Published:Updated:

பனிக்குள் பற்றவைத்த தீ... காஷ்மீர் இனி எரியுமா, ஒளிருமா?

வேடிக்கை என்னவென்றால் மாநில அந்தஸ்து கோரிப்போராடும் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு மாநில அரசை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ள மத்திய அரசின் முடிவை வரவேற்றிருப்பதுதான்.

காஷ்மீர்... பியூட்டிஃபுல் காஷ்மீர்... வொண்டர்ஃபுல் காஷ்மீர்... எம்.ஜி.ஆரை வியந்து பாடவைத்த இந்தியாவின் பேரெழில் பிரதேசம் காஷ்மீர், இப்போது இந்தியாவின் பேசுபொருளாகியிருக்கிறது. ஏறத்தாழ 70 ஆண்டு அந்தஸ்தை ஒரே நாளில் இழந்து நிற்கிறது இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து. அசுர பலம் கொண்டுள்ள மோடி அரசின் பெரும்பான்மை இதற்கு மூன்றே நாளில் முடிவு கட்டியிருக்கிறது.

வரலாற்றில் ஏற்பட்ட களங்கம் துடைத்து எறியப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் மாநில அந்தஸ்து கோரிப்போராடும் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு மாநில அரசை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ள மத்திய அரசின் முடிவை வரவேற்றிருப்பதுதான்.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுடன் காங்கிரஸ், தி.மு,க, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துள்ளன. ஜெயலலிதாவின் பேச்சை நினைவுகூர்ந்து அ.தி.மு.க ஆதரித்துள்ளது. இந்த முடிவை சட்டென எடுத்துவிடவில்லை மோடி அரசு. கடந்த சில வாரங்களாக இதற்காகக் காய்களை நகர்த்தி வந்தது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை நீடித்தது. தீவிரவாதிகள் தாக்குதல் தொடுக்கவுள்ளதாகக் கூறி காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை ரத்து செய்தது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

அங்கிருந்த யாத்ரீகர்களை உடனே ஜம்மு-காஷ்மீரை விட்டு வெளியே செல்லவும் உத்தரவு பிறப்பித்தது. 50,000-த்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி போன்ற தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தொலைத்தொடர்பு, இணையவசதி துண்டிக்கப்பட்டு ஒரு நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது காஷ்மீர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் இல்லாமல் அந்த மாநில ஆளுநர் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றம் கொண்டு வந்துள்ளதை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அமித் ஷாவின் ஒரே ஒரு அறிவிப்பின் மூலமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்ற அந்தஸ்தை இழந்து நிற்கிறது. சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பகுதிகளும் இருக்கும் என்கிறது இந்த அறிவிப்பு.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

மன்னர் ஹரிசிங் ஆட்சியின் கீழ் தனி நாடாக விளங்கிய ஜம்மு - காஷ்மீர் பகுதியை, இந்தியாவுடன் 1947-க்குப் பின் இணைக்க முன்வந்தபோது, அங்குள்ள மக்களுக்கு அப்போது இந்திய அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான, சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 & 35A அரசியல் சாசன உரிமைகளை மத்திய அரசு அளித்தது.

ஒரு நாட்டுக்குள்ளே தனி அரசியலமைப்புச் சட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே உண்டு. வடகிழக்கு மாநிலங்களுக்கும் சிறப்புச் சலுகை அந்தஸ்துகள், அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவர்களுக்குத் தனி அரசியலமைப்புச் சட்டம் கிடையாது. 370 என்பது காஷ்மீரை கிட்டத்தட்ட தனி நாடாகவே அங்கீகரிக்கிறது. காஷ்மீருக்கென தனிக்கொடி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காஷ்மீர் ஆண்கள் இந்தியாவின் எந்த மாநிலப் பெண்களையும் திருமணம் செய்யலாம். ஆனால், பிற மாநில ஆண்களை காஷ்மீர் பெண்கள் திருமணம் செய்தால் அதற்குப் பிறகு அந்தப் பெண் `காஷ்மீர் பெண்' என்ற அந்தஸ்தை இழப்பார். அதாவது காஷ்மீரில் அந்தப் பெண்ணுக்கு உள்ள சொத்துகளைக்கூட இழக்க வேண்டிவரும். காஷ்மீர் மாநிலத்தவர் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சொத்துகளை வாங்கலாம். ஆனால், இந்தியாவின் பிறமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்துகளை வாங்க முடியாது.

மோடி
மோடி

காஷ்மீர் மாநிலத்தவர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அரசுப்பணியில் இருக்கலாம், தொழில் செய்யலாம். ஆனால், பிற மாநிலத்தவருக்கு காஷ்மீரில் அரசுப்பணி கிடையாது. வேறு தொழிலும் செய்ய முடியாது.

காஷ்மீர் மாநிலத்தவர் இந்தியாவில் எங்கிருந்தாலும் அந்த மாநிலத்தின் சலுகைகளை அனுபவிக்கலாம். ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் அந்த மாநில அரசு வழங்கும் சலுகைகளை அனுபவிக்க முடியாது. காஷ்மீர் மாநிலத்தவர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், இந்தியாவின் பிறமாநிலத்தவர் காஷ்மீரில் தேர்தலில் போட்டியிட முடியாது. காஷ்மீர் மாநிலத்தவர் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் வாக்காளர் ஆக முடியும். ஆனால், இந்தியாவின் பிற மாநிலத்தவர் காஷ்மீரில் வாக்காளர் ஆக முடியாது.

அமித் ஷா
அமித் ஷா

காஷ்மீர் சட்டமன்றத்தில் காஷ்மீர் மாநில அரசு தாங்களாகவே சட்டம் இயற்றிக்கொள்ளலாம்.

போர்க்காலங்களில்கூட இந்திய அரசின் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது. காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதல் பெற்றே ராணுவ நடவடிக்களைக்கூட மேற்கொள்ள வேண்டும். காஷ்மீர் மாநில எல்லையைக் கூட்டவோ குறைக்கவோ மத்திய அரசுக்கு உரிமையில்லை. இப்போது இந்த அதிகாரம் அனைத்தையும் காஷ்மீர் இழக்கிறது. இதனால் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்கிறார்கள் இந்த நடவடிக்கையை ஆதரிப்பவர்கள்.

``ஜம்மு காஷ்மீரின் அமைதியைச் சீர்குலைக்கும் தீவிரவாதத்தின் அடிப்படை, வேலைவாய்ப்பின்மையில் தொடங்குகிறது. 80-களில் சுற்றுலாத்தொழில் அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது. பொருளாதாரம் சீராக இருந்தது. அதைக் குலைக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் மீதும் சுற்றுலாத்தலங்களிலும் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. சுற்றுலாத்தொழில் சரிவால் பொருளாதாரத்தை இழந்த மக்களைத் தீவிரவாதிகள் பணம் கொடுத்து இழுக்கப்பார்த்தனர். தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவம் நுழைந்தது. அவர்களின் அத்துமீறலும் அதிகமானது. மக்கள் இரு புறமும் தாக்குதலுக்குள்ளாயினர். இப்போது இந்த நடவடிக்கையால் அங்கு தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். வேலைவாய்ப்புப் பெருகும். தீவிரவாதம் படிப்படியாக முடிவுக்கு வரும். அந்த வகையில் இது நல்ல தொடக்கம்!’’ என்கின்றனர்.

புவி அரசியல்:

ஆனால், இதற்குப் பின்னால் சர்வதேச அளவில் சந்தித்த தோல்வி ஒரு காரணமாகவுள்ளது என்கிறது மற்றொரு தரப்பு. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொளுத்திப்போட்ட திரி இப்போது வெடித்திருக்கிறது என்கிறார்கள் இவர்கள்.

``என்னைச் சந்தித்த இந்தியாவின் பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்னையில் உதவுமாறு கேட்டுக்கொண்டார்’’ என்று சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார் ட்ரம்ப். அதற்கு இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பிரதமர் அலுவலகம் மறுப்புத் தெரிவித்திருந்தன.

அமெரிக்க அரசும் மழுப்பலாகப் பதில் அளித்திருந்தது. அதே சமயம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான் கான் பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் உள்ளன, அதில் சுமார் 40,000 தீவிரவாதிகள் செயல்படுவதாகக் கூறினார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

உலக அரங்கில் பாகிஸ்தான் பிரதமர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதன் பின்னணியில் பல அரசியல் பொருளாதார நிர்பந்தங்களை அமெரிக்க அரசு அளித்துள்ளது. அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானின் அரசுப்படைகளை பராமரிப்பதும் அங்குள்ள அமெரிக்கப்படைகளின் செலவுக்கு ஆண்டுக்கு சுமார் 6 பில்லியன் டாலர் ஒதுக்குவதும் ட்ரம்ப் அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படைகள் விலக்கிக்கொள்ளப்படும் என்றார். இப்போது அமெரிக்கா அடுத்த அதிபர் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. இன்னும், ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படவில்லை. அமெரிக்கா தனது தோல்வியை மறைக்க வேண்டும். அதற்கு பாகிஸ்தானிடம் பொறுப்பைக்கொடுத்துவிட்டு மெதுவாக இடத்தைக் காலி செய்கிறது அமெரிக்கா. இதற்குத்தானே ஆசைப்பட்டோம் என்று காத்திருந்த பாகிஸ்தான் இப்போது பெருமகிழ்ச்சியில் திளைக்கிறது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு கணிசமானது, அங்கு இந்தியாவின் பலம் அதிகரித்துவரும் சூழலில் தற்போது பாகிஸ்தானிடம் மறைமுகமாக பொறுப்பைக் கொடுத்திருப்பது இந்தியாவின் தோல்வியாகக் கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களின் உதவியுடன் இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்யும்.

ஆனால், தாக்குதல்களில் தனக்குச் சம்பந்தம் இல்லை என கை விரித்துவிடும். இது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. இந்தத் தோல்வி ஒரு பக்கம் என்றால், இந்திய தொழில்துறை பெரும் தேக்கநிலையில் இருக்கிறது. பொருளாதாரம் மந்த கதியில் மயங்கிக்கிடக்கிறது. இதை மறைப்பதற்காகவே அவசரகதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

எதிர்பார்ப்புகள் என்னென்ன?

* மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் பிரிவினைவாதக்குழுக்கள் இடையே பிரிவினை ஏற்படும்.

* தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் கட்டுக்குள் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

* காஷ்மீரில் படைகளைக்குவிக்க இனி மாநில அரசின் அனுமதி தேவையில்லை.

* லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த உதவும். ராணுவபலம் அதிகரிக்கும்.

* மாநிலம் பிரிக்கப்படுவதால் காஷ்மீரின் வலுவான மாநிலக்கட்சிகள் வலிமை இழக்கும், சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க-வுக்கு அனுகூலமான நிலை ஏற்படும் என்று அந்தக்கட்சி கணக்குப் போட்டிருக்கிறது.

* நிர்வாக ரீதியாகவும் இரண்டு பகுதிகளை எளிதாக நிர்வகிக்க முடியும் என்பதும் இந்த நடவடிக்கையை நியாயப் படுத்துவதற்கான ஒரு காரணியாகக் கூறப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

ஆனால் 70 ஆண்டுகளாக அனுபவித்த பல சிறப்புச் சலுகைகள் பறிபோகும் நிலையில், அங்கு ஒரு சமூகப் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது. மேலும், மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் அதிகளவில் குடியேறும்போது முஸ்லிம்களின் வலிமை குறைக்கப்படும். அது வேறுவிதமான மோதல்களை ஏற்படுத்தும். மொத்தத்தில் காஷ்மீர் பனிக்குள் நெருப்புப் பற்ற வைக்கப்பட்டுள்ளது.

இனி... காஷ்மீர் ஒளிருமா எரியுமா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு