Published:Updated:

கடந்த ஐம்பது நாட்களில் நாம் கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகள்!

மத்திய அரசு
மத்திய அரசு ( wikipedia )

கொரோனா தந்த வாழ்க்கையில் பெரும்பாலானோரின் கவனம் போகாத திசையில் அரசு செய்யும் மாற்றங்களை எப்படி ஜனநாயகத்தின் அங்கமாகப் பார்க்க முடியும்? அதுவும், அவை மக்களுக்கு எதிரானதாக இருக்கும்போது அவற்றை எப்படி ஏற்க முடியும்?

இந்தப் பேரண்டம் கடந்த சில மாதங்களாக ஒரு வைரஸின் முன் சிறியதாகிக் கொண்டிருக்கிறது. உலகின் அத்தனை கண்களும் அந்த நுண்ணுயிரி மீது மட்டுமே குவிந்துள்ளன. விளைவு, அந்த வைரஸ் தாண்டி நம் முன் நிகழும் சில பெரிய மாற்றங்கள் கூட கண்களுக்குப் புலப்படாமல் போகின்றன.

corona
corona

கடந்த சில நாள்களில் கொரோனா அல்லாத செய்திகளில் சில கவனம் பெற்றதுண்டு. பாலிவுட் நடிகர்களின் மரணம், ஆனந்த் டெல்டும்டே கைது, பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்கு, 68,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி ஆகிய சில செய்திகள் கவனம் பெற்றன. ஆனால், நம்முடைய கவனத்தைப் பெறாமல் போன சில முக்கிய நிகழ்வுகளும் இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இவை நாளை பெரும் ஆபத்தை உருவாக்கும் சூழல் இருக்கிறது.

அரசின் பெரும்பாலான செயல்பாடுகள் கொரோனா பயத்தால் கணினிமயமாக மாறியிருக்கிறது. அதனால், அரசாங்கம் வெளியிடும் அரசாணைகள் முழுவதும் டிஜிட்டல் வடிவம் பெற்றிருக்கின்றன. இதையடுத்து அனைத்து அமைச்சகங்கள், அரசு அலுவலகங்கள் அரசிதழில் வெளிவரும் அரசாணையைப் பெற, இணையத்தில் பதிவு செய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறது மத்திய அரசு. இது மட்டுமன்றி அனைத்து அமைச்சகங்களும் காணொலிக் காட்சி அழைப்புகள் மூலமாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. அரசுத்துறைகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிக் கொண்டிருக்கின்றன. பல்வேறு சட்ட வரைவு மசோதாக்கள், பொதுமக்கள் கருத்தை பெறுவதற்காக வெளியிடப்படுகின்றன. சூழலின் தேவைக்கேற்ப அவசரச் சட்டங்கள் இயற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தக் கொரோனா களேபரத்தில், மக்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்ள முடிவதில்லை.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

புதிய கல்விக் கொள்கையின் வரைவு மசோதா தேசிய அளவில் விவாதிக்கப்பட்டதுபோல, ஜல்லிக்கட்டைத் தடை செய்யும் சட்டத்தை எதிர்த்து போராட்டம் வெடித்ததுபோல, எட்டுவழிச்சாலை திட்டத்தைத் தடுக்க மக்கள் நீதிமன்றப் படி ஏறியதைப்போல எதுவும் நடப்பதில்லை என்பதே தற்போது இருக்கும் ஆபத்து. இது, இந்தியாவின் ஜனநாயகத் தன்மைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து.

ஒரு ஜனநாயக அமைப்பு எப்போது சரிவர இயங்கும்?

ஆளும் அதிகார வர்க்கத்தின் புதிய முன்னெடுப்புகளை, கொள்கை முடிவுகளை, புதிய சட்டங்களை ஆராய்ந்து செய்தி வடிவில் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் சுதந்திரமான பத்திரிகைகளும், அவை மக்களின் நலனுக்கு எதிராக இருப்பின் அதற்கு எதிர்ப்புக் குரல் எழுப்பும் போராட்ட உரிமைகளும், இருதரப்பு நியாயங்களை தராசிலிட்டுப் பார்க்க நீதிமன்றங்களும் சரிவர இயங்கி கொண்டிருப்பதில்தான் ஜனநாயகத்தின் உயிர் இருக்கிறது. ஆனால், கொரோனாவால் பிற விவகாரங்களில் பெரும்பாலானோரின் கவனம் போகாத திசையில் அரசு செய்யும் மாற்றங்களை எப்படி ஜனநாயகத்தின் அங்கமாகப் பார்க்க முடியும்? அதுவும், அவை மக்களுக்கு எதிரானதாக இருக்கும்போது அவற்றை எப்படி ஏற்க முடியும்?

அப்படி என்ன மாற்றங்கள் அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன அல்லது கொண்டு வரப்படவிருக்கின்றன?

சமீபத்தில் நிதி அமைச்சர் துறை சீர்திருத்தங்கள் வடிவில், நிலக்கரி, கனிமம், மின்சாரம், விண்வெளி, விமானப் போக்குவரத்து போன்ற துறைகள் தனியார் மயமாக்கப்படுகின்றன என அறிவித்தார். பாதுகாப்புத் துறையில் கூட ஆயுத உற்பத்தியில் அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை தேசிய அளவில் கவனம் பெற்று இன்று விவாதிக்கப்படுகின்றன. இந்த அறிவிப்புகளுக்கு முன்னரே மார்ச் மாத இறுதியில், இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே ரயில்வே துறை ஒப்பந்தங்கள் இட, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்தியா முழுவதுமே தொழிற்சாலைகள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன, இந்த நிலையில் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொழிலாளர் சட்டத்தில் பெரும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிறைய தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுப்பது முதற்கொண்டு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கட்டுப்பாடுகளில் தளர்வு கொடுப்பது வரை புதிய முதலீடுகளுக்காக நிறைய மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தொழிலாளர் நல விதிகளுக்கு உட்பட்டு, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் கருத்துகளை கேட்ட பின்னரே அரசு இம்மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே சர்வதேசக் கோட்பாடு. அதை மீறும் மாநில அரசுகளின் முடிவுகள் பல பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என மத்திய தொழிற்சங்கங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.

முடக்கத்துக்கு சில தினங்களுக்கு முன்னர் அரசு 2013-ம் ஆண்டின் கம்பெனி சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர ஒரு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்பித்திருக்கிறது. இதன்படி, பெரு நிறுவனங்கள் செலவிடும் சி.எஸ்.ஆர் (CSR) நிதியை இனி சொசைட்டி அல்லது டிரஸ்ட் மூலமாக செலவிட முடியாது, மாறாக கம்பெனி சட்டத்தில் பிரிவு 8-ன் கீழ் பதியப்பட்ட நிறுவனங்களுடன் மட்டுமே இணைந்து பெரும் நிறுவனங்கள் செயல்பட வேண்டும். மேலோட்டமாக இது நன்மை விளைவிக்கக் கூடியதாகத் தெரிந்தாலும், ஆக்கபூர்வமான சமூகப்பணியை செய்யும் பல தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்களின் கணிசமான நன்கொடையை இந்த மாற்றத்தால் இழக்க நேரிடும்.

கொரோனாவைத் தாண்டி உலகில் என்னவெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன? ஓர் பார்வை...#MustKnow

கடந்த ஆண்டு சட்டப்பிரிவை 370-ஐ நீக்கிய மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீர் பகுதியை முழுவதும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர பல்வேறு சட்டங்களை இயற்றிவருகிறது. தற்போது, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் புதிய விதிகளை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன்படி, ஒரு நபர் பதினைந்து ஆண்டுகள் அப்பகுதிகளில் வசித்திருந்தால் அல்லது அங்கு ஏழு ஆண்டுகள் கல்வி பயின்று பத்தாவது, பன்னிரண்டாவது தேர்வுகள் எழுதியிருந்தால், அவர் அப்பகுதியின் குடியிருப்பாளராக (Domicile) கருதப்படுவார்.

Jammu & Kashmir
Jammu & Kashmir
www.jammukashmirnow.com/

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை, Environmental impact assessment எனும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது சட்டமாகும் பட்சத்தில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்குமுன் மக்களிடம் கருத்து கேட்பது என்பது தேவையற்றதாகிவிடும். முன் அனுமதி இல்லாமல் ஒரு கட்டுமானத்தைத் தொடங்குவது போன்ற தற்போதைய குற்றங்கள் சட்ட ரீதியாக அனுமதிக்கப்படும். எளிதில் சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance ) கிடைக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்திருத்தம் பல தீங்குகளை ஏற்படுத்தும் என அச்சம்கொள்கின்றனர் இத்துறை சார்ந்த வல்லுநர்கள்.

சமீபத்தில் ஆந்திர அரசு, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், கடற்கரை சதுப்புநிலக் காடுகளை, அரசின் வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்காகக் கையகப்படுத்தியிருக்கிறது. சதுப்பு நிலக்காடுகள் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாக்க வல்லவை. அதுமட்டுமன்றி, 2006-ம் ஆண்டு அமெரிக்காவின் `நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த்' எனும் நிறுவனம் இங்கு ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் 90% இந்த சதுப்பு நிலக் காடுகளை சார்ந்தே இருப்பதாக ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. சுமார் 55,000 மீனவக் குடும்பங்கள் இப்பகுதியில் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வாழ்வாதாரமே இப்போது கேள்விக் குறியாகியிருக்கிறது.

சதுப்பு நில காடுகள்
சதுப்பு நில காடுகள்
உ.பாண்டி

இதேபோல, அருணாசலப் பிரதேசத்தில், திபாங் பள்ளத்தாக்கில் சுமார் இரண்டு லட்சத்து 70,000 மரங்களை வெட்டி, நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் கீழ் உள்ள FAC (Forest Advisory Committee) எனும் வன ஆலோசனைக் குழு. உத்தரகாண்ட் மாநிலத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கும்ப மேளாவுக்காக ராஜாஜி தேசியப் பூங்கா பகுதியில் 778 ஹெக்டர் பரப்பளவு இடம் கையகப்படுத்த ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்காக இந்தப் பகுதியில் தற்காலிகத் தங்குமிடம் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அரசின் இந்தக் கோரிக்கைக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், வன உயிர்ப் பாதுகாப்புச் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு இது புறம்பாக இருக்கும்.

National Board for Wildlife (NBWL) எனும் வன உயிர்களுக்கான தேசிய வாரியம்,11 மாநிலங்களில் பல திட்டங்களுக்கு ஆன்லைன் மீட்டிங் மூலமாக ஒப்புதல் அளித்துள்ளது. நாக்பூர் -மும்பை நெடுஞ்சாலை, மெல்லேம் வனவிலங்கு சரணாலயம் வழியாக கோவா செல்லும் நெடுஞ்சாலை, அசாம் மாநிலத்தில் உள்ள யானைகள் காப்பகம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, தெலங்கானா மாநிலத்தின் காவால் புலிகள் காப்பகம் வழியாக மத்தியப் பிரதேசம் செல்லும் மேம்பாலம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை

கொரோனா தந்த ஊரடங்கால் இயற்கை தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது என்று நாம் அதிசயத்துக் கொண்டிருக்கும் வேளையிலே, இன்னும் வேகமாக அதே இயற்கைச் சூழலும், சமூகச் சூழலும் குலைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதனின் தேவைக்காக, வளர்ச்சிக்காக, முன்னேற்றத்துக்காக, ஏழைகளின் நல்வாழ்வுக்காக என ஆயிரம் காரணங்கள் அடுக்கப்பட்டாலும் இவையெல்லாம் நம் மீது கட்டவிழ்க்க இருக்கும் மற்றுமொரு பேரழிவிற்கான விதை என்பதை அரசும் நாமும் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகின் வல்லரசுகளால் கூட ஒரு வைரஸை சமாளிக்க முடியவில்லை. இதில், இயற்கைக்கு எதிராக இன்னமும் நாம் இயங்கிக் கொண்டிருந்தால் எதிர்காலம் என்னவாகும்? மக்கள் இன்னமும் ஆளும் அரசுகளைதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆள்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆள்பவர்களின் செயல்பாடுகளை கவனத்தில் கொள்வதை மக்கள் கடமையாக்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு