Published:Updated:

பொது சிவில் சட்டம் வரவாய்ப்புண்டா... வந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?

ஒருவேளை, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டால் ஏற்கெனவே உள்ள தனிச்சட்டங்களில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்...

முத்தலாக் ரத்து, என்.ஐ.ஏ சட்டத்திருத்த மசோதா, காஷ்மீர் பிரிப்பு என அடுத்தடுத்து பி.ஜே.பி அரசின் அதிரடிகள் தொடர்ந்துவரும் நிலையில், ‘இவையனைத்தும் ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாதான். இந்த வகையில் அடுத்ததாக பி.ஜே.பி அரசு கொண்டுவரப்போவது பொது சிவில் சட்டம்தான்!’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். அதற்கான வாய்ப்புகளும் அறிகுறிகளும் நிறையவே தென்படுகின்றன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில், பல்வேறு மதங்களுக்குமான சிவில் சட்டங்கள் இருப்பதை மாற்றியமைத்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அப்படிக் கொண்டுவந்தால், சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழுமென்ற எதிர்பார்ப்பும் கூடவே எழுந்திருக்கிறது.

அதென்ன பொது சிவில் சட்டம்?

சுதந்திர இந்தியாவில் பெரிதும் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் நிச்சயம் பொது சிவில் சட்டத்திற்கு (Uniform Civil Code) ஒரு முக்கியமான இடமுண்டு. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழத்தொடங்கியுள்ளன. தனிப்பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் எதுவும் சாத்தியமே என்றே நினைக்கிறது பி.ஜே.பி அரசு. ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் சொன்ன விஷயங்களைத்தான் செயல்படுத்தி வருகிறது. பொது சிவில் சட்டமும் அதில் ஒன்றுதான். ஒருவேளை, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டால் ஏற்கெனவே உள்ள தனிச்சட்டங்களில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்...

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளின்கீழ் உள்ள 44-வது பிரிவு ``இந்தியா முழுமைக்கும் குடிமக்களுக்கு ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்” என்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவில் விவகாரங்களுக்குப் பொதுவான சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கைகளும் அரசியல் நிர்ணயசபை விவாதங்களில் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அதேஅளவிற்கு அதற்கான எதிர்ப்புகளும் இருக்கின்றன. ஆரம்பநிலையிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பிய காரணத்தால்தான் பொது சிவில் சட்டம் செயல் வடிவம் பெறாமல் போனது.

சிவில் விவகாரம்
சிவில் விவகாரம்

தற்போது நடைமுறையில் ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றுவோர்க்கான சிவில் உரிமைகளை நிலைநிறுத்தும் தனிச்சட்டங்கள் இருந்துவருகின்றன. திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை, தத்தெடுத்தல், ஜீவனாம்சம் உள்ளிட்ட சிவில் விவகாரங்கள் குறித்து இந்தச் சட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்நிலையில் அனைத்து மதத்தின் தனிச்சட்டங்களையும் உள்ளடக்கி பொதுவான சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது கொள்கைரீதியான முடிவு என்றும், அவ்வாறு செய்வது சாத்தியமற்றது என்றும் வாதங்கள் கிளம்பியுள்ளன.

ஜீவ கிரிதரன்
ஜீவ கிரிதரன்

இதுபற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ஜீவ கிரிதரன், ``உண்மையில் பொது சிவில் சட்டம் அதாவது, Uniform Civil Code என்கிற பதமே சரியான பயன்பாடு கிடையாது. ஒரு மதத்திற்கான சட்டம்தான் Uniform ஆக இருக்க முடியும். அனைத்து மதத்திற்கும் பொதுவான சட்டம் என்றால், அதை Common Civil Code என்றுதான் சொல்லவேண்டும். பல்வேறு மதங்கள், சமயங்களைப் பின்பற்றுகிற மக்கள், பழங்குடிகள் வாழ்கிற இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த நாட்டில் தங்களுடைய சமய நம்பிக்கைகளைப் பாதுகாத்துக்கொள்கிற, பின்பற்றிக்கொள்கிற உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.

ஒவ்வொரு மதச்சட்டங்களிலும் முரண்பாடுகள், திருத்தப்பட வேண்டிய அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அதற்கான தீர்வு பொது சிவில் சட்டம் கிடையாது. இதற்கு கோவாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால், அதே சட்டத்தில் பெண்கள் 25 வயதிற்குள் குழந்தை பெறவில்லை என்பதைக் காரணம்காட்டி விவாகரத்து செய்வதற்கான கூறுகளும் இருக்கின்றன. அப்படியானால், அதை ஏற்க முடியுமா என்ற கேள்வி எழும்.

சட்டம்
சட்டம்

சில தனிச்சட்டங்களில் உயில் எழுதிவைப்பதற்கான சாத்தியங்கள் கிடையாது. தத்தெடுப்பதற்கான பிரிவுகள்கூட பலவாறாக வேறுபடுகின்றன. எனவே, எந்தவொரு தனிச்சட்டத்தையும் மேற்கோளாகக் காட்டவே முடியாது. அனைத்துத் தனிச்சட்டங்களிலும் குறைகள் இருக்கவே செய்கின்றன. அதில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பொதுசிவில் சட்டம் என்பது பெரும்பான்மையினரின் சட்டத்தை அனைவரின்மீதும் திணிப்பதாகும். அதற்குச் செயல் வடிவம் கொடுப்பது என்பது மேலும் குழப்பங்களையே விளைவிக்கும்” என்றார்.

பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்...

ராகவன்
ராகவன்

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகவன், “அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லியிருப்பதைத்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறோம். இதுநாள்வரை எந்தக் கட்சியும் அதை நிறைவேற்ற முயற்சிசெய்யவில்லை. அரசியல் நிர்ணய சபை விவாதத்திலேயே அம்பேத்கர் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக, `90 சதவிகிதச் சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்கிறபோது, சொத்து, திருமணம் தொடர்பான சட்டங்கள் மட்டும் தனியாக இருக்கக் கூடாது” என்று சொல்லியிருக்கிறார். பொது சிவில் சட்டம் என்பது இந்து சட்டம் ஆகாது. அனைத்து மதச் சட்டங்களிலும் உள்ள நல்ல அம்சங்கள் எல்லாம் அதில் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.

ஆக... விரைவிலேயே எதிர்பார்க்கலாம் பொது சிவில் சட்டத்துக்கான ஆதரவும் எதிர்ப்புமான போரை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு