Published:Updated:

மனிதவளக் கட்டமைப்பும் கொரோனாவும்... சென்னை மீளத் தவறியதன் பின்புலம்!

எடப்பாடி
எடப்பாடி

கொரோனா பரிசோதனை களில் சந்தேகங்கள்; கொரோனா மரண எண்ணிக்கையில் குளறுபடிகள்... என அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பலவும் கொரோனாவுக்குச் சாதகமாகவே இருக்கின்றன.

'உலகமெங்கும் இருக்கிறது' என்று சொல்லிக்கொண்டாலும், பல நாடுகளில் கவனமாகக் கையாண்டு மீண்டிருக்கிறார்கள்; மீண்டுகொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் நிலை பரிதாபம். குறிப்பாக, சென்னையில் இதன் கோரத்தாண்டவத்தை அடக்கவே முடியவில்லை.

ஊரடங்கில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள்; புறநகர்ப் பகுதிகளில் டாஸ்மாக்கைத் திறந்துவிட்டது; வெளியூர்களுக்குச் செல்பவர்களை முழுமையாகப் பரிசோதிக்காமல் அனுப்புவது; இ-பாஸ் வழங்குவதிலும் தில்லுமுல்லுகள்; கொரோனா பரிசோதனை களில் சந்தேகங்கள்; கொரோனா மரண எண்ணிக்கையில் குளறுபடிகள்... என அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பலவும் கொரோனாவுக்குச் சாதகமாகவே இருக்கின்றன.

இவற்றையெல்லாம் முறைப்படுத்தாமல், ஒழுங்குபடுத்தாமல் தினம் தினம் மைக் முன்பாக முழங்குவது மட்டும்தான் நடந்துகொண்டிருக்கிறது.

அரசு தவறிய இடங்கள் எவை என்று அரசு மருத்துவர்கள் சிலரிடம் விசாரித்தோம். ''மனிதவளக் கட்டமைப்பை மேம்படுத்தாததுதான் அரசு செய்த மிக முக்கியமான தவறு. ஒரு கட்டடத்தின் அஸ்திவாரத்தை பலமாகப் போடாவிட்டால் கட்டடம் தள்ளாடவே செய்யும். அதுதான் கொரோனா விஷயத்திலும் நடக்கிறது.

அமைச்சர்கள்
அமைச்சர்கள்

சென்னை இன்று கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கிறது. பிற மாவட்டங்களைத் தமிழக சுகாதாரத்துறையின் பொது சுகாதாரத்துறை நிர்வகிக்கிறது. ஆனால், சென்னையின் பொது சுகாதாரம் என்பது சம்பந்தமே இல்லாமல் சென்னை மாநகராட்சி வசம் உள்ளது. மாநகராட்சியால் பொது சுகாதார அவசரநிலையை எப்படி நிர்வகிக்க முடியும்?

இதுவரை சுனாமி, 2015-ம் ஆண்டு வெள்ளம், வர்தா புயல், பன்றிக்காய்ச்சல், டெங்கு எனப் பல்வேறு சுகாதார அவசரநிலைகளைச் சென்னை கையாண்டிருக்கிறது. அப்போதெல்லாம் மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளே அவற்றுக்குத் தீர்வு கண்டன. இப்போது நிலைமை அப்படியில்லை.

நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மருத்துவர்கள், செவிலியர்களையும் புதிதாக நியமித்திருக்க வேண்டும். மருத்துவப் பணியாளர் நியமனத்துக்கென்றே உருவாக்கப்பட்ட மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

வாசிக்க க்ளிக் செய்க... > 30 நாள்களில் கொரோனாவை ஒழிப்பது எப்படி?- 'புத்தகம் எழுதும்' எடப்பாடி! https://bit.ly/312Xe4a

மனிதவளத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கொரோனா பணிகளுக்கு தொடர்ந்து குறிப்பிட்ட சில ஊழியர்களையே மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் பயன்படுத்துகின்றனர். அதனால், மருத்துவத்துறையினரும் தொடர்ந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 127 ஊழியர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதே இதற்குச் சான்று.

நிலைமை கையைமீறிப் போன பிறகு தொகுப்பூதியத்தில் நியமனம் நடைபெறுகிறது. கான்ட்ராக்ட் முறையில் பணியாளர்களை நியமிக்கும்போது முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய மாட்டார்கள். அரசாலும் அவர்கள்மீது அதிகாரத்தைச் செலுத்த முடியாது. இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களும் சிகிச்சையில் தாக்கத்தை விளைவிக்கும். தரமான சிகிச்சைதான் நோயாளியை நோயிலிருந்து மீட்டெடுக்கும்'' என்கின்றனர்.

அமைச்சர்கள்
அமைச்சர்கள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ தாண்டியிருக்கிறது. இதில் ஏறத்தாழ 70 சதவிகிதம் பேர் சென்னையில் மட்டும் பாதிப்படைந்துள்ளனர். நிலைமை கைமீறிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், முழு ஊரடங்கை அரசு மீண்டும் அறிவித்திருக்கிறது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முழுக் கட்டுப்பாட்டையும் கையிலெடுத்திருக்கிறார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்போகிறது சென்னை மாநகராட்சி, அவர்களின் திட்டம்தான் என்ன?

சென்னை மீண்டெழுமா? - ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை விரிவாக வாசிக்க க்ளிக் செய்க... > 30 நாள்களில் கொரோனாவை ஒழிப்பது எப்படி?- 'புத்தகம் எழுதும்' எடப்பாடி! https://bit.ly/312Xe4a

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு