Published:Updated:

டிசம்பர் 15-க்குள் `ஃபாஸ்டேக்' கட்டாயம்... இத்திட்டத்தால் யாருக்கு லாபம்?

சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதால், இந்தியர்களுக்கு சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 151 ரூபாய் நஷ்டம் ஆகிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதைத் தடுக்க, வாகனங்களில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் யாருக்கு லாபம்?

டிசம்பர் 1 அன்று அமலுக்கு வருவதாக இருந்த `ஃபாஸ்டேக்' பயன்பாட்டை, டிசம்பர் 15 வரை தள்ளி வைத்து அறிவித்தார் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி. நவம்பர் 30 வரை இந்தியாவின் பெரும்பாலான போக்குவரத்து வாகனங்கள் `ஃபாஸ்டேக்' ஸ்டிக்கரைப் பொருத்தாததால், இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது நெடுஞ்சாலைத்துறை.

2014-ம் ஆண்டு, மத்திய போக்குவரத்துத் துறை மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், இந்தியர்கள் நெடுஞ்சாலைகளிலுள்ள சுங்கச் சாவடிகள் காத்திருப்பதால் நாட்டின் பொருளாதாரம் குறைவதாகவும் காத்திருப்பு நேரத்தில் செலவாகும் எரிவாயுவின் மதிப்பு ஆண்டுக்கு 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் கணக்கிட்டது. இதனால் இந்தியர்களுக்கு சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 151 ரூபாய் நஷ்டம் ஆகிறது எனக் கணக்கிடப்பட்டது.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

``வாகனங்களின் மைலேஜை, அவற்றின் திறனை அதிகரித்து, சாலை வசதிகளை மேம்படுத்தி, காத்திருக்கும் நேரத்தைக் குறைத்தால், அது இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்கிறது மத்திய அரசின் அறிக்கை. இதை முன்வைத்து, வாகனங்கள் சுங்கச் சாவடிகள் நிற்காமல், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் பொருத்தப்பட்ட வாகனங்கள் அதற்கென்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் வழியில் செல்லலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது. சுங்க கட்டணம், ஃபாஸ்டேக் மூலம் இணைய வழியில் பிடித்தம் செய்யப்படும். இந்தச் செயல்பாட்டை மத்திய அரசு இந்தியா முழுவதும் கட்டாயமாக்கி அறிவித்தது.

இதற்காக 22 தனியார் வங்கிகளில் ஃபாஸ்டேக் விற்பனைக்கு கிடைக்கும் எனவும், மத்திய அரசு முகாம்கள் அமைத்து ஃபாஸ்டேக்களை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான வங்கிகள் ஃபாஸ்டேக் விற்பனையைக் குறிப்பிட்ட சில நாள்கள் வரை இலவசமாக வழங்குகின்றன. எனினும், கணக்கு வைத்திருக்காத வங்கியில் இந்த அட்டையை வாங்கும்போது Security deposit, Reissuance fees, Threshold amount என 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை பெறப்படுகிறது.

சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 1  முதல் அமல்படுத்தப்படும் ஃபாஸ்ட் டேக் என்பது என்ன?
Payment Ways
Payment Ways
fastag

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட போக்குவரத்துத் துறையைச் சார்ந்தவர்கள் இந்த நடவடிக்கை மிகப்பெரிய பொருளாதார நலன்களுக்கு இட்டுச் செல்லும் எனக் கூறியுள்ளனர். எனினும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, தங்களுக்குத் தேவையே இல்லாதபோதும், சாமான்யர்கள் மீது டிஜிட்டல் பரிவர்த்தனை வலிந்து திணிக்கப்பட்டதுபோல, இந்தத் திட்டமும் திணிக்கப்பட்டுள்ளது எனக் கண்டன குரல்கள் எழுகின்றன. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் சூழலில், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் இரண்டு மடங்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்பது சாமான்யர்கள் மீதான திணிப்பாகவே பார்க்கப்படுகிறது. மேலும், இதைக் கட்டுப்படுத்தும் இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் (Indian Highway Management Company Limited) என்பது தனியார் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் தனியார் வங்கிகளின் பங்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இயக்குநர்களுள் ஒருவரான சுதிப்தா ராய், இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பதே இதற்கான உதாரணம். கடந்த அக்டோபர் மாதம் 20 லட்சம் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்களை விற்று, சாதனை படைத்திருப்பதாகக் கூறியுள்ளது.
ஃபாஸ்டேக்
ஃபாஸ்டேக்
Fastag

வழக்கமாக, இணைய பரிவர்த்தனைக்காக வங்கிகளுக்கு மத்திய அரசு 0.9 சதவிகிதம் பணம் அளித்து வருகிறது. ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளுக்காக இது 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதும் சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. இந்தியா முழுவதும் ஏறத்தாழ 7 கோடி நான்கு சக்கர, கன ரக, இலகு ரக வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்துக்கும் குறைந்தபட்சமாக 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு, தனியார் வங்கிகளின் கருவூலத்துக்கு செலுத்தப்படுகிறது. இதன் மதிப்பைக் கூட்டினால், ஏறத்தாழ 3,500 கோடி ரூபாய்க்கு குறையாமல் வங்கிகளுக்கு பணம் செல்கிறது. இதன்மூலம், ஃபாஸ்டேக் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் போன்றே அமைகிறது.

தமிழர், இந்தியர் வாக்குகளைக் குறிவைத்து நகரும் பிரிட்டன் தேர்தல்... பி.ஜே.பி தலையிடுகிறதா?

மேலும், இந்தியா முழுவதும் இதுவரை செயல்பட்டு வந்த சுங்கச் சாவடிகளில் ஈட்டப்பட்ட பணம் முழுவதும் வங்கிக்குச் செல்லவில்லை எனவும் அதில் முறைகேடுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்தப் பணம் முழுவதும் நேரடியாக வங்கிக்குச் செல்வதற்கான வழிமுறையை அரசு அமல்படுத்தியுள்ளது. எனினும், இதனால் பாதிக்கப்படுபவர்கள் சாமான்யர்களே.

ட்விட்டர் முழுவதும் `ஃபாஸ்டேக்' என்று தேடினால், ஒவ்வொரு பயனாளரும் தங்கள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்கள் ஆக்டிவேட் செய்யப்படவில்லை, பிரச்னைகள் இருக்கின்றன என வெறும் புகார்களாக நீள்கின்றன. ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்கள் செய்வதற்காக 3M, Perfect RFID, ஸ்டார் சிஸ்டம்ஸ் ஆகிய சர்வதேச நிறுவனங்களும், 10 உள்நாட்டு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இந்தியா போன்ற மிகப்பெரிய நாடு இதை நாடுவதால், சர்வதேச அளவில் RFID வியாபாரம் அதிகரித்துள்ளது. இனி விரைவில், வாகனங்கள் பார்க்கிங், அபராதங்கள் முதலானவற்றிலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tollgate
Tollgate

இந்தியா டிஜிட்டல்மயப்படுவது எதிர்காலத்தை நோக்கிய திட்டங்களில் ஒன்று. ஆனால், ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்கப்படும் தேசத்தில், தன் அன்றாட வாழ்க்கைக்காக வாகனங்களை ஒவ்வொரு நெடுஞ்சாலையிலும் இயக்கும் சாமான்யனின் மீது டிஜிட்டல் பரிவர்த்தனையைத் திணிப்பதும் அதன் மூலம் தனியார் வங்கிகள் லாபம் பெறுவதும் ஏற்புடையதல்ல.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு