Published:Updated:

`தீர்மானம் நிறைவேறியது... திட்டம்?!' - சேது சமுத்திர திட்டத்தில் நீடிக்கும் சிக்கல்கள் என்னென்ன?!

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுகிறது.

`தீர்மானம் நிறைவேறியது... திட்டம்?!' - சேது சமுத்திர திட்டத்தில் நீடிக்கும் சிக்கல்கள் என்னென்ன?!

சேது சமுத்திர திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுகிறது.

Published:Updated:
சேது சமுத்திர திட்டம்

தீர்மானம் நிறைவேற்றம்!

"தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மறுபுறம் ராமர் பாலத்தை தேசிய பாரம்பர்யச் சின்னமாக அறிவிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில், பிப்ரவரி முதல் வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, "இந்தத் திட்டம் கடல் மற்றும் கடலோரச் சூழல் அமைவைக் கடுமையாக பாதிக்கும் தன்மையுடையது. குறிப்பாக, மன்னார் வளைகுடா உயிர் மண்டலக் காப்பகம் மற்றும் பவளத்திட்டுகளை பாதிக்கும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறது, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. இதுபோல் அரசியல், பொருளாதாரம், வழக்கு, பன்னாட்டு உறவு, சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரம் என இடியாப்பச் சிக்கலில் சிக்கி பல ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்கப்பட்டுவரும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் என்னதான் பிரச்னை?

சேது சமுத்திர திட்டம்
சேது சமுத்திர திட்டம்

60% சரக்கு கப்பல்கள் வந்துவிடும்!

தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். "சுற்றுச்சூழல், நம்பிக்கை, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வுசெய்த பிறகுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். ஏற்கெனவே, வட அமெரிக்காவையும் - தென் அமெரிக்காவையும் இணைக்கக்கூடிய 'பனாமா கால்வாய்', ஐரோப்பாவையும், ஆசிய நாடுகளையும் இணைக்கக்கூடிய 'சூயஸ் கால்வாய்' மனிதனால் கட்டப்பட்டவைதான். இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டபோதும், இவ்வாறுதான் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

எந்தத் திட்டத்தையும் கண்ணை மூடிக்கொண்டு உருவாக்கிவிட முடியாது. சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் 424 கடல் மைல் தூரம் குறையும் என்பதால், ஏறத்தாழ 30 மணி நேரப் பயணத்தைக் குறைக்க முடியும். எரிபொருள் அதிக அளவில் மிச்சமாவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். அதிகமாகக் கப்பல்கள் வந்து செல்லும்போது ராமேஸ்வரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் வேலைவாய்ப்பு பெருகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது 300 மீட்டர் அகலமும், 15 மீட்டர் ஆழமும்கொண்டது. இதற்குள் 60% சரக்குக் கப்பல்கள் வந்துவிடும்" என்றார்.

அரசியல் லாபத்துக்காக..!

`பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், ``முன்னதாக ரூ. 2,427 கோடி செலவில் 02.07.2005 அன்று மதுரையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலுள்ள ஆதம் பாலம் மணல் திட்டுப் பகுதியில் கால்வாய் தோண்டுவதற்கு 17.09.2007-ல் தடைவிதித்தது.

வழக்கறிஞர், வெற்றிச்செல்வன்
வழக்கறிஞர், வெற்றிச்செல்வன்

அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடையை இந்துத்துவா பிரிவினை சக்திகளும், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளும் தங்கள் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தத் தொடங்கி சேது கால்வாய்க்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். அவர்கள் எதிர்த்ததற்காகவே இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்கிற வழியில் தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் முடிவெடுத்திருப்பது வேதனைக்குரியது.

`4,223 வகை உயிரினங்கள் வாழ்கின்றன!'

மன்னார் வளைகுடா, பாக் நீரிணை, பாக் ஜலசந்தி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 167 கி.மீ தொலைவுக்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. இதில் 89 கி.மீ நீளத்துக்கு, 12 மீட்டர் ஆழத்துக்குக் கடல் தூர்வாரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்திருக்கும் 21 தீவுகளை உள்ளடக்கிய 10,500 சதுர கி.மீ அளவுக்கு பரந்து விரிந்திருக்கும் கடற்பரப்பு, `மன்னார் வளைகுடா உயிர் மண்டலக் காப்பகம்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள்

இது உலக அளவில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இந்தப் பகுதியில் 104 வகை பவளத்திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், 280 வகை கடற்பஞ்சுகள், 92 வகை பவளங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பல வகையான சுனைப் புழுக்கள், 103 வகை முட்தோலிகள், கடல் சங்குகள், பங்குனி ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற 4,223 வகை உயிரினங்கள் வாழும் உயிர்ப்பன்மயம் நிறைந்த பகுதியாக இருக்கிறது.

அழிந்துவரும் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும், ஓங்கில்களும் (டால்பின்) இந்தப் பகுதியில் காணப்படுகின்றன. மேலும், இந்த ஆவுளியா கடல் பசுக்களை பாதுகாக்கும் பொருட்டு 15.02.2022 அன்று தமிழ்நாடு அரசு ஆவுளியா உயிர் மண்டலக் காப்பகத்தை 5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் வளைகுடா பகுதியைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்துவிட்டு, மறுபுறம் சேது கால்வாய் திட்டம் என்ற பெயரில் வணிக நோக்கத்துக்காக அந்தப் பகுதியின் உயிர்ப்பன்மயத்தை அழிக்க நினைப்பது எப்படிச் சரியாகும்?

மன்னார் வளைகுடா
மன்னார் வளைகுடா
விகடன்

பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால்கூட இந்தத் திட்டம் பலனளிக்காது எனக் கடல் போக்குவரத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சேது கால்வாயில் 10 மீட்டர் மிதவை ஆழம்கொண்ட 30,000 டன்னுக்கு உட்பட்ட கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். பொதுவாகவே மேற்குக் கடற்கரைகளுக்கிடையே குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கப்பல்கள் செல்கின்றன.

அப்படி 30,000 டன்னுக்குக் குறைவான கப்பல்கள் சேது கால்வாயில் சென்றாலும் சுங்கவரி, பைலட் கப்பல் வாடகை என செலவு செய்ய வேண்டும். மேலும், சேது கால்வாயில் செல்லும்போது கப்பல்கள் தங்கள் வேகத்தைக் குறைத்து பயணிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் எரிபொருள் செலவாகும். சூயஸ், பனாமா போன்ற கால்வாய்கள் பல வார பயணத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்திக் கொடுக்கின்றன.

சூயஸ் கால்வாய்
சூயஸ் கால்வாய்

மேலும் அவை நிலத்தைத் தோண்டி அமைக்கப்பட்ட கால்வாய்கள் என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஆனால், சேது கால்வாய் 30 மணி நேரத்தையும், 424 நாட்டிகல் மைல் தூரத்தையும் மட்டுமே மிச்சப்படுத்துவதால் கப்பல் நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் லாபம் இருக்காது.

சேது கால்வாய் திட்டம் வந்தால் தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலுள்ள 140 மீனவ கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும். சேது சமுத்திர திட்டத்தால் கடலை ஆழப்படுத்தும் நிறுவன உரிமையாளர்களுக்கும், துறைமுகம் அமைக்கும் அதானி போன்ற தொழிலதிபர்களுக்கும்தான் நன்மையே தவிர, தங்களின் தற்சார்பு பொருளாதாரத்திலிருந்து கூலித் தொழிலாளியாக மாற்றப்படப்போகும் லட்சக்கணக்கான மீனவர்களுக்கு இது வளர்ச்சி இல்லை வீழ்ச்சி" என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "சேது சமுத்திர திட்டம், ராமர் பாலத்தில் உறுதியாக நடைபெற முடியாது, கூடாது. அதுதான் நீதிமன்றத்தாலும் உத்தரவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் ராமர் பாலம் இருக்கும் இடத்தில் பெரிய கப்பல்கள் வர முடியாது. எனவே, இந்தத் திட்டம் ஒரு பலனையும் தராது. சிறிய துறைமுகங்களுக்கு வருவாய் அதிகரிக்கும் என்பதெல்லாம் கிடையாது.

 - நாராயணன் திருப்பதி
- நாராயணன் திருப்பதி

மேலும், கடல் உயிரினங்களுக்கு இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆதாரபூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமது நாட்டுக்கு இந்தத் திட்டம் வரும்போது வேலைவாய்ப்பு அதிகரிக்கும், பொருளாதாரம் பெருகும், சர்வதேச வர்த்தகம் அதிகரிக்கும் என்பதை மனதில்கொண்டு அதற்கு மாற்று வழிகள் இருக்கின்றனவா என்று மத்திய அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இறை நம்பிக்கை இல்லாத இந்து விரோத சக்திகள், தீய சக்திகள் எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்" என்றார்.