Published:Updated:

முப்படைகளுக்கும் ஒரு தலைமைத் தளபதி நியமனம்... எதிர்க்கட்சிகள் என்ன சொல்கின்றன?

பிபின் ராவத்
பிபின் ராவத்

``இது தேவையில்லாத முடிவு. ஒருவர் கையில் அதிகாரம் குவிவதென்பது ஆபத்தை விளைவிக்கும். ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும்" என எச்சரிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

இந்தியாவின் முப்படைத் தளபதிகளின், தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்கவுள்ள பிபின் ராவத் நேற்று தன் ராணுவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர், டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து, மவுன அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ராணுவ வீரர்களால் வழங்கப்பட்ட பிரியாவிடை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிபின் ராவத், சவாலான தருணங்களில் உறுதியுடன் நின்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி கூறினார். மேலும், ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மனோஜ் நரவனேவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மோடி
மோடி

இந்தியாவில் இதுவரை முப்படைகளுக்கும் தனித்தனித் தளபதிகள் மட்டுமே இருந்தார்கள். முதல்முறையாக பிபின் ராவத்தான் முப்படைகளுக்கும் ஒரே தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கார்கில் போருக்குப் பின், பாதுகாப்புத்துறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசால் கே.சுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், `முப்படைகளுக்கும் ஒரே தளபதி' உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. சுப்ரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை ஆராய, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தலைமையில் அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டது. எனினும், இது செயல்வடிவம் பெறாமல் இருந்தது.

இந்தநிலையில், கடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவுக்கு தனியாக `முப்படைகளின் தலைமைத் தளபதி' (Chief of Defence Staff - CDS) என்ற பதவி உருவாக்கப்படும். இது, நமது படைகளை சிறப்பாகச் செயலாற்ற வைக்கும்'' எனத் தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது, முப்படைகளுக்கும் தலைமைத் தளபதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறார் பிபின் ராவத். அதிகபட்சம் 65 வயதுவரை இந்தப் பதவியில் ஒருவர் இருக்கலாம் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 61 வயதாகும் பிபின் ராவத் இன்னும் நான்காண்டுகள் இந்தப் பதவியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனகராஜ்
கனகராஜ்

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ``இது தேவையில்லாத முடிவு. ஒருவர் கையில் அதிகாரம் குவிவதென்பது ஆபத்தை விளைவிக்கும். ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும்" எனக் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேசும்போது,

``மூன்று தளபதிகள் இருந்தால், ஏதாவதொரு முடிவு எடுக்கும்போது மூன்று பேரின் கருத்துக்களைக் கேட்டு, கலந்து பேசி எடுக்க முடியும். இந்தியாவுக்கு இதுவரை பாகிஸ்தானுடன், சீனாவுடன், பங்களாதேஷுடன் பிரச்னைகள் இருந்திருக்கின்றன. அப்போதெல்லாம் நிதானமாக முடிவு எடுக்கவேண்டிய தேவை இருந்தது. மூன்று பேர் சேர்ந்து முடிவெடுப்பது ஜனநாயக ரீதியில் இருக்கும். இப்படி முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் இடத்தில் ஒருவர் இருந்தால், கண்டிப்பாக அவர் எடுக்கும் முடிவுகள் ஜனநாயக ரீதியாக இருக்காது.

முப்படைகளுக்கும் ஒரு தளபதி என வரும்போது, அதிகார துஷ்பிரயோகம் நடக்க வாய்ப்புள்ளது. எவ்வளவு ஜூனியராக இருந்தாலும்கூட முப்படைகளுக்கும் தளபதியாக வரமுடியும். அது மூன்று படைகளையும் ஒருங்கிணைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். அதைவிட முப்படைகளுக்கும் ஒரு தலைமைத் தளபதி என்கிற இந்த அதிகாரக் குவிப்பு, மிகவும் ஆபத்தான விஷயம். மத்திய அரசு ஏற்கெனவே அனைத்துத் துறைகளிலும் அதிகாரக் குவிப்பை கடைப்பிடித்துவருகிறது. இந்த அரசு மட்டுமல்ல, தொடர்ந்து அது நடந்து வருகிறது. கடந்த காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நடந்த வந்தது, இந்த ஆட்சியில் மிக வேகமாக நடக்கிறது. படைகளின் அதிகாரம் ஒரு கையில் போவதென்பது மிகப்பெரும் ஆபத்தாக அமையும்'' என்கிறார் கனகராஜ்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, 

``இது பலகாலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு விஷயம்தான். ஆனால், மோடி அரசு சமீபகாலமாக ராணுவம் சம்பந்தமான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்துவருகிறது. அதுதான் சந்தேகத்தைக் கிளப்புகிறது. குறிப்பாக புதிய ஆயுதங்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றை வாங்கிக் குவிக்கிறது. அதேபோல அணு ஆயுதங்களையும் `No first Use' அதாவது, யாராவது நம் நாட்டுக்கு எதிராகப் பயன்படுத்தினால் மட்டுமே, பதிலுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே நம் பாலிசியாக இதுவரை இருந்தது. தற்போது அவற்றையெல்லாம் மாற்றிவிட்டார்கள்.

`அடுத்தடுத்த வழக்குகள்; உடலில் குறைந்த பல்ஸ்!'- நெல்லை கண்ணனுக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை

ராணுவத்தின் மீதே தொடர்ச்சியாகக் கவனத்தைக் குவித்துச் செயல்பட்டால், அண்டை நாடுகளும் அதைச் செய்யும். அதனால் ராணுவத்துக்கு ஆகும் செலவு அதிகரிக்கும். அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகள் செய்யக்கூடிய அளவு இராணுவத்துக்காக இந்தியா செலவழிக்கிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு, இது தேவையா என்று யோசிக்கவேண்டும்.'' என்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.

ஶ்ரீனிவாசன்
ஶ்ரீனிவாசன்

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து, பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஶ்ரீனிவாசனிடம் பேசினோம்,

``பாதுகாப்பு சீரமைப்புக் கமிட்டியின் பரிந்துரையைத்தான் தற்போது அரசு நிறைவேற்றியிருக்கிறது. முப்படைத் தளபதிகளின் கமாண்டராக ஜனாதிபதி இருக்கிறார். அவரால் முழுக்கவனத்தையும் செலுத்த முடியாது. அதனால்தான், தனியாக ஒருவரை நியமித்திருக்கிறார்கள். பல நாடுகளில் இந்த முறை இருக்கிறது. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்தியாவின் ஜனநாயக் கூறுகள் பலமானவை. அவை, இந்தியாவை எப்போதும் ராணுவ ஆட்சியின் பக்கம் போகவிடாது. அந்தளவுக்குப் அச்சப்படத் தேவையில்லை '' என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு