Published:Updated:

பிமல் பட்டேல் - நரேந்திர மோடி: சபர்மதியில் இருந்து டெல்லி வரை தொடரும் குஜராத்திகளின் நட்பு

பிமல் பட்டேல் - மோடி
பிமல் பட்டேல் - மோடி

இந்த குஜராத்திகளின் நட்பு, சபர்மதி தொடங்கி தற்போது ராஜ்பத் வரை நீள்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, பிரதமர் மோடி டெல்லிக்கு வந்தது முதல் மத்திய அரசில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் பல முக்கிய இடங்களைப் பிடிக்கத் தொடங்கினர். இன்று, பாரதிய ஜனதா கட்சியிலும் ஆட்சியிலும் அதிகார பீடத்தின் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மோடி மற்றும் அமித் ஷா என இருவரும் குஜராத்தைச் சேர்ந்தவர்களே. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாக ஆட்சியில் அமர்பவர்கள், நிர்வாகக் காரணங்களுக்காக, அவர்களுக்கு நன்கு பழகியவர்களை முக்கியமான பொறுப்புகளில் நியமிப்பது வழக்கமானது.

மோடி பதவியேற்பு
மோடி பதவியேற்பு

அதுபோலத்தான், மத்திய அரசின் முக்கியப் பொறுப்புகளில் குஜராத் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவதும் தொடர்ந்தது. ஆனால், அரசுக்கு வெளியேயும் குஜராத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் தொடர்கிறது. அதில் முக்கியமானவர் பிமல் பட்டேல். 2019 தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த மோடி, நாடாளுமன்ற வளாகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்கிற அவரின் கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கான ஒப்பந்தமும் குஜராத்தைச் சேர்ந்த பிமல் பட்டேலுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மறுசீரமைப்புத் திட்டம்

இதற்கான திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை, புதிய திட்டத்துக்கான டெண்டர்களை வரவேற்றது. இறுதியில், இதற்கான டெண்டர் குஜராத்தைச் சேர்ந்த பிமல் பட்டேலின் ஹெச்.சி.பி டிசைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களான சபர்மதி நதிக்கரை சீரமைப்புத் திட்டம், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடம் ஆகியவற்றையும் பிமல் பட்டேலின் நிறுவனம்தான் மேற்கொண்டுவருகிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்தப் புதிய திட்டத்தின்படி, இந்தியா கேட் மற்றும் ராஷ்டிரபதி பவனுக்கு இடையே உள்ள பகுதிகள் புதுப்பொலிவு பெற இருக்கின்றன. இந்தப் பணிகள், 2022 நவம்பருக்கு முன்பாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. அத்துடன், நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடமும் 2022-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தப்பணிகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு, புதிய ஒருங்கிணைந்த நாடாளுமன்றச் செயலகமும் 2024-ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

``தற்போதைய நாடாளுமன்ற வளாகத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதால், புதிய கட்டடத்துக்கான தேவை எழுந்துள்ளது. வளாக சீரமைப்பின்போது, நாடாளுமன்றக் கட்டடம், தெற்கு மற்றும் வடக்கு வளாகங்கள் புராதன சின்னங்கள் என்பதால், அதில் எந்த மாற்றமும் செய்யாமல் மேம்படுத்தப்படும்” என்று அரசு தெரிவித்துள்ளது.

யார் இந்த பிமல் பட்டேல்?

அகமதாபாத்தில் பிறந்த பிமல் பட்டேலின் தந்தை ஹஷ்முக் பட்டேலும் கட்டட வடிவமைப்புத் துறையில் ஜாம்பவனாகத் திகழ்ந்தவர். 1990-ல் இந்தியா திரும்பி, தன்னுடைய தந்தையின் நிறுவனத்தில் இணைந்து பணிபுரியத் தொடங்கிய பிமல் பட்டேல், அகமதாபாத் ஐஐடி-க்கான புதிய கட்டடத்தை வடிவமைப்பதில் மிக முக்கியப் பங்காற்றினார்.

பிமல் பட்டேல்
பிமல் பட்டேல்

பிரதமர் மோடிக்கும் பிமல் பட்டேலுக்குமான ஒற்றுமை... இவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, குஜராத் மாடலின் முக்கியத் திட்டமான சபர்மதி நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தியவரும் பிமல் பட்டேல்தான். மோடியின் மற்றுமொரு கனவுத் திட்டமான வாரணாசி-காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடத்துக்கான ஒப்பந்தம், பட்டேலின் நிறுவனத்துக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. மோடி, குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில், குஜராத் அரசின் பல திட்டங்கள் பிமல் பட்டேல் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பிமல் பட்டேலுக்கு 2019-ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு இவர் வடிவமைத்து செயல்படுத்திய சபர்மதி நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்காக, `பிரதமர் விருது’ம் பெற்றிருக்கிறார்.

பிரமாண்ட திட்டங்களுக்குப் பெயர்போன பிமல் பட்டேல் மற்றும் அவரின் நிறுவனத்தின்மீது சர்ச்சைகளும் இருக்கவே செய்கின்றன. சபர்மதி நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்காக, அந்த நதிக்கரையோரம் வசித்துவந்த குடிசைவாசிகளை அப்புறப்படுத்தியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. மேலும், அந்த திட்டத்தைச் செயல்படுத்துவதால், பல சூழலியல் சீர்கேடுகளை உருவாக்கும் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்தத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

பிமல் பட்டேல்
பிமல் பட்டேல்
ரூ.191 கோடி, 7,000 கி.மீ பயணம்!- குஜராத் முதல்வருக்காகத் தயாராகும் சொகுசு விமானம்

கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயில் வரை வழித்தடத்தை உருவாக்குவதற்கான பிரமாண்ட திட்டம்தான் காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடம். அதற்காக, காசி விஸ்வநாதர் கோயிலைச் சுற்றியுள்ள கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன. காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்திலேயேதான் ஞான் வாபி மசூதியும் இடம்பெற்றுள்ளது. வாரணாசி நகரின் கலாசாரத்தை இந்துமயப்படுத்துவதாக இந்தத் திட்டத்தின்மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தற்போது, பிரதமர் மோடியின் அடுத்த கனவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பும் பிமல் பட்டேல் வசம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த 100, 150 ஆண்டுகளுக்கானதாக நாடாளுமன்ற மறுசீரமைப்புத் திட்டம் இருக்கவேண்டும் என மோடி கூறியிருக்கிறார். இந்த குஜராத்திகளின் நட்பு, சபர்மதி தொடங்கி தற்போது ராஜ்பத் வரை நீள்கிறது.

அடுத்த கட்டுரைக்கு