரின் எச்சரிக்கைக்குப் பிறகும் மருத்துவர்கள் பின்வாங்கவில்லை. இந்தநிலையில் இன்று, போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களை, திராவிடர் கழக தலைவர் வீரமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் என்று பலரும் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இரண்டாவது முறையாக இன்றும் போரட்டக் களத்துக்கு வந்து மருத்துவர்களைச் சந்தித்தார். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜின் பேராசிரியர்கள் இன்று போராட்டக் களத்துக்கு வந்து தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர். நாளுக்கு நாள் மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

அம்மாவின் பேரைச் சொல்லி ஆட்சி செய்பவர்கள் அம்மா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
வெற்றிவேல், அ.ம.மு.க

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பலருக்கும் பணி மாறுதல் ஆணை அனுப்பப்பட்டுள்ளது. இது போராடிவரும் மருத்துவர்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. மேலும், போராடிவரும் மருத்துவர்களின் வீட்டுக்குக் காவல்துறையினரை அனுப்பி அச்சுறுத்துவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

Seeman
Seeman

இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த மருத்துவர் லக்ஷ்மி நரசிம்மன் பேசுகையில், ''எங்களின் கோரிக்கை மிக நியாயமானது. நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையைத்தான் நாங்கள் நிறைவேற்றச் சொல்கிறோம். சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட எங்கள் உரிமைகளுக்காகத்தான் போராடிவருகிறோம். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கள் போராட்ட நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறார். பல மருத்துவர்களுக்குப் பணி மாறுதல் ஆணை அனுப்பப்பட்டுள்ளது. எங்களின் வீட்டுக்குக் காவல்துறையினரை அனுப்பி அச்சுறுத்தி வருகிறார்கள்.

மருத்துவர்களின் போராட்டம் நியாயமானது. அதை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்
சீமான்

நாங்கள் சட்டத்துக்குட்பட்டுதான் போராடிவருகிறோம். எங்களை ஏன் அச்சுறுத்தவேண்டும். பேச்சுரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று. காந்தியும், நேருவும், பகத்சிங்கும் போராடிப் பெற்றுத்தந்த சுதந்திரத்தை, அமைச்சர் விஜயபாஸ்கர் காவல்துறையின் மூலமாகப் பறிக்கப் பார்க்கிறார். முதல்வரை தவறாக வழி நடத்துவதும் அமைச்சர் விஜயபாஸ்கர்தான்.

அமைச்சர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளவேண்டும். தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் மருத்துவர்களும் அவரைவிட பொறுப்பானவர்களாகத்தான் இருக்கிறோம். ஒரு அமைச்சராக அவர் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் சுகாதாரத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை நாங்கள் வெளியிட வேண்டிய சூழல் வரும்.

Thirumavalavan - veeramani
Thirumavalavan - veeramani

அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சைக் கேட்காமல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்'' என ஆவேசமாகப் பேசி முடித்தார். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மற்ற மருத்துவர்கள் அவரின் பேச்சை ஆமோதிக்கும் விதமாக கரவொலி எழுப்பி, உற்சாகப்படுத்தினர். 

இந்தநிலையில், போராடிவரும் ''மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பணி மாற்று ஆணையை எங்கள் கல்லூரியில் அமல்படுத்த முடியாது'' என விழுப்புரம் மருத்துவக் கல்லூரியின் டீன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் போராட்டத்துக்கு, மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களின்ஆதரவு இருந்துவந்த நிலையில்  தற்போது மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் ஆதரவும் கிடைத்திருப்பது போராடிவரும் மருத்துவர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Vijaya baskar press meet
Vijaya baskar press meet

இந்தநிலையில் சற்று முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், '' 2,160 மருத்துவர்கள் பணிக்குத் திரும்பிவிட்டார்கள். 2,523 மருத்துவர்கள் மட்டுமே போராடி வருகிறார்கள். அவர்களும் நாளை காலைக்குள் பணிக்குத் திரும்பவேண்டும். தொடர்ந்து போராடினால் அவர்களின் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக அறிவித்து வேறு மருத்துவர்களை பணியில் அமர்த்துவோம். அதற்கான வேலைகளும் ஒருபுறம் நடந்து வருகிறது''என எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், ''எத்தனை அச்சுறுத்தல் வந்தாலும், எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என உரத்த குரலில் முழங்குகிறார்கள் மருத்துவர்கள்.

`அங்கு ரூ.30,000 சம்பளம்; இங்கு ரூ.80,000..!'-மருத்துவர்களுக்கு இறுதி எச்சரிக்கைவிடுத்த விஜயபாஸ்கர்