கிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது? #DoubtOfCommonMan

என்னதான் நடக்கிறது என்பதை அறிய, எய்ம்ஸ் அமையவுள்ள தோப்பூர் பகுதிக்குச் சென்று பார்த்தோம்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என 2015, பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் தமிழகம் வந்து 5 இடங்களை ஆய்வு செய்துவிட்டுச் சென்றனர்.

அதன் தொடர்ச்சியாக மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்தியக் குழு ஒப்புதல் வழங்கியது. இதற்காக தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து, 1,264 கோடி ரூபாய் செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், அதன்பிறகு பணிகளில் வேகமில்லை.
பெரும் போராட்டத்துக்குப்பிறகு, கடந்த ஜனவரி மாதம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பிறகும் பணிகள் முடங்கிப்போயின.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் முத்துக்குமார் இருளப்பன் என்ற வாசகர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் மீண்டும் நடக்குமா, மருத்துவமனை வருமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த மோகன், மதுரை எம்.பி-யாக இருந்த காலகட்டத்தில், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவர முயற்சிகளை எடுத்தார். பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தார். அப்போது மத்தியில் இருந்த அரசு ஆர்வம் காட்டவில்லை.
அதன்பின் இக்கோரிக்கையை மக்கள் தொடர்ந்து எழுப்ப ஆரம்பித்தார்கள். இதற்காக `மதுரை எய்ம்ஸ்க்கான மக்கள் கூட்டமைப்பு' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு தொடர் போராட்டங்களை நடத்திவந்தார்கள். `2015-ல் தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படும்' என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், மதுரை உள்ளிட்ட ஐந்து இடங்களை மத்தியக் குழுவினர் வந்து பார்வையிட்டுச் சென்றனர். தஞ்சாவூர் அருகிலுள்ள செங்கிப்பட்டிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுசெல்லும் முயற்சிகளும் நடந்தன.

ஆனால், தென்மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் தஞ்சை, திருச்சி, கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்ட மக்களும் வந்துசெல்ல வசதியான நகரமான மதுரைக்கு எய்ம்ஸ் வரவேண்டுமென்று தொடர் போராட்டங்களை நடத்தினர் மக்கள். கடந்தாண்டு டிசம்பர் 17-ல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27-ல் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டியவுடன் தோப்பூரில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தினார்கள்.
கடந்த ஜூனில், இத்திட்டத்துக்கு கடனுதவி அளிக்கவுள்ள ஜப்பான் நிதிக்குழு, `பிரதம மந்திரி ஸ்வராஜ் சுரக்ஷா' இயக்குநர் சஞ்சய்ராய் தலைமையில் தோப்பூர் வருகை தந்தது. அப்போது பேசிய மருத்துவக்கல்வி இயக்கக துணை இயக்குநர் சபிதா, ``ஜப்பான் நிதி உதவியுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிலம் உள்ளதா, மற்ற வசதிகள் எப்படியுள்ளன என்று பார்வையிட வந்துள்ளார்கள். சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இருந்த 224.24 ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் நிலத்தைப் பற்றி எந்தப் பிரச்னையும் இல்லை. நிதி ஒதுக்குவது பற்றி ஜப்பான் நிதிக்குழு முடிவு செய்வார்கள். விரைவில், கட்டுமானப்பணிகள் படிப்படியாகத் தொடங்கும்" என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால், அதற்குப்பின் எந்த சத்தத்தையும் காணவில்லை.
சமீபத்தில் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதா என்று ஆர்.டி.ஐ. மூலம் கேட்டதற்கு, சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஐந்து கோடி ஒதுக்கியதாக கூறப்பட்டது.சமூக ஆர்வலர் நெல்பேட்டை ஹக்கீம்

என்னதான் நடக்கிறது என்பதை அறிய, எய்ம்ஸ் அமையவுள்ள தோப்பூர் பகுதிக்குச் சென்று பார்த்தோம். பரந்து விரிந்து கிடந்த இடம், சமீபத்தில் பெய்த மழையால் பெரிய குளமாகக் காட்சி அளிக்கிறது. சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்குவதாக சொல்லப்பட்ட நிலையில், எந்த வேலையும் நடைபெறவில்லை. அங்கு ஆரம்பக் கட்ட வேலைகள் நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சாலை அமைக்கும் பணி பாதியில் கிடக்கிறது.
எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கப்பட்டதா இல்லையா என்பதை அடிக்கல் நாட்டுவதற்கு முன்பே ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டு, வெளிப்படுத்திய சமூக ஆர்வலர் நெல்பேட்டை ஹக்கீமிடம் இதுகுறித்து பேசினோம்.
``ஆரம்பத்தில் மதுரைக்கு எய்ம்ஸ் வருவதாக ஆளும்கட்சியினர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதை உறுதிப்படுத்த எய்ம்ஸுக்காக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதா, நிதி ஒதுக்கப்பட்டதா என்று ஆர்.டி.ஐ மூலம் கேள்விகளை கேட்டபோது, `இல்லை'யென்று பதில் அளித்தார்கள். இது மக்கள் மத்தியில் எதிர்ப்பை உண்டாக்கிய பின், சில நாள்களில் உத்தரவு போடப்பட்டது. அதன் பின்னும் நீண்ட நாள்கள் இழுத்த நிலையில், கடந்த ஜனவரி 27-ம் தேதி பிரதமர் வருகை தந்து மதுரையில் அடிக்கல் நாட்டி மக்களிடம் நம்பிக்கையை உண்டாக்கினார். ஆனால், அதன் பின்னும் வேலைகள் மந்தமாகவே நடந்துவருகின்றன. சமீபத்தில் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதா என்று ஆர்.டி.ஐ. மூலம் கேட்டதற்கு, சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஐந்து கோடி ஒதுக்கியதாக கூறப்பட்டது. ஒன்றும் புரியவில்லை, பிரதமர் அடிக்கல் நாட்டிய திட்டம் என்பதால் எப்படியாவது நடந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய வேண்டும் என்று நீண்ட நாள்களாகப் போராடி வரும், எய்ம்ஸ்க்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிமாறனிடம் பேசினோம்.
``பிரதமர் அடிக்கல் நாட்டிய பின்பு வேலை மெதுவாகத்தான் நடந்துவருகிறது. இது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. உடனே வேலைகள் நடந்தால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் '' என்றார்.
தோப்பூர் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வான டாக்டர் சரவணனிடம் இதுகுறித்துக் கேட்டோம்.
``மதுரையில் எய்ம்ஸ் வரப்போகிறது என்று மக்கள் மகிழ்ச்சியடைந்த நேரத்தில், ஜப்பான் அரசின் நிதி உதவியை எதிர்பார்த்திருப்பதாக சொல்கிறார்கள். நம் அரசாங்கத்திடம் இதற்கு நிதி இல்லையா? ஆரம்பத்தில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பதில் பிரச்னை என்றார்கள். இப்போதும் எந்த வேலையும் நடைபெறவில்லை.

இதோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான வேலைகளும் தொடங்கவில்லை என்று சொல்கிறார்கள். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து இது சம்பந்தமாக கேட்கலாம் என்று இருக்கிறோம்'' என்றார்.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசனிடம் கேட்டபோது, ``எய்ம்ஸுக்கான வேலைகள் நடந்துவருகிறது. தமிழக அரசு நிலத்தை ஒப்படைப்பதில் ஆரம்பத்தில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், இப்போது ஒப்படைத்துவிட்டது. நான் இரண்டுமுறை நாடாளுமன்றத்தில் இதுபற்றி வலியுறுத்தி பேசிவிட்டேன். திட்ட அறிக்கை தயாரிக்க ஆறு மாதத்துக்கு மேல் ஆகும் என்பது உண்மைதான். எய்ம்ஸுக்கான வேலைகளை ஆரம்பிக்காமல் நான் ஓய மாட்டேன். அதற்கான ப்ராஸசிங் நடந்துகொண்டிருக்கிறது '' என்றார் நம்பிக்கையாக.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பி.ஜே.பி கூட்டணி மோசமான தோல்வியைப் பெற்றதால், எய்ம்ஸ் விஷயத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது என்றும் பேசப்படுகிறது. ஆனால், பிரதமரே இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததால் கிடப்பில் போட மாட்டார்கள், விரைவில் வேலைகள் தொடங்கும் என்று மதுரை மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். மக்களும் நம்புகிறார்கள்..!
