Published:Updated:

சார் இல்லாத சட்டத்தைச் சொல்லி ஏன் தண்டனை கொடுக்குறீங்க? - #Section66A

Section 66A
Section 66A ( Vikatan )

ஜனநாயக உரிமைக்குச் சவால் விடும்வகையில் இருந்த சட்டம்தான், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act- 2010) 66A பிரிவு.

சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவே தேர்தல்களும் சட்டங்களும் பயன்படுகின்றன. அத்தகைய சட்டங்கள், தவறுகளைக் குறைக்க தண்டனைகளாகவும் ஜனநாயகத்தைக் காக்க உரிமைகளாகவும் கிளை பரப்பியிருக்கின்றன. சமயங்களில் இவை ஒன்றோடொன்று முரண்படும்போது, சுதந்திர தேசத்தின் மக்களாட்சி முறைக்குப் பாதுகாப்பாகச் செயல்படும் அரண், உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே. அப்படி ஜனநாயக உரிமைக்குச் சவால் விடும்வகையில் இருந்த சட்டம்தான், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act- 2010) 66A பிரிவு.

சமூக ஊடகங்களில் நாம் பதிவிடும் கருத்துகள், மிகத் தரக்குறைவானதாகவோ மிரட்டும் தொனியிலோ இருந்தால், தவறு என்று அறிந்தும் ஒருவரைத் தாக்கியோ, புண்படுத்தும்வகையில் பேசினாலோ, பகை, வெறுப்பு போன்ற எதிர்மறை எண்ணங்களை விதைக்கும் நோக்கில் தொடர்ந்து ஒரு கருத்தை பதிவிட்டாலோ, அது சட்டப்பிரிவு 66A-வின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
இதுவே அந்தச் சட்டப் பிரிவின் சாராம்சம்.

சுமார் 130 கோடி மக்கள் வாழும் இந்தியா போன்றதொரு நாட்டில், அதுவும் நம் நாட்டைப் போன்று சாதி, மத, மொழி, கலாசார, அரசியல்ரீதியாக, பன்முகத்தன்மையுடனும் அடிப்படையில் வேறுபட்டு நிற்கும் ஒரு நாட்டில், எந்த ஒரு கருத்தும் எதிர்வினையாற்றாமல் இருக்க முடியாது என்பதே நிஜம். மகாத்மா காந்தி முதல் அன்னை தெரசா வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.

அனல் கக்கும் கருத்துகளும் அறிவுபூர்வமான எதிர்மறை விமர்சனங்களும், விளையாட்டான நகைச்சுவைப் பதிவுகளும், நியாயமான கோபங்களும் என அனைத்து உணர்வுகளையும், பாரபட்சமின்றி காட்டக்கூடிய தளமாக இணையமும், சமூக வலைதளங்களும் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. அதன் காரணமாகவே இணையப் பதிவில் கருத்துச் சுதந்திரம் வேண்டி சட்டப்பிரிவு 66A-வை நீக்கவேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது.

Supreme Court
Supreme Court
Vikatan

நம் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய உச்ச நீதிமன்றமும் அதற்குச் செவிசாய்த்து தன் கடமையைச் செய்தது. ஸ்ரேயா சிங்கால் Vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் 2015-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சட்டப் பிரிவு 66A அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19 (சுதந்திர உரிமை )-ஐ பாதிப்பதாகக் கூறி ரத்து செய்து உத்தரவிட்டது. இணையக் கருத்து சுதந்திரத்திற்கான ஒரு மைல்கல்லாக இந்தத் தீர்ப்பு அப்போது பார்க்கப்பட்டது.

சரி, இப்போது எதற்கு இதெல்லாம் என்று கேட்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன். சட்டத்தின் மாற்றங்கள் உடனுக்குடன் முறையாகத் தெரிவிக்கப்படாமல், 'நீக்கப்பட்டு, இல்லாதுபோன ஒரு சட்டம் இனி செல்லாது' என்ற சட்ட அறிவு இல்லாமல் இன்னும் அதே சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளைச் செய்கிறது காவல்துறை.

Police
Police
Vikatan

'ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்படக் கூடாது' என்ற அறத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய அரசு இயந்திரங்களின் அலட்சியப் போக்கினால், 'குற்றமே இல்லை' என்ற விஷயத்திற்காக, ஒரே நிமிடம் கைது செய்யப்பட்டாலும் அது அநீதியே. அப்படி 2015-ம் ஆண்டிற்குப் பிறகு, உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் எதிராகப் போடப்பட்ட ஒரு பதிவிற்காக, ஜாகிர் அலி தியாகி என்ற இளைஞரும், கொல்கத்தாவில், ஜத்வபூர் பல்கலைக்கழகப் பேராசிரியரும், ஆந்திராவில் வீரரெட்டி என்பவரும், சமீபத்தில் கைதான பி.ஜே.பியின் பிரியங்கா ஷர்மாவும், சட்டப்பிரிவு 66A- வின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியும், தவறிழைக்கும் காவலர்களுக்குச் சிறைத் தண்டனை என்று பயமுறுத்தியும்கூட, அரசு எந்திரம் அதே சோம்பேறித்தனத்தோடுதான் இன்னமும் அத்தகைய சட்டப்பிரிவுகளை அணுகிக்கொண்டு இருக்கிறது. 'சட்டங்களை இயற்ற நாடாளுமன்றமும் சட்டத்தைக் காக்க நீதித்துறையும் சட்டத்தைச் செயல்படுத்த அரசாங்கமும் என்ற மூன்று தூண்களைக் கொண்டு இந்திய அரசியலமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது' என்ற சிறு வயது பாடங்கள் எல்லாம் இப்படி கண்முன்னே சிதைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

National Emblem
National Emblem
National Portal of India

மதத் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் சாதிப்பாகுபாடும் கூட்டாக வன்முறையில் ஈடுபட்டுக் கொலைசெய்யும் சம்பவங்களும் மக்களை கொத்துக்கொத்தாக வேட்டையாடிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மேற்குறிப்பிட்டுள்ள மூன்று தூண்களையும் கேள்விகேட்க மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே ஆயுதம் கருத்துச் சுதந்திரம். அதைக் காப்பதற்குச் சட்டம் இருக்கிறது. எனவே, இனியாவது தன்னைச் சரிசெய்து கொண்டு செயல்படுத்துமா அரசாங்கம்?

அடுத்த கட்டுரைக்கு