Election bannerElection banner
Published:Updated:

திருவையாறு தொகுதி தி.மு.க வேட்பாளர் யார்... புதியவருக்கு வாய்ப்பா? - தஞ்சை தி.மு.க-வில் சலசலப்பு

துரை.சந்திரசேகர்
துரை.சந்திரசேகர்

`இங்கு புதிதாக யாரையாவது களமிறக்கினால்தான் தி.மு.க வெற்றிபெற முடியும்’ எனக் கட்சித் தலைமைக்கு ஐபேக் அறிவுறுத்தியிருப்பதாக இப்பகுதி தி.மு.க-வினர் தெரிவிக்கிறார்கள்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு தொகுதியில் தி.மு.க சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பும் யூகமும் உச்சநிலையில் உள்ளன. இங்கு ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் துரை.சந்திரசேகருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா, அதற்கு எந்த அளவுக்கு சாத்தியம் இருக்கிறது என தி.மு.க வட்டாரத்திலும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பல்வேறு யூகங்களும் விவாதங்களும் நிலவுகின்றன.

தி.மு.க நேர்காணலில்...
தி.மு.க நேர்காணலில்...

திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் ஆறு முறை போட்டியிட்டு நான்கு முறை வெற்றிபெற்றவர் துரை.சந்திரசேகர். தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ-வான இவர், தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் பதவி வகித்துவருகிறார். இந்தத் தொகுதி தி.மு.க-வில் இவர்தான் மிகவும் சீனியர். எல்லாவற்றுக்கும் மேலாக, நடிகர் சிவாஜி கணேசனைத் தோற்கடித்தவர் என்பது இவருக்குக் கூடுதல் இமேஜ்.

1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நடிகர் திகலகம் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து, இந்தத் தொகுதியில் போட்டியிட்டபோது, தி.மு.க சார்பில் யாரை நிறுத்தலாம் என கட்சித் தலைமை பரிசீலனை செய்து, துரை.சந்திரசேகரை களத்தில் இறக்கியது. நடிகர் திலகத்தை எதிர்த்து நின்று, வெற்றிபெறுவது என்பது சாத்தியமே இல்லை என்றுதான் அப்போது பலரும் நினைத்தார்கள். கட்சித் தலைமையும்கூட அப்படித்தான் கருதியது. காரணம், அப்போது துரை.சந்திரசேகர் தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாத இளைஞர். ஆனால், அந்தத் தேர்தலில் துரை.சந்திரசேகர் வெற்றிபெற்று, தமிழ்நாடு அளவில் கவனம் பெற்றார். 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் திலகத்தைத் தோற்கடித்தார்.

துரை.சந்திரசேகர்
துரை.சந்திரசேகர்

அதற்கு அடுத்து நடந்த 1991-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் துரை.சந்திரசேகர் களமிறக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மரணத்தால் ஏற்பட்ட அரசியல் அலையில், துரை.சந்திரசேகர் தோற்றுப்போனார். அதன் பிறகு 1996, 2001, 2006, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க சார்பில் துரை.சந்திரசேகர் களமிறக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு தேர்தலைத் தவிர மற்ற தேர்தல்களில் வெற்றிபெற்றார்.

2001 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராகக் களம் இறங்கிய அய்யாறு வாண்டையாரிடம் துரை.சந்திரசேகர் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது. 2011 தேர்தலில் செல்லக்கண்ணு என அழைக்கப்படும் அரங்கநாதனுக்கு தி.மு.க வாய்ப்பளித்தது. ஆனால் அவர் அ.தி.மு.க வேட்பாளர் ரத்னாசாமியிடம் தோற்றுப்போனார். 2016-ல் மீண்டும் களமிறக்கப்பட்ட துரை.சந்திரசேகர் வெற்றிபெற்று தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.

வரகூர் கார்த்திகேயன்
வரகூர் கார்த்திகேயன்

இந்தநிலையில்தான் தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இங்கு போட்டியிட, தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறார் துரை.சந்திரசேகர். ஆனால் இவருக்கு மீண்டும் சீட் கிடைப்பது சந்தேகம்தான் என்கிறார்கள் இப்பகுதி தி.மு.க-வினர். தொகுதிக்குப் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் இவர் கொண்டுவரவில்லை. குறிப்பாக, திருவையாறு நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வுக்காண எந்த ஒரு முயற்சியையும் இவர் மேற்கொள்ளவில்லை என இப்பகுதி மக்களிடம் மட்டுமல்லாமல், தி,மு.க-வினரிடமும் ஆதங்கம் நிலவுகிறது.

இங்கு உட்கட்சிப் பூசலும் அதிகமாக இருக்கிறது. இதெல்லாம் ஒருபுறமிருக்க, புதிதாக யாரையாவது களமிறக்கினால்தான் தி.மு.க வெற்றிபெற முடியுமென கட்சித் தலைமைக்கு ஐபேக் அறிவுறுத்தியிருப்பதாக இப்பகுதி தி.மு.க-வினர் தெரிவிக்கிறார்கள். இங்கு போட்டியிட சீட் கேட்டு தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர், வரகூர் கார்த்திகேயன், சித்திரகுடி திருமுருகன், செல்லக்கண்ணு, கடம்பங்குடி சீனிவாசன், பன்னீர்செல்வம், ஒரத்தூர் மனோகரன், கூனம்பட்டி பாஸ்கர், சதீஷ், சிவா உட்பட 18 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். கடந்த 5-ம் தேதி நேர்காணல் நடைபெற்றிருக்கிறது.

சித்திரக்குடி திருமுருகன்
சித்திரக்குடி திருமுருகன்

இவர்களில் யாருக்கு வாய்ப்பு அதிகம்? கட்சியின் உள்விவகாரங்கள் நன்கு அறிந்தவர்களிடம் பேசினோம்.`` இந்த 18 பேரில் சிட்டிங் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரைத் தவிர மற்றவர்கள் அதிகம் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள். தேர்தலில் செலவு செய்வது சிரமம். ஆனால், மற்ற 17 பேரும் நேர்காணலின்போது ஒருமித்த குரலில் ஒரு கருத்தைப் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். அதாவது, `துரை.சந்திரசேகருக்கு ஆறு முறை வாய்ப்பு கொடுத்துவிட்டீர்கள். இந்த முறை கண்டிப்பாகப் புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்பதே அது. தங்களுக்கு தராவிட்டாலும் பரவாயில்லை எனப் பலரும் இதையே தெரிவித்திருக்கிறார்கள். இவர்களில் சித்திரக்குடி திருமுருகன் பெயரும், வரகூர் கார்த்திகேயன் பெயரும் தீவிர பரிசீலனையில் இருக்கின்றன.

சித்திரகுடி திருமுருகன், பாரம்பர்யமான தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். தி,மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக பதவிவகித்தவர். கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுக் கட்டுமானப் பொருள்கள் விற்பனை தொழில் செய்துவருகிறார். நேர்காணலின்போது, தனக்கு சீட் கொடுத்தால் 3சி வரை செலவு செய்வதாக உறுதி அளித்திருக்கிறார் என்கின்றனர்.

வரகூர் கார்த்திகேயன் ஓரளவுக்கு வசதி படைத்த விவசாயி. கட்சியின் ஒன்றிய பிரதிநிதியாக இருக்கிறார். இவரின் மனைவி, ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். இவரின் தந்தையும் சகோதரரும் முன்பு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார்கள். தொகுதி முழுக்க கட்சிக்காரர்களிடம் வரகூர் கார்த்திகேயனுக்கு நல்ல அறிமுகம் உள்ளது. நேர்காணலின்போது இவரும் அதே தொகையைச் செலவு செய்வதாக தெரிவித்திருக்கிறாராம்.

`அண்ணனுக்குத்தான் சீட்; இல்ல அஞ்சுகத்துக்குத்தான் சீட்!’ - குழம்பி நிற்கும் தஞ்சை தி.மு.க-வினர்

இவர்கள் இருவருக்கும் இதெல்லாம் ப்ளஸ்ஸாக இருந்தாலும்கூட, தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்கு கட்சித் தலைமையிலுள்ள வி.வி.ஐ.பி-களின் ஆசீர்வாதம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக டி.ஆர்.பாலு, கேன்.நேரு ஆகியோர் இவருக்கு சீட் வாங்கிக் கொடுப்பதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார்கள். துரை.சந்திரசேகர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார். ஏற்கெனவே இவருக்குப் பல முறை தேர்தலை எதிர்கொண்ட அனுபவம் இருக்கிறது. அ.தி.மு.க செல்வாக்கு பெற்ற இத்தொகுதியில் துரை.சந்திரசேகரால்தான் சமாளிக்க முடியும். இவர் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். ஏற்கெனவே இவருக்கு தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமும் உள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் இவருக்கு மீண்டும் சீட் கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை, அரசியலில் எதுவும் நடக்கலாம்.

இந்தத் தொகுதியில் போட்டியிடப்போவது ஜூனியரா... சீனியரா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்’’ என்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு