Election bannerElection banner
Published:Updated:

`விற்பனைக்கு வரும் மகாராஜா!' - ஏர் இந்தியா விற்பனை அறிவிப்பும், எதிர்ப்பும் #VikatanInfographics

ஏர் இந்தியா விற்பனை
ஏர் இந்தியா விற்பனை

கடந்த ஜனவரி 27 அன்று, மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை 220 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏர் இந்தியா அதன் தொடர்புள்ள மற்ற பொது விமான நிறுவனங்களின் விற்பனை குறித்தும், அவற்றின் தகவல்கள் குறித்தும் வெளியிட்டுள்ளது.

விற்பனைக்கு வருகிறது மகாராஜா. ஏர் இந்தியாவும் அதனோடு தொடர்புள்ள மற்ற பொது விமான நிறுவனங்களும் விற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் நஷ்டத்தையே சந்தித்துவருவதால் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டு, ஏர் இந்தியாவின் 76 சதவிகித பங்குகளை விற்பதாக மத்திய அரசு அறிவித்தபோது, அதன் மீதான கடனையும், நஷ்டத்தில் இயங்கும் அதன் வியாபாரத்தையும் கணக்கில்கொண்டு, அதை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அதனால் தற்போது ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களில் 100 சதவிகித பங்குகளையும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விமான நிலையங்களில் பணியிடங்களைக் கொண்டுள்ள ஏர் இந்தியா சாட்ஸ் (SATS) நிறுவனத்தில், மத்திய அரசு கொண்டுள்ள 50 சதவிகித பங்குகளையும் விற்பதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

ஜனவரி 27 அன்று, மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை 220 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏர் இந்தியா அதன் தொடர்புள்ள மற்ற பொது விமான நிறுவனங்களின் விற்பனை குறித்தும், அவற்றின் தகவல்கள் குறித்தும் வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் மீது மொத்தமாக, ஏறத்தாழ 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. தற்போது இதை வாங்குபவருக்கு அது குறைக்கப்பட்டு, 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை மட்டும் செலுத்த வேண்டும் என்கிறது இந்த அறிக்கை.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகள் என்பது, அதன் விமானங்கள், விமானத் தளங்கள், தொழிலாளர்கள் முதலான அனைத்தையும் குறிக்கும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படும் சிறப்பு சேவைகள் கொண்ட விமானங்களைக் கொண்டது. இதன் 100 சதவிகித பங்குகளும் தற்போது விற்கப்படும். மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தோடு ஏர் இந்தியா இணைந்து, 'ஏர் இந்தியா சாட்ஸ்' (Air India SATS) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இது, தரையில் ஏர் இந்தியாவின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், சரக்குகளைப் பரிமாற்றுவதற்கும் பயன்பட்டு வருகிறது. இதில், ஏர் இந்தியாவுக்கு 50 சதவிகித பங்குகள் உண்டு. இந்தப் பங்குகளும் முழுமையாக விற்கப்படுகின்றன.

கடந்த 2018-ம் ஆண்டு, ஏர் இந்தியா அதன் தொடர்புள்ள நிறுவனங்கள் ஆகியவற்றின் 76 சதவிகித பங்குகளை மத்திய அரசு விற்க முடிவு செய்தபோது, அவற்றை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அப்போது, வாங்குபவர்களே அதன் 33 ஆயிரம் ரூபாய் கடனைச் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது. தற்போது, முன்பு கூறப்பட்ட பல விதிகளைத் தளர்த்தியுள்ளது மத்திய அரசு. 100 சதவிகித பங்குகள் விற்கப்படும் தற்போதைய சூழலில், 23 ஆயிரம் ரூபாய் கடன் சுமை மட்டுமே வாங்குபவரின் மீது திணிக்கப்படும் எனக் கூறுகிறது, விமானப் போக்குவரத்துத் துறையின் அறிக்கை.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
``இதுதான் முடிவு. எந்த மாற்றமும் கிடையாது!" ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து பிரகாஷ் ஜவடேகர் 
"ஏர் இந்தியா விற்பனைக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தேச விரோதமானது. நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன். நமது வீட்டு வெள்ளியை வெளியே விட்டுத் தர முடியாது."
சுப்ரமணியன் சுவாமி, மாநிலங்களவை உறுப்பினர்

ஏர் இந்தியா, நீண்ட பாரம்பர்யம் கொண்ட நிறுவனம். 'மகாராஜா' என்று அழைக்கப்படும் ஏர் இந்தியாவின் லோகோ, கடந்த காலங்களில் பல்வேறு சிறந்த ஓவியர்களால், பல டிசைன்களில் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களையும், ஏர் இந்தியாவின் சிறப்புப் பொருள்களையும், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் ஏர் இந்தியாவிற்கு இருக்கும் தலைமை இடங்களையும் இந்த விற்பனையிலிருந்து விலக்கியுள்ளது மத்திய அரசு. நிலம், கட்டடம் முதலான அசையா சொத்துகள், இந்த விற்பனைப் பரிவர்த்தனையில் சேராது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் வசம் 121 விமானங்கள் இருக்கின்றன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 25 விமானங்களை வைத்திருக்கிறது. இவற்றில் பல விமானங்கள் குத்தகைக்கு விடப்பட்டிருக்கின்றன. மேலும், இவற்றில் அதிக அளவிலான விமானங்கள் பழையன. அவற்றின் தொழில்நுட்பம் பழையது எனக் கூறப்படுகிறது. அதனால், இதனை வாங்குபவர்கள் புதிய விமானங்களை வாங்க நேரிடும் என்கின்றனர், விமானங்கள் குறித்து அறிந்தவர்கள்.

ஏர் இந்தியா நிறுவனங்களை வாங்குபவர்கள், குறைந்தபட்சமாக 3500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடையவர்களாக இருக்க வேண்டும்; குறைந்தபட்சம் அதன் 10 சதவிகிதப் பங்குகளை மட்டுமாவது வாங்குபவர்களுடன் மட்டுமே வியாபாரத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
ஏர் இந்தியா SATS
ஏர் இந்தியா SATS

ஏர் இந்தியா குழுமம் முழுவதும், ஏறத்தாழ 14 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். பொதுத்துறை நிறுவனத்திலிருந்து தனியாருக்கு விற்கப்படுவது தொழிலாளர்களின் வாழ்வில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன.

ஏர் இந்தியாவின் இந்த விற்பனை நடவடிக்கைக்குக் காரணம், அதன் கடந்த கால செயல்பாடுகள் என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட விமானங்களே இந்த நிலைக்கு முதல் காரணம். எனினும், காங்கிரஸ் ஆட்சியிலும், பி.ஜே.பி ஆட்சியிலும் தனியார் விமானச் சேவைகளுக்கு அதிக சலுகைகளும் முன்னுரிமையும் அளிக்கப்பட்டன. அதன் நீட்சியாகவே, பொதுத்துறை விமான சேவை நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. தனியாரின் லாபத்திற்காக நஷ்டமடைந்த நிறுவனம், தற்போது தனியாரிடம் விற்கப்பட்டால் மட்டுமே மீட்கப்படும் என்கிறது மத்திய அரசுத் தரப்பு. மேலும், ஏர் இந்தியாவின் விற்பனை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வாங்குபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு தயாராக இருப்பதாகக் கூறுகிறது. வரும் மார்ச் 27 வரை, இதற்குக் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

"ஏர் இந்தியாவை விற்பதற்கு அரசு முடிவுசெய்துள்ளதிலிருந்தே, நாடு எவ்வளவு பெரிய பொருளாதார நஷ்டத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது."
டெரிக் ஓப்ரைன், மாநிலங்களவை உறுப்பினர்.
ஏர் இந்தியா பங்குகள் விவரம்
ஏர் இந்தியா பங்குகள் விவரம்

ஏர் இந்தியா நிறுவனங்கள் விற்பனை, அதன் தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, "ஏர் இந்தியா விற்பனைக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தேச விரோதமானது. நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன். நமது வீட்டு வெள்ளியை வெளியே விட்டுத் தர முடியாது" எனக் கடுமையாக மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொழிலாளர் அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம், இந்த முடிவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. "இந்த முடிவு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது" என்கிறது பாரதிய மஸ்தூர் சங்கம். எனினும், தனியார்மயத்தை ஆதரிக்கும் வலதுசாரிகள் இந்த முடிவை வரவேற்றுள்ளதோடு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், இந்திய முதலாளிகளே 51 சதவிகித பங்குகளை வைத்துக்கொள்ள முடியும் என்கிற வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையின் கீழ் மத்திய அரசு செயல்படுவதைப் பாராட்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏர் இந்தியா விற்கப்படுவதைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பி.ஜே.பி அரசு லாபத்தைத் தனியார்மயப்படுத்துகிறது; நஷ்டத்தைப் பொதுமக்கள் தலையில் கட்டுகிறது" என்று கூறியுள்ளது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா
பாகிஸ்தான் எதிர்ப்பு பி.ஜே.பி... ஷீலா தீக்‌ஷித் இல்லாத காங்கிரஸ்... டெல்லியை வெல்வாரா கெஜ்ரிவால்?

ஏர் இந்தியாவை வாங்கும் போட்டியில், ஹிந்துஜா குழுமமும், அமெரிக்காவைச் சேர்ந்த 'இன்டெரப்ஸ்' நிறுவனமும் இறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 'மகாராஜா' எனக் கொண்டாடப்படும் ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்படுவது, தொழில்துறை வட்டாரங்களில் இந்தியப் பொருளாதாரம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. வரவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடருக்காக, அனைத்துத் துறைகளும் காத்துக் கொண்டிருக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு