Published:Updated:

மாற்றப்படும் இந்திய அணு ஆயுதக்கொள்கை: முடிவெடுத்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பா?

Modi - Rajnath Singh
Modi - Rajnath Singh

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளைக்கூட்டமைப்பான ஒருங்கிணைக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புக்கான கூட்டமைப்புதான், பாரதிய ஜனதா அமைச்சரவை அணுஆயுதக் கொள்கை தொடர்பாக ரகசிய விவாதம் மேற்கொண்டு வருகிறது என்பதை முதன்முதலில் தேசத்துக்குத் தெரியப்படுத்தியது.

பாரதிய ஜனதா கட்சி தனது 2014 தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அறிவிப்புகளைத் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அண்மையில் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப்பெற்று அரசு முடிவெடுத்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ல் இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை முடிவில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

ஒருங்கிணைக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புக் கூட்டமைப்பில் பேசும் மனோகர் பாரிக்கர்
ஒருங்கிணைக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புக் கூட்டமைப்பில் பேசும் மனோகர் பாரிக்கர்

2014 தேர்தல் அறிக்கையில் அணு ஆயுதக் கொள்கை மறு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது. அந்த மே மாதம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதை அடுத்து அதே வருடம் டிசம்பர் மாதம் ஒருங்கிணைக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புக்கான கூட்டமைப்பு (Forum for Integrated national security) தனது பத்திரிகையாளர் சந்திப்பில், ’மோடி அரசு அணு ஆயுதக் கொள்கை மறுபரிசீலனை தொடர்பாக முக்கிய அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவைக் கூட்டங்களை நடத்திவருகிறது.

எங்கள் தரப்பிலும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான சில கோரிக்கைகளை அமைச்சரவையிடம் ஒப்புவிக்க இருக்கிறோம்’ என்று கூறியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளைக் கூட்டமைப்பான இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புக்கான கூட்டமைப்புதான், பாரதிய ஜனதா அமைச்சரவை அணு ஆயுதக் கொள்கை தொடர்பாக ரகசிய விவாதம் மேற்கொண்டு வருகிறது என்பதையே முதன்முதலில் தேசத்துக்குத் தெரியப்படுத்தியது.

Vikatan

பிரிவு 370 திரும்பப்பெறுதலைப்போலவே அணு ஆயுதக் கொள்கை மறு ஆய்வும் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட ஆதிகாலத்திலிருந்து அந்த அமைப்பின் கொள்கை முடிவுகளில் ஒன்றாக இருப்பவை.

தற்போது 2019-ல் ராஜ்நாத் சிங், ”'நாங்கள் முதலில் அணு ஆயுதத்தை உபயோகப்படுத்த மாட்டோம்' என்ற நேருவின் முடிவைத் திருத்தி எழுதுவோம்” என்று குறிப்பிட்டார். அவரின் இந்த அறிவிப்பு பல தரப்பிலும் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. அவரின் இந்தப் பேச்சு அக்கறையற்றது என பாகிஸ்தான் அரசும் தெரிவித்திருக்கிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதியுடன்..
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதியுடன்..

இந்த நிலையில், ’இந்திய அணு ஆயுதக் கொள்கை மாற்றம் காண்கிறதா’ என்கிற தலைப்பில், சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நிகழ்வு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தது. அதில் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை முன்னாள் பேராசிரியர் அச்சின் வனய்க், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ்.பி.உதயகுமார், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள்.

"கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’’ எனப் பேசிய தியாகு, “அணுஆயுதங்கள் மற்ற எந்தப் போர் ஆயுதங்களைப்போலக் குறிவைத்துத் தாக்குபவை அல்ல. அமெரிக்க அதிபராக இருந்த சமயம் ஹிரோஷிமா சென்றுவந்த ஒபாமாகூட, அமெரிக்கா அணுகுண்டு ஏவியது சரியா... தவறா? எனத் தங்களது வரலாற்று முடிவை மறு ஆய்வு செய்யவில்லை. இன்று வரை அவர்கள் மன்னிப்புகூடக் கேட்கவில்லை. ஆனால், அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு தாம் காரணமாக இருந்ததற்காக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வருந்தினார்.

பூவுலகின் நண்பர்கள் நிகழ்வு
பூவுலகின் நண்பர்கள் நிகழ்வு

அவர் அமெரிக்காவுக்கு எழுதிய கடிதத்தால்தான் அணு ஆயுத உற்பத்திக்கான அடித்தளமிட்ட மான்ஹாட்டன் பிராஜக்ட் தொடங்கப்பட்டது. இரானில், போரால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காணாமல் போனார்கள். ஈழத்திலும் இன்று வரை பலர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தங்களது உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அணு ஆயுதங்கள் ஒட்டுமொத்த மானுட உலகத்தையே காணாமல் செய்யக்கூடியவை” என்றார்.

அடுத்து பேசிய சுப.உதயகுமார், இந்தியா அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக எப்போதிலிருந்து விவாதிக்கத் தொடங்கியது என்பதன் வரலாற்றுப் பின்னணியை விவரித்தார்.

"1915-ம் ஆண்டு அனைத்திந்திய இந்து சபா என்கிற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு, 1923 பெனாரஸ் கூட்டத்தில் இந்துக்களுக்கு தற்சார்புப் படை அமைக்கவேண்டும் என்று தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இயங்குகிற அமைப்பாக இருந்துவந்தது. மதன் மோகன் மாளவியா, லாலா லஜ்பதி ராய் உள்ளிட்டோர் இதில் இருந்தார்கள். இணைகோடாக 1925-ல் ராஷ்டிரிய ஸ்வயம் ஸேவக் சங்கம் தொடங்கப்பட்டது. 1927-க்குப் பிறகு காங்கிரஸ் உடனான உறவை முறித்துக்கொண்டது, இந்து மகா சபா.

அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடுகிறார்கள். காஷ்மீர் பிரச்னை குறித்தும் பொதுசிவில் சட்டம் குறித்தும் அதில் பேசப்பட்டது.
சுப.உதயகுமார்

1948-ல் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதற்குப் பிறகு, இந்து மகா சபா பலவீனமடைகிறது. அப்போதுதான் ஸ்யாமா பிரசாத் முகர்ஜி, ’அமைப்பின் பெயரை மாற்றுவோம்’ எனச் சொல்கிறார். 1951-ல் பாரதிய ஜன சங் தொடங்கப்பட்டது. 1967 பொதுத்தேர்தல் அறிக்கையில் அகில இந்திய இந்து மகா சபாவும் பாரதிய ஜன சங்கமும் அணு ஆயுதங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். அங்கிருந்துதான் இந்தியாவின் அணு ஆயுத விவாதங்களும் தொடங்கின. அந்த அறிக்கையில், மேலதிகமாக ராணுவ விரிவாக்கம் பற்றியும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குக் கட்டாய ராணுவச் சேவை குறித்தும் பேசப்படுகிறது. அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடுகிறார்கள். காஷ்மீர் பிரச்னை குறித்தும் பொதுசிவில் சட்டம் குறித்தும் அதில் பேசப்பட்டது.

சுப.உதயகுமார் பேசுகையில்...
சுப.உதயகுமார் பேசுகையில்...

அணு ஆயுதக் கொள்கை ஏதோ இன்றைக்கு ராஜ்நாத் சிங் பேசுவது அல்ல. இதை, அவர்களது கட்சி 1960-களிலிருந்தே ஆணித்தரமாக நம்பி வருகிறது. ஆகையால், அணு ஆயுதத்தைப் பயன்படுத்துகிற வாய்ப்பு வந்தால் அவர்கள் நிச்சயம் பயன்படுத்துவார்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர்கள் துளியும் சிந்திக்கமாட்டார்கள். இந்தியா அணு ஆயுதத்தைக் கையிலெடுத்தாலும் பாகிஸ்தான் அணு ஆயுதத்தைக் கையிலெடுத்தாலும் நாம் இருவருமே அழிந்துபோவோம். இந்தச் சூழலில் நம் வருங்காலத்தை எப்படிப் பாதுகாக்கக் போகிறோம்?” என்கிற கேள்வியை முன்வைத்துவிட்டு நகர்ந்தார்.

அணு ஆயுத மற்றும் அணு சக்தி உற்பத்தித் துறையில் இருப்பவர்கள் குறித்து கவனத்திற்குக் கொண்டுவந்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் பேசுகையில், "மற்ற எந்தத் துறையையும்போல இந்தத் துறையில் அரசிடம் வெளிப்படைத்தன்மை கிடையாது. அணுசக்தித் துறையை இந்திய நாடாளுமன்றம் கேள்விகேட்க முடியாது. இதுவரையில் ஒரே முறை மட்டும்தான் இந்திய நாடாளுமன்றம் இந்தத் துறையைக் கணக்கு தணிக்கை செய்துள்ளது.

பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்
பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்

அந்தத் தணிக்கையின்படி, இந்தத் துறைக்கான பொருள் செலவீடுகள் அதிகமாவது குறித்துக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, பொக்ரான் அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு அதற்கான செலவீனங்கள் குறித்து சி.ராம்மோகன் என்பவர் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். அதில், ’நமது கல்வி, சாலை, சுகாதாரம் ஆகிய மூன்று துறைகளையும்விட நான்கு மடங்கு அதிகம் இந்தச் சோதனைக்காகச் செலவிடப்பட்டது’ என்கிறார். அணு ஆயுதத்தால் அணு உற்பத்தியால் ஏற்படும் விளைவுகள் குறித்து பலர் பேசினார்கள். ஆனால், இந்தத் துறையிலேயே இருப்பவர்கள் குறித்தும் பேச வேண்டும் என நினைக்கிறேன். இந்தத் துறையில் இருப்பவர்களுக்கு எந்தவிதமான பொதுத் தொடர்பும் இருப்பதில்லை. அமெரிக்க அணு ஆயுத ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளைப் பற்றிய பெர்சனல் பக்கங்களைத் தனது ‘Brighter than a thousand sun' புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் ராபர்ட் ஜங்க் இதுபற்றிப் பேசுகிறார்.

அவர்களிடம் உணர்வு, வீடு, இழப்பு, அன்பு போன்ற வார்த்தைகள் இல்லை. அவர்களிடம் திட்டம், நோக்கம், செயல், வெற்றி, தோல்வி போன்ற வார்த்தைகளே இருக்கின்றன. இவர்கள், ’வறுமையை ஒழிப்போம்’ என்பதை, எப்போது உணவுப் பாதுகாப்புச் சட்டம் எனப் பெயர் மாற்றினார்களோ, அப்போதே மொழி விளையாட்டு அரசியலும் தொடங்கிவிட்டது. அது ஏற்படுத்தியிருக்கும் அச்சத்தின் விளைவாகவே நாம் இங்கு கூடியிருக்கிறோம். இதற்கு என்ன தீர்வென்று எனக்குத் தெரியவில்லை” என்று கவலையுடன் தனது உரையை முடித்தார்.

`அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்துமா?' - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை பதில்!

இறுதியாகப் பேசிய பேராசிரியர் அச்சின், ”உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் வேறு ஏதாவது ஒரு நாட்டைக் காரணத்தைக் காட்டி, தாம் ஓர் அதிகாரம் மிக்க நாடு எனக் காட்டிக்கொள்ளவே அணு ஆயுத உற்பத்தியை மேற்கொள்கின்றன. அமெரிக்காவுக்கு அப்படியான காரணம் தேவைப்படவில்லை. ஆனால், அதற்கடுத்து அணு ஆயுத உற்பத்தியை மேற்கொண்ட ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய பலத்தை இதர நாடுகளுக்கு நிரூபிக்க அதைச் செய்தன.

இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதற்கான அதிகத் திறன் இருந்தும், அவை தங்களது முடிவுகளை மறுபரிசீலனை செய்யாமல் கைவிட்டன. உக்ரைனிடம் அணு ஆயுத ஆய்வு மற்றும் சோதனைக்கான அத்தனை வசதிகள் இருந்தும் ரஷ்யாவிடமிருந்து பிரிந்தவுடன் தனது முடிவை மாற்றிக்கொண்டது. ஸ்வீடன் இரண்டாம் உலகப்போர் சமயத்திலேயே தனது முடிவை அறிவித்திருந்தது. உலகில் எத்தனையோ நாடுகள் அணு ஆயுதத் தாக்குதலிலிருந்து நூலிழையில் தப்பின. வியட்நாம் போரின்போது தெற்கு வியட்நாமில் அணு ஆயுதம் உபயோகிக்கப்பட இருந்து, அது இறுதி நொடிகளில் கைவிடப்பட்டது.

பேராசிரியர் அச்சின்
பேராசிரியர் அச்சின்

ஆனால், உலகிலேயே அணு ஆயுதத்தை வைத்துள்ள இரு நாடுகள் ஒரு நாட்டு எல்லையிலிருந்து மற்றொரு நாட்டு எல்லைக்குள் விமானத் தாக்குதல் என்கிற பெயரில் ஊடுருவி விளையாடிக் கொண்டிருப்பதையெல்லாம் இந்தியாவும் பாகிஸ்தானும்தான் மேற்கொண்டு வருகின்றன. அணு ஆயுதத்துக்கு ’The smiling buddha’ என புத்தரின் பெயரை வைத்துக் கலங்கப்படுத்தியது நாமாகத்தான் இருப்போம். பொக்ரான் அணுகுண்டுச் சோதனை நடத்திய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், நாட்டு மக்களுக்கு அதுபற்றி எவ்வித பதிலும் அளிக்காமல் இங்கிருந்து பில் கிளிண்டனுக்குக் கடிதம் எழுதினார். நாட்டு மக்கள் மீதான இவர்களது அக்கறை அவ்வளவுதான். மங்கோலியா போன்ற நாடுகள் தங்களை அணுக்கதிர் சூழலிலிருந்து விடுபெற்ற பகுதிகளாக (Nuclear free zone) அறிவித்துள்ளன. அதுபோன்று பங்களாதேஷ் அறிவித்தால் அது இந்தியா, பாகிஸ்தான், சீனாவின் அரசியலுக்கு நிச்சயம் ஓர் எச்சரிக்கைப் பேரிடியாக இருக்கும். ஊட்டச்சத்து, சுகாதாரம், கொடிய நோய்கள் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் அணு ஆயுதத்துக்காகப் பொருளாதாரச் செலவுகளை மேற்கொள்வது தேவையா என்பதைச் சிந்திக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு