Published:Updated:

ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டத்தை நாடு முழுவதும் மற்ற மாணவர்கள் ஆதரிப்பது ஏன்? #JNUProtest

ஜே.என்.யூ, தற்போது போர்க்களமாக மாறியிருக்கிறது. கல்விக்கட்டண உயர்வை எதிர்த்துப்போராடி வந்த மாணவர்கள் மீது முகமூடி அணிந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலரும் காயம் அடைந்துள்ளனர். இந்தப் பிரச்னையின் அடிப்படைக் காரணம் என்ன?

ஜே.என்.யூ என்றழைக்கப்படும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைப் பற்றி, பொதுவெளியில் எப்படியான சித்திரம் வரையப்பட்டிருக்கிறது? `ஜே.என்.யூ மாணவர்களுக்கு கல்வியில் விருப்பமில்லை; அரசியலில் ஈடுபடுகிறார்கள்'. `நமது புனிதப் பாரத தேசத்தின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதற்கான தேசத்துரோகச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புகலிடம் அளிப்பது ஜே.என்.யூ", ``ஒவ்வோர் ஆண்டும் மக்களின் பல கோடி ரூபாய் வரிப்பணத்தை இந்த மாணவர்கள் வீணடித்து வருகிறார்கள்" - இப்படியாக ஜே.என்.யூ குறித்து கருத்துகள் பரப்பப்படும் வேளையில் மத்திய அரசு வெளியிடும் அறிக்கைகளில், நாட்டின் மிகச்சிறந்த உயர்கல்வி நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது இந்தப் பல்கலைக்கழகம்.

`தேசத்துரோகிகளின் கூடாரம்' என வர்ணிக்கப்படும் ஜே.என்.யூ, தற்போது போர்க்களமாக மாறியிருக்கிறது. கல்விக்கட்டண உயர்வை எதிர்த்துப் போராடி வந்த மாணவர்கள் மீது முகமூடி அணிந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலரும் காயமடைந்திருக்கின்றனர். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் விடுதிகளுக்குள் எகிறி குதித்தும், நூலகம், மசூதி முதலானவற்றின் மீதும் தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறை, ஜே.என்.யூ-வில் நடந்த தாக்குதலின்போது கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்தது. டெல்லி காவல்துறை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதால் இது யாருடைய துாண்டுதலில் நடக்கிறது என்ற விவாதங்களும் கிளம்பியுள்ளன.

அய்ஷி கோஷ் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர்
அய்ஷி கோஷ் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர்

டெல்லி ஜே.என்.யூ தாக்குதலை நிகழ்த்தியது இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள்தான் என்றது இந்துத்துவ சங்பரிவார் மாணவர் அமைப்பு. முகத்தில் ரத்தம் வழிய, வலியால் துடித்துக்கொண்டிருந்த ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் தலைவர் அய்ஷி கோஷ் மீது வழக்கு பதிவுசெய்து தனது `நேர்மைக்கு' மற்றொரு புகழ்மாலை சூட்டிக்கொண்டது டெல்லி காவல்துறை. எனினும், இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்கள் பி.ஜே.பி-யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மற்றும் சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தாம் என இடதுசாரி, ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து ஆதாரங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

டெல்லி மாநில ஏ.பி.வி.பி. அமைப்பின் துணைச் செயலாளர் அனிமா சோன்கர், ``ஏ.பி.வி.பி. மாணவர்கள் தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருந்தோம். தடி, இரும்பு ராடு, ஆசிட் ஆகியவற்றை எங்கள் கைவசம் வைத்திருந்தோம்" என்று தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆசிட் எப்படி தற்காப்புக்கான ஆயுதம் ஆகும் என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. இவை அனைத்துக்கும் மேலாக, இந்துத்துவ சங்பரிவார் அமைப்புகளுள் ஒன்றான இந்து ரக்‌ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சௌத்ரி, ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலை நடத்தியது எங்கள் அமைப்புதான் என ஒப்புதல் அளித்திருக்கிறார். ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் மீது விரைந்து வழக்கு பதிவுசெய்த டெல்லி காவல்துறை பிங்கி சௌத்ரியைக் கைது செய்யுமா என ட்விட்டரில் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

ஜே.என்.யூ தாக்குதல்
ஜே.என்.யூ தாக்குதல்

கடந்த 2014-ம் ஆண்டு, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு உருவான பிறகு, ஜே.என்.யூ வளாக நிகழ்வுகள் பேசுபொருளாகி வருகின்றன. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி அமைப்பினருடன் முரண்பட்டதால், ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் பல்கலைக்கழக விடுதியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, இறுதியில் தற்கொலை செய்துகொண்டார் ரோஹித் வெமுலா. ரோஹித் வெமுலாவின் மரணம் நாடு முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு நடந்து சில நாள்களில், ஜே.என்.யூ-வில் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குருவின் நினைவு நாளை அனுசரித்தனர் ஜே.என்.யூ-வின் சில மாணவர்கள். `காஷ்மீருக்கு விடுதலை' என்ற முழக்கத்தோடு நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, சர்ச்சையை உண்டாக்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான்கு நாள்களுக்குப் பிறகு, இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் அப்போதைய தலைவர் கண்ஹையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. தேசத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. அப்போது ஜே.என்.யூ-வில் தொடங்கிய போராட்டம், பல்வேறு பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தது. அதன்பிறகு, பல்வேறு போராட்டங்களில், மாணவ சமூகத்தின் முகமாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது ஜே.என்.யூ.

கண்ஹையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா
கண்ஹையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா

2016-ம் ஆண்டு, ஜே.என்.யூ மாணவர் நஜீப் ஏ.பி.வி.பி அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு காணாமல் போனார். ஏறத்தாழ மூன்றாண்டுகள் கழிந்த பிறகும், நஜீப் என்ன ஆனார், உயிருடன் இருக்கிறாரா என்ற கேள்விகள் இன்றும் விடை தெரியாமல் நிற்கின்றன. நஜீப்பின் தாய் பாத்திமா நஃபீஸ் தன் மகன் கிடைக்க வேண்டும் எனத்தொடர்ந்து போராடி வருகிறார். டெல்லி உயர்நீதிமன்றமும் சிபிஐ விசாரணையும் `காணாமல் போன மாணவர் நஜீப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை' எனக் கூறியது வரலாற்றின் மிகப்பெரிய அவலம்.

தற்போதைய ஜே.என்.யூ போராட்டங்கள் மாணவர்களின் கல்விக் கட்டணம் தொடர்பாக நடந்துவருகிறது. ஜே.என்.யூ-வில் ஏறத்தாழ 40 சதவிகித மாணவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களில் இருந்து கல்வி கற்று வருபவர்கள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு, சமூகத்தின் விளிம்புநிலைகளில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களின் கல்வி உரிமையை மறுப்பதாக உள்ளது என்பது போராடும் மாணவர்களின் கருத்து.

Narendra Modi
Narendra Modi
Photo: AP

கடந்த 2015-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மோடி அரசு உலக வர்த்தக நிறுவனத்தின் `காட்ஸ்' ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதும், அதன் கட்டளைகளுக்கேற்ப திட்டங்கள் வகுப்பதும் இந்திய அரசின் வழக்கம். காங்கிரஸ் அரசும் இதையே செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.

2015-ம் ஆண்டில் கையொப்பமான அந்த ஒப்பந்தம், வர்த்தகம் மீதான தாராள அணுகுமுறையை முன்வைக்கிறது. அதன்படி, `உயர்கல்வி' என்பது சந்தைப் பொருள். உயர்கல்வி என்பது உரிமையாகப் பாவிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படாமல் விற்கப்படும்; பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற சூழல் உருவாகும். பணமற்ற ஏழைகளுக்கு உயர்கல்வி மறுக்கப்படும்.

1927-ம் ஆண்டு, பம்பாய் பல்கலைக்கழகத்தில் கட்டணம் தொடர்பான விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பாபாசாகேப் அம்பேத்கர், ``கல்வி என்பது அனைவராலும் பெற முடிந்த எல்லைக்குள் இருக்க வேண்டும். கல்வித்துறை என்பது `ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை வாங்கிக் கொள்ளுதல்' என்ற அடிப்படையில் இயங்க முடியாது. கல்வி என்பது முடிந்தவரை மிகக்குறைந்த செலவில் கற்கக்கூடியதாக அமைக்கப்பட வேண்டும்" என்றார்.

அம்பேத்கர்
அம்பேத்கர்
`மக்கள் மீதான வழக்கு ரத்து; போலீஸார் மீது நடவடிக்கை! -  அதிரடி காட்டும் ஜார்க்கண்ட் முதல்வர் #CAA

இந்தியா பல்வேறு மனிதர்கள் வாழும் நாடு. இந்தியாவின் தலையாய பிரச்னையாக 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது சாதி. இந்தியாவின் சமூகம் சாதியால் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் சாதி தீர்மானிக்கிறது. இதன் நீட்சியாக, சாதியால் கடுமையாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் நிலமற்ற கூலிகளாக 70 ஆண்டுக்கால `சுதந்திர' இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். சாதியால் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு பக்கம் கல்வியை முன்னேறுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி மேல் எழுந்தால், மறுபக்கம் அரசு தனியார்மயம் என்ற பெயரில், கல்வி, மருத்துவம் முதலான அடிப்படை உரிமைகளை வியாபாரம் ஆக்கி வருகிறது. கல்வி விற்கப்படுவது என்பது விளிம்புநிலை சமூகங்களைப் பொதுக்கல்வியில் இருந்து வெளியேற்றும்.

ஜே.என்.யூ மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இந்தப் பிரச்னைக்குள்ளாகப் போவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஜே.என்.யூ-வில் நிகழ்ந்துள்ள தாக்குதலைக் கண்டித்து, மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர், பல்வேறு இடங்களில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்கள் மீதான தாக்குதலை விசாரிக்க பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. ஒரு தேசத்தின் தலைநகரிலேயே மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது என்றால் இது வெறும் சட்ட ஒழுங்கு பிரச்னையாகவோ, அல்லது பல்கலைக்கழகத்தின் நிர்வாக சிக்கல்களோ மட்டுமல்ல. இதன் பின்னால் இருக்கும் அரசின் அமைதியும் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன. எனவேதான் நாடு முழுக்க மாணவர்களிடையே ஜே.என்.யூ தாக்குதல் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹாங்காங் முதல் சிலி வரை... 2019-ல் நடந்த சர்வதேச மக்கள் போராட்டங்கள் சொல்லும் செய்தி என்ன?
ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டம்
ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டம்

எனினும், ஜே.என்.யூ.-வில் நடந்த பிரச்னையின் வேர், இந்தியா கையொப்பமிட்ட ஒப்பந்தத்தில் இருக்கிறது. சுயமரியாதையும் அடிப்படை உரிமைகளும் முறையாக கிடைக்காத தேசங்களில் மக்கள் எழுச்சியைத் தடுக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும். சிலி, லெபனான், ஈக்வடார், ஹைதி முதலான நாடுகளில் மக்கள் எழுச்சி தோன்றுவதற்கான அடிப்படை காரணமும் இதுவே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு