Published:Updated:

இந்தியாவை உலுக்கியப் புகைப்படமும் சர்வதேசப் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலையும்!

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது, சர்வதேச அளவில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை எப்படி இருக்கிறது?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சாலையோரத்தில் இருந்த சிமென்ட் கட்டை ஒன்றின் மீது அமர்ந்தபடி தனது கைபேசியில் கதறி அழுகிறார் புலம்பெயர் தொழிலாளர் ராம்புக்கார் பண்டிட். இன்றைய பேரிடர் சூழலில் ஒட்டுமொத்த புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைக்கான ஒரு சோற்றுப் பதம் ராம்புக்கார். ராம்புக்காரின் சொந்த ஊர் பீகாரின் பெகுசாராய். ஆனால், தனது குடும்பத்தையும் ஒருவயதுகூட நிரம்பாத மகனையும் பார்த்துக்கொள்வதற்காக டெல்லியின் சினிமா திரையரங்கம் ஒன்றின் கட்டுமானத் தொழிலாளராகப் பணிபுரிந்துவந்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ராம்புக்காரின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. பேருந்துப் போக்குவரத்து எதுவுமே இல்லாத சூழலில் 1,200 கிமீ தூரத்தை நடந்தே கடக்க முடிவு செய்தார். போலீஸிடம் உதவி கேட்டும், "நீ வண்டியில் போனால் மட்டும் உனது பிள்ளை பிழைத்துவிடுவானா” என்கிற பதிலே கிடைத்திருக்கிறது. தனது பிள்ளை எப்படியும் பிழைக்கமாட்டான் எனத் தெரிந்ததும் குழந்தை இறப்பதற்கு முன்பாவது அவனைப் பார்த்துவிட வேண்டும் என தன்னைப் பேட்டியெடுத்த டெல்லி பத்திரிகையாளர் ஒருவரிடம் கெஞ்சவும் அவரது உதவியுடன் ரயிலேறிச் சென்றிருக்கிறார் ராம்புக்கார். ஆனால், அவர் செல்வதற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டிருக்கிறது.

Migrant
Migrant
Rafiq Maqbool

ராம்புக்கார் மாதிரியான புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை விவரங்கள் நமக்கு 2011-க்குப் பிறகு கிடைக்கப்பெறவில்லை. (2011 - இறுதியாக மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்ட ஆண்டு) கடைசியாகக் கிடைக்கப்பெற்ற புள்ளிவிவரத்தின்படி 450 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ளனர். இது தற்போதைய ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 18 சதவிகிதம் வரை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. இதில் இன்னும் குறிப்பாக மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர்தலைவிட மாநிலத்தின் பிறநகரங்களில் இருந்தும் கிராமங்களிலிருந்தும் மையநகரங்களுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் என்கிறது அந்தப் புள்ளிவிவரம். அதாவது, தமிழகத்திலிருந்து மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்தவர்களைவிட தமிழகத்திலேயே சிறுநகரங்களிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகம் புலம்பெயர்ந்துள்ளனர் என்கிறார்கள். தற்போதைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் தினமும் அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒருகாரணம். மேலும் 2011-2020 இடையிலான ஒன்பது ஆண்டுகளில் மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்தப் புள்ளிவிவரம் அரைகுறையாகவே இருக்கிறது. ராம்புக்கார் போல மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்வோர்களுக்கு அரசால் எவ்வித உதவியும் செய்ய முடியாமல் போனதற்கு அரசிடம் அவர்கள் குறித்த புள்ளிவிவரமே இல்லை என்பதுதான் முழுமுதற்காரணம்.

சரி, மற்ற நாடுகள் புலம்பெயர் தொழிலாளர்களை எப்படிக் கையாளுகின்றன?

Singapore
Singapore
AP

இந்தியாவை விடச் சிறிய நாடான சிங்கப்பூர் கொரோனாவைச் சிறப்பாகக் கையாண்டதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வந்தன. ஆனால், அங்கே இரண்டாவது கொரோனா அலை உருவானதற்குக் காரணமே புலம்பெயர் தொழிலாளர்களின் சுகாதாரத்தை அலட்சியமாகக் கையாண்டதுதான் எனக் கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் வெறும் 200 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்த நாடு அறிவித்திருந்த நிலையில் ஏப்ரல் இறுதியில் பாதிப்பு எண்ணிக்கைப் பத்தாயிரத்தைக் கடந்திருந்தது. புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள் குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் மிகக் குறுகலான வளாகங்கள் அங்கே அதிகம். ஒரு சிறிய அறையில் 20 பேர் என ஒரு வளாகத்தில் மட்டும் 24,000 பேர் வசிக்கும் பகுதிகள் அவை. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றாடக் கூலிக்கு உழைக்கும் அவர்கள் குறித்து சிங்கப்பூர் அரசு எவ்வித அக்கறையும் காட்டவில்லை. ஏப்ரல் தொடக்கத்தில் இதே வளாகங்களில் கொரோனா ஊடுருவியபோது அது அதிவேகமாகப் பரவ அவர்களின் சுகாதாரச் சூழலை சிங்கப்பூர் அரசு ஒட்டுமொத்தமாகக் கைவிட்டதே காரணம். பாதிப்பு அதிகமானதும் சுமார் 7,000 அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டும் தற்போது பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இது சிங்கப்பூரில் நீண்டகாலமாகப் புதைந்திருந்த சமத்துவமின்மையைத் தற்போது வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது.

United states
United states
Rick Bowmer
10 ஆண்டுகளில் 75,000 பேர்
அடுத்த பத்தாண்டுகளில் மட்டும் அமெரிக்காவின் ப்ளூகாலர் தொழிலாளர்கள் 75,000 பேர் இதுபோன்ற நெருக்கடிகளால் இறக்கலாம் என கோவிட்-19 ஐ ஒட்டி அங்கே மேற்கொள்ளப்பட்ட சர்வே விவரங்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆன் கேஸ் மற்றும் அங்கஸ் டியட்டன் இருவரும் தாங்கள் எழுதிய Deaths of Despair and the future of capitalism புத்தகத்தில் அமெரிக்காவில் இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே அதிகரித்திருக்கும் மரணங்கள் குறித்தும் அதற்குக் காரணமான சமூகப் பொருளாதாரச் சூழல் குறித்தும் இந்தக் கொரோனா பேரிடருக்கு முன்பே எச்சரிக்கை செய்திருந்தனர். 1980-களில் கறுப்பின மக்களில் தொடங்கித் தற்போது வரை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்தப் புத்தகம் விவரிக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் மட்டும் அமெரிக்காவின் ப்ளூகாலர் தொழிலாளர்கள் 75,000 பேர் இதுபோன்ற நெருக்கடிகளால் இறக்கலாம் என கோவிட்-19 ஐ ஒட்டி அங்கே மேற்கொள்ளப்பட்ட சர்வே விவரங்கள் தெரிவிக்கின்றன.

United states
United states
Julio Cortez
`ஊருக்குப்போக வழியில்லை; பெண் தொழிலாளியை தாக்கிய கட்டட உரிமையாளர்!’- புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை

அமெரிக்காவின் இதுபோன்ற ப்ளூ காலர் புலம்பெயர்த் தொழிலாளர்கள் அனைவரும் மெக்சிகோ அல்லது கரீபியன் தீவு நாடுகளைச் சேர்ந்தவர்கள். 2019-ல் மட்டும் இந்தப் புலம்பெயர்த் தொழிலாளர்களின் வழியாக 150 பில்லியன் டாலர் வெளிநாடுகளுக்குக் குறிப்பாக மெக்சிகோ மற்றும் கரீபியன் நாடுகளுக்குப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்த் தொழிலாளர்களின் வேலையின்மை மெக்ஸிகோவில் மட்டும் 1.2 மில்லியன் குடும்பங்களைப் பாதித்துள்ளது. 51 வயதான அனபெல் எல்சால்வடாரைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் பீவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருபவர். அதில் சம்பாதிக்கும் பணத்தில்தான் வீட்டுவாடகை தருவது, உணவுத் தேவைக்கான பணம் மற்றும் சொந்த நாட்டில் இருக்கும் தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மூன்று பேரப்பிள்ளைகளுக்குப் பணம் அனுப்புவது அத்தனையும் செய்து வந்தார். ஆனால், கொரோனா பேரிடர் சூழலில் அவர் தனது குடும்பத்துக்கு அனுப்பிய பணம் வெறும் 50 டாலர். அதுவுமே தனது உணவுச் செலவுகளை ஒட்டுமொத்தமாகக் குறைத்துக் கொண்டு அனுப்பியதாகச் சொல்கிறார். அடுத்த மாதம் அனபெலின் நிலை என்னவாகும்?

புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்புத்திறன் ஒருவேளை உள்நாட்டுத் தொழிலாளர்களிடமே இருக்கும் நிலையில் அவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்.
Jacinda ardern
Jacinda ardern
Hagen Hopkins
அமெரிக்காவில் `கோவிட் டோ'... இந்தியாவில் கொரோனா சருமப் பிரச்னை அறிகுறிகள் எதுவும் இல்லை!

கொரோனாப் பரவலை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதாக நியூசிலாந்து பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால், அங்கு வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையும் கேள்விக்குறிதான். ``புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்புத்திறன் ஒருவேளை உள்நாட்டுத் தொழிலாளர்களிடமே இருக்கும் நிலையில் அவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்” என்பது அந்த நாட்டின் வொர்க் விசாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டம். அங்கே லாக்டெளன் தற்போது தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் தற்போது புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை என்ன என்பதை அந்த நாட்டு அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

மிகமுக்கியமாக மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலைச்சரிவு 1.2 மில்லியன் புலம்பெயர்த் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. எண்ணெய் தேவைக் குறைந்துள்ளதால் நிதி நெருக்கடியும் அதிகரித்துள்ளது. இதனால் மத்தியக் கிழக்கு நாடுகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலையை அப்படியே தேக்கத்தில் விட்டுள்ளது. ஒன்று அவர்கள் வேலையின்றி இருக்கிறார்கள் அல்லது ஏதேனும் ஓர் அற்புதம் நிகழ்ந்துவிடாதா என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ``இந்தச் சரிவால் எதிர்பாராத அளவுக்கு புலம்பெயர்த் தொழிலாளர்கள் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும். புலம்பெயர்த் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தில் குறைந்தது 20 சதவிகிதம் வரை சரிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது” என்கிறார் உலக வங்கியின் முன்னணிப் பொருளாதார வல்லுநர் திலீப் ரத்தா. வந்தே பாரத் மிஷன் வழியாக வெளிநாடுகளில் தேங்கியிருக்கும் புலம்பெயர்த் தொழிலாளர்களை இந்தியாவுக்கு அழைத்துவர அரசு நடவடிக்கை எடுத்தாலும் எல்லோரையும் அப்படி அழைத்து வருவது சாத்தியமற்றது என்பது அவர் கருத்து.

migrant labourers
migrant labourers
Mahesh Kumar A
2016-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி 62.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை புலம்பெயர்த் தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனை (Indian remittances) நிகழ்ந்து இந்தியாதான் உலக அளவிலான பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது.

மீண்டும் இந்தியாவின் சூழலுக்கே வருவோம், நம்நாட்டைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்தவர்களில் மூன்றில் ஒருபங்கு கட்டுமானத் தொழிலாளர்கள், இதற்கு அடுத்து விவசாயக் கூலித் தொழிலாளர்களாக 20 சதவிகிதம் பேர் பணியாற்றுகிறார்கள். இதற்கு அடுத்துதான் உற்பத்தித்துறையே வருகிறது. 2016-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி 62.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை புலம்பெயர்த் தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனை (Indian remittances) நிகழ்ந்து இந்தியாதான் உலக அளவிலான பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது. சர்வதேச அளவில் இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களால் கிடைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டும் 2015-ம் ஆண்டின்படி 9.4 சதவிகிதம்.

Migrant Laboureres
Migrant Laboureres
Manish Swarup

நமது உள்நாட்டு உற்பத்தியில் ஏற்கனவே கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு குறித்து தொடர் கோரிக்கைகள் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. இதற்கிடையே, ராம்புக்கார் போன்றவர்களை அலட்சியப்படுத்துவதால் இந்தியா இழக்கப்போவது இந்த 9.4 சதவிகிதத்தைதான். `எதிர்க்கட்சியினர் புலம்பெயர் தொழிலாளர்களின் பைகளைத் தூக்கிக்கொண்டு அவர்களுடனே நடக்க வேண்டியதுதானே?’ என ஏளனமானக் கருத்தைப் பதிவு செய்வதற்கு முன்பு மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் இதை யோசித்தாரா?

இந்தப் பேரிடர் காலத்தில் பொதுத்துறையில் தனியாருக்குச் சிவப்புக்கம்பளம் விரிப்பதற்கு முன்பு அரசு இவற்றையெல்லாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு