Published:Updated:

கொரோனாவுக்கு நிதி... எங்கே கைவைக்க வேண்டும் பிரதமர்?

Indian Prime Minister Narendra Modi
Indian Prime Minister Narendra Modi ( AP / Anupam Nath )

தமிழ்நாடு, கேரளா போன்ற கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், நிதி கேட்டு மத்திய அரசிடம் கதறுகின்றன. எங்கே போய் நிதி திரட்ட வேண்டும் பிரதமர் மோடி?

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குத் தாராளமாக உதவ முன்வாருங்கள்… நிதி தாருங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ள நேரத்தில், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட ஒரு செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ``தேச நலன் கருதி மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை அரசிடம் தாருங்கள் என்று பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்” என்பதுதான் அந்தச் செய்தி. அதைப் பார்த்த அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். விசாரித்தபோது, அது பொய்ச்செய்தி என்பது தெரியவந்தது. அது பொய்ச்செய்தி என்றாலும்கூட, சாதாரண மக்களின் தங்க நகைகளை அரசு கேட்கும் அளவுக்கு சூழல் மோசமடையுமா, அப்படியொரு சூழல் வந்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் மனத்தில் எழுந்தது.

`நிதி தாருங்கள்' என்று மக்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், 'நிதி தாருங்கள்… நிதி தாருங்கள்…' என்று மத்திய அரசை நோக்கி எல்லா மாநிலங்களும் குரல் கொடுத்துவருகின்றன. ஒரே நேரத்தில் எல்லா மாநிலங்களும் நிதி கேட்டால், அவ்வளவு பணத்துக்கு பிரதமர் மோடி என்ன செய்வார், அவ்வளவு நிதியை அவர் யாரிடம் போய் கேட்பார் என்பவை நியாயமான கேள்விகள். ஆனாலும், வேறு வழியே இல்லை. ``மோடி எங்கள் டாடி” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னார். ராஜேந்திர பாலாஜிக்கு மட்டுமல்ல, பிரதமர் என்ற முறையில் ஒட்டுமொத்த தேசத்துக்கும் மோடிதான் தந்தை. தற்போதைய இடர்மிகு சூழலில், 135 கோடி பிள்ளைகளையும் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் பிரதமருக்கு இருக்கிறது.

ஆனால், அந்தத் தகப்பனின் தலைமையில் இருக்கும் அரசு, மாநிலங்களிடம் பாகுபாடு காட்டுவதாகப் புகார்கள் கிளம்புவது கவலைக்குரியது. கொரோனாவால் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துவரும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு உரிய நிதியைத் தராமல் இருப்பது வருத்தத்துக்குரியது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 700-ஐத் தாண்டிவிட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தமிழ்நாடு வந்துவிட்டது. முதலாம் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா, சமூகப்பரவல் என்கிற 3-ம் கட்டத்தை எட்டிவிட்டதாக வரும் செய்தி, தமிழக மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு இன்னும் நிதி வரவில்லை என்பது பெரும் கவலைக்குரியது. இதனால், தமிழகம் மிகப்பெரிய அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

போதுமான வென்டிலேட்டர்கள் இல்லை, போதுமான அளவுக்கு N-95 முகக்கவசங்கள் இல்லை என இன்றைக்கும் மருத்துவ சமூகம் கதறிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து பணம் வந்தால்தான் அவற்றை வாங்க முடியும். எனவேதான், ரூ.3,000 கோடியை உடனடியாக வழங்குமாறு பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கோரிக்கை வைத்தார். ஆனால், மத்திய அரசிடமிருந்து பதிலே இல்லை. மத்திய அரசின் உதவி இல்லாமல், தன்னிடம் இருக்கும் நிதியைக் கொண்டு தமிழக அரசு எப்படியோ சமாளித்துவருகிறது. டாஸ்மாக் வருமானம் உள்பட அனைத்து வருமானங்களும் நின்றுவிட்டன. இப்படியே எத்தனை நாள்களுக்கு வண்டி ஓடும் என்பது தெரியாது. கேரளா உட்பட பல மாநிலங்களின் நிலைமையும் இதுதான்.

மத்திய அரசு ஜிஎஸ்டி-யைக் கொண்டுவந்த பிறகு, மாநிலங்களின் வரி வருவாய் குறைந்துவிட்டது. மாநிலங்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்த வரி வருவாய் எல்லாம் மத்திய அரசுக்குப் போய்க்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், சொந்த நிதியை மாநிலங்கள் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. ஜிஎஸ்டி வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு பங்கு தருவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், அதை அவர்கள் கொடுக்கவில்லை. ஜிஎஸ்டி இழப்பீடு தருவதாகச் சொன்னார்கள். அதையும் தரவில்லை. மாநில அரசு கூடுதலாகக் கடன் வாங்கிக்கொள்வதற்கு வசதியாக, விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநிலங்கள் கேட்டுவருகின்றன. அதற்கும் பதில் இல்லை. மாநிலங்களுக்கு வந்துகொண்டிருந்த நிதியெல்லாம் மத்திய அரசுதானே பெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த நிதியெல்லாம் எங்கே போனது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுகிறது.

G S T
G S T

பணம் கொடு, பணம் கொடு என்று எல்லோரும் கேட்டால் மத்திய அரசு என்ன செய்யும்; பணத்துக்கு மத்திய அரசு எங்கே போகும் என்ற கேள்விகளை சிலர் எழுப்பலாம். நியாயமான கேள்விகள்தான். சமூகத்தின் மீதும் சாமான்ய மக்கள் மீதும் அக்கறை கொண்ட திறமையான பொருளாதார அறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை அரசு அழைத்துப்பேச வேண்டும். அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்பட்டாலே தற்போதைய நெருக்கடிகளிலிருந்து எளிதாக மீண்டுவிட முடியு.ம்

ரிசர்வ் வங்கியில் `மூலதன இருப்பு’ என்கிற பெயரில் கணிசமான தொகை எப்போதும் இருக்கும். கொரோனா போன்ற நெருக்கடி காலத்தில், மூலதன இருப்பை எடுத்து செலவு செய்யலாம். இதுதான் அதன் நோக்கமும்கூட. ஆனால், அந்த நிதியில் ஏற்கெனவே மத்திய அரசு கைவைத்துவிட்டது. நீண்டகாலமாகவே அந்த நிதி, மத்திய ஆட்சியாளர்களின் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. அதை எடுப்பதற்கு அரசு நடவடிக்கைகள் எடுத்தபோது, எதிர்க்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், எச்சரித்தார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மூலதன இருப்பிலிருந்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை கடந்த ஆண்டு எடுத்துவிட்டது மத்திய அரசு. அதை என்ன செய்யப்போகிறீர்கள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியபோது, அதை நியாயமான காரணங்களுக்கு செலவிடுவோம் என்றார். அந்தப் பணம் கடைசியில் யாருக்குப் போனது தெரியுமா? பெரும் தொழிலதிபர்கள் `கஷ்டப்படுகிறார்கள்’ என்று சொல்லி, அந்தப் பணத்தை அப்படியே அவர்களுக்கு தூக்கிக்கொடுத்துவிட்டார்கள். கோடிக்கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் சூழலில், பெரும் தொழிலதிபர்களிடமிருந்து அந்தப் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தேசம் முடக்கப்பட்டுக்கிடக்கும் தற்போதைய சூழலில், 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வேலையிழந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்தச் சூழலில், கொரோனா தடுப்புக்காகவும், வேலையிழந்த மக்களுக்கு நிவாரணமாகவும் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் வெளியிட்டார். என்ன கொடுமையென்றால், அதில் ரூ.30,000 கோடி மட்டுமே புதிய நிதி. மற்றதெல்லாம் வழக்கமாக செலவிடப்படுகிற நிதி. அதுவும்கூட, நிதியமைச்சர் அந்த அறிவிப்பை வெளியிட்டு பல நாள்களாகியும், அனைத்து மக்களையும் இன்னமும் அது சென்றுசேரவில்லை என்று செய்திகள் வருகின்றன.

பிரதமர் தலைமையிலான அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு, லாக்-டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு மாத காலத்துக்கு மேல் ஒட்டுமொத்த தேசமும் முடக்கப்படுகிறது என்றால், எவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்படும். அந்தப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமா? ரூ.30,000 கோடி, ரூ.50,000 கோடியெல்லாம் எந்த மூலைக்கு? உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இந்தியாவில் 30 கோடிப் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும், அவர்களில் 3-3.5 சதவிகிதம் பேர் மரணமடைய நேரிடும் என்று உலக அளவில் வல்லுர்கள் எச்சரித்துள்ளனர். அப்படியிருக்கும்போது, மத்திய அரசு தன் முழு அதிகாரங்களையும் இந்தச் சமயத்தில் பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசின் முன்பாக இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினால் மட்டுமே தற்போதைய நெருக்கடியிலிருந்து இழப்புகள் இல்லாமல் மீண்டுவர முடியும். அது ஒன்றும் அரசுக்கு பெரிய விஷயம் இல்லை. இருப்பவர்களிடமிருந்து வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுப்பது என்ற நடவடிக்கையில் அரசு இறங்கினால் போதும்.

அம்பானி, டாடா
அம்பானி, டாடா

கடந்த பல மாதங்களாக, இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி (ஜி.டி.பி) கவலைக்குரிய வகையில் குறைந்துள்ளது. மிக மோசமான அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. ஐந்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட் விற்பனை குறையும் அளவுக்கு, உள்ளாடைகளின் விற்பனை சரியும் அளவுக்கு மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் இந்தியாவில் பில்லியனர்கள் எனப்படும் மிகப் பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய செல்வந்தர்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தில் உள்ளது. ஆசிய அளவில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த முரண்பாடு எங்கே இருக்கிறது என்கிற ஆராய்ச்சியைக்கூட பிறகு செய்துகொள்ளலாம். ஆனால், இருப்பவனிடமிருந்து வாங்கி இல்லாதவனுக்கு கொடுப்பது என்ற சூத்திரத்தை அரசு கையாள வேண்டும்.

ஆனால், எங்கு கைவைக்க வேண்டுமோ அந்த இடத்தை மோடி அரசு நெருங்கவே இல்லை. மாறாக, எம்.பி-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைக்கிறார்கள். இதை நிறுத்தினால் அரசுக்கு ரூ. 7,600 கோடி கிடைக்கும். ஆனால், இதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். பெரும்பாலான எம்.பி-க்கள் தங்கள் சொந்தத் தொகுதியின் வளர்ச்சிக்குத்தான் இந்த நிதியைப் பயன்படுத்துகிறார்கள். பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனை கட்டடங்கள் என அத்தியாவசியமான வளர்ச்சிப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. இதை மொத்தமாக அரசு எடுத்துக்கொண்டால், அதை எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற ஆபத்து இருப்பதை அரசுக்கு எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால், அரசு தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

மக்கள்
மக்கள்

இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரியது. 5 மில்லியன் அமெரிக்க டாலர் குறித்து கனவு காணும் அளவுக்கு நம்பிக்கை தரக்கூடிய பொருளாதாரம் நம்முடையது. இந்தியாவின் வரி வருவாய் ரூ. 22 லட்சம் கோடி. அதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி, சுமார் எட்டு லட்சம் கோடி. பேரிடர் நிதி என்று வரியில் ஒரு சதவிகிதம் கூட்டினால்கூட, பல லட்சம் கோடி நிதி கிடைத்துவிடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதை உடனடியாக பிரதமர் செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால், 500 மைல், 1000 மைல் என்று குடும்பம் குடும்பமாக நடந்துசென்ற பெருந்துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் சாமான்ய மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டிய தேவை இருக்காது. மாறாக, அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்துவிடலாம்.

தேச முடக்கத்தால் அதிகமான பாதிப்புகளை அனுபவித்துவருபவர்கள் அடித்தட்டு மக்கள். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். ஆட்சியாளர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கிநிறுத்தக்கூடிய சக்தி அடித்தட்டு மக்களுக்கு மட்டுமே உண்டு. அவர்களின் உழைப்பு இல்லாமல், நாட்டில் எந்த வேலையும் நடக்காது. அவர்களின் உழைப்பு இல்லாமல் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் சாத்தியம் கிடையாது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மற்ற நாடுகளில் கொரோனாவால் கொத்துக்கொத்தாக மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது, இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தது. அதன் கடைசி நாளன்று முக்கியமான ஓர் அறிவிப்பாணையை அரசு பிறப்பித்தது. என்னவென்றால், ரூ.20,000 கோடியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான குடியிருப்புகள், பிரதமரும் அமைச்சர் பெருமக்களும் காரில் செல்வதற்கான புதிய சாலைகள் போன்றவற்றைக் கட்டுவதற்கான அறிவிப்பாணை அது. இந்த நேரத்தில், அதற்கு ரூ.20,000 கோடி தேவையா? அதை ரத்து செய்தால் பல மாநிலங்களுக்கு உதவ முடியும்.

இந்த நேரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு முக்கியமான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யுமாறு உத்தரவிடக் கோரி அவேக் ஃபார் டிரான்ஃபரன்சி என்ற அமைப்பைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் தாக்கல் செய்த மனுவை, நிதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு விசாரித்தது. அப்போது, ``கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியாவில் 2-ம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ.510 கோடி போதுமானதாக இருக்காது. கொரோனா தொற்று குறைவாக இருக்கும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்கும் மத்திய அரசு, அதிக பாதிப்புள்ள தமிழகத்துக்கு ஏன் குறைவாக ஒதுக்கியுள்ளது? இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை தாமாக முன்வந்து இந்த நீதிமன்றம் சேர்க்கிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு என்ன பதில் அளிக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

அதானியுடன் மோடி
அதானியுடன் மோடி

கடைசியாக ஒரு முக்கியமான செய்தி. ஐந்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்க முடியாத அளவுக்கு மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ள நேரத்தில்தான், இந்தியாவில் பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில், அந்தப் பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை வெறும் ஒரு சதவிகிதம். ஆனால், அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்தியாவின் 70 சதவிகித மக்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைக் காட்டிலும் அந்த ஒரு சதவிகிதத்தவரின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு அதிகம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அந்த சொத்துக்களுக்கெல்லாம் இந்த நேரத்தில் வரி விதித்தாலே, நம் அரசுக்கு மிகப்பெரிய நிதி கிடைக்கும். இதையெல்லாம் செய்வதற்கு மனோதிடமுள்ள நம் பிரதமர் நரேந்திர மோடியால் நிச்சயம் முடியும். செய்வாரா?

அடுத்த கட்டுரைக்கு