Published:Updated:

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு... `ஆர்.டி.ஐ’ சட்டப்பிரிவு நீர்த்துப்போகும் ஆபத்தா?!

ஆர்.டி.ஐ

``தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ) கொண்டுவந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன . ஆனாலும் இதைக் கையாளும் அரசு அதிகாரிகளுக்கு இது பற்றித் தெரிவதில்லை. என்ன தவறு செய்தாலும் ஆணையம் துணை நிற்கும் என்னும் நம்பிக்கையில் தகவல் தர மறுக்கிறார்கள்."

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு... `ஆர்.டி.ஐ’ சட்டப்பிரிவு நீர்த்துப்போகும் ஆபத்தா?!

``தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ) கொண்டுவந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன . ஆனாலும் இதைக் கையாளும் அரசு அதிகாரிகளுக்கு இது பற்றித் தெரிவதில்லை. என்ன தவறு செய்தாலும் ஆணையம் துணை நிற்கும் என்னும் நம்பிக்கையில் தகவல் தர மறுக்கிறார்கள்."

Published:Updated:
ஆர்.டி.ஐ

கடந்த 2017-ம் ஆண்டு, ஆதார் அட்டை தொடர்பான வழக்கில், `'தனிமனிதரின் அந்தரங்கத் தகவலைப் பாதுகாப்பது' அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை. அதைப் பாதுகாப்பது அரசின் கடமை' என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதை அடிப்படையாகக்கொண்டு இணையதளங்களில் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க புதிய சட்ட வரைவை (Digital Personal data Protection bill) கொண்டுவரப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு இணையதளம் வாயிலாக கருத்துகேட்பும் நடத்தியது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இது டிஜிட்டலில் தனிமனிதத் தகவல்களைப் பாதுகாக்கும் சட்டம் எனக் கூறப்பட்டாலும், இது தகவல் அறியும் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் என ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் விமர்சித்துவருகிறார்கள். குறிப்பாக, தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு 8(1) (g) முழுமையாக அகற்றப்படும். இந்தச் சட்டத்தால் வழங்கப்படும் தகவல் தனிநபரின் (அதிகாரிகளின்) பாதுகாப்பை உறுதிசெய்திருக்க வேண்டும்.

ஆர்.டி.ஐ
ஆர்.டி.ஐ

அப்படி இல்லாதபட்சத்தில் தகவல்கள் மறுக்கப்படலாம். ஆனால், அப்போதே இதைக் காரணம் காட்டி தனிநபர் தகவல் பல நேரங்களில் மறுக்கப்பட்டது. தற்போது இந்தச் சட்டப்பிரிவு முழுமையாக நீக்கப்பட்டால், தனிநபர் குறித்து எந்தத் தகவலும் வெளிக்கொண்டுவர முடியாத நிலை உருவாகும்.

இது குறித்து ஆர்.டி.ஐ ஆர்வலர் காசிமாயன், "ஆர்.டி.ஐ தகவல் உரிமை அறியும் சட்டத்தில் சட்டப்பிரிவு 8(1)(g) என்னும் சட்டத்தை விலக்கப்போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே தமிழக தகவல் ஆணையத்திடம் வெளிப்படத்தன்மை என்பதே இல்லாமல் இருக்கிறது. இதில் இந்தச் சட்டப்பிரிவை விலக்கினால் இதைக் காரணம் காட்டி தகவல் வழங்குவது மறுக்கப்படும். இதனால் எந்தத் தகவலும் பெற முடியாத சிக்கல் ஏற்படும். அதேபோல், கொண்டுவரப்பட்ட சட்ட வரைவுக்கு மக்களின் கருத்துகளைக் கேட்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், எந்த மாநில மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யாமலும், விளம்பரப்படுத்தாமலும் கருத்து கேட்டதாக ஒப்புக்குத் தெரிவிக்கிறார்கள். தாய்மொழியில் சட்டவரைவு வழங்கப்படாததால், மக்களால் கருத்து சொல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது முழுமையாக தகவல் அறியும் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் செயல்" என்றார்.

காசிமாயன்
காசிமாயன்

இது குறித்து நம்மிடம் பேசிய ஆர்.டி.ஐ ஆர்வலர் தியாகராஜன், "ஒரு தனிநபர் தகவலாக இருந்தாலும், அது பொதுநலன் குறிப்பதாக இருந்தால் தகவல்களைத் தர வேண்டும் என தற்போது நீக்கவிருக்கும் சட்டப்பிரிவு கூறுகிறது. இதை நீக்கினால் இனி இதைக் காரணமாக வைத்தே எந்தத் தகவலையும் அதிகாரிகளிடமிருந்து பெற முடியாது.

தியாகராஜன்
தியாகராஜன்

ஓர் அதிகாரி பணியில் சேர்ந்தது எப்போது, முறையாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து நியமிக்கப்பட்டாரா.... இவருக்கு சீனியாரிட்டி அடிப்படையில் வேலை வழங்கப்பட்டிருக்கிறதா... அவர்கள்மீது பணிப் பதிவேட்டில் குற்றச்சாட்டு எதுவும் பதியப்பட்டிருக்கிறதா... அப்படிப் பதியப்பட்டிருந்தால் அதன் நிலை என்ன... என்பதைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற முடியும். அது தனிநபர் தகவலாக இருக்காது. அரசு மற்றும் மக்களுக்கு இடையில் இருக்கும் பொதுத் (அதிகாரியின்) தகவல் என்னும் அடிப்படையில் தகவலைப் பெறலாம். ஆனால், அதையே தனிநபர் தகவல் என குறிப்பிட்டு தகவல் மறுக்கப்பட்டது.

இனி அதிகாரிகள் குறித்து தகவலைத் தெரிந்துகொள்ளவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த முடியாது. இதற்கு முன்பே தமிழக அதிகாரிகளிடமிருந்து தகவல் பெறுவதே போராட்டமாக இருந்தது. ஒரு சின்னத் தகவலைத் தர 50, 60 நாள்கள் எடுத்துக்கொண்டார்கள். ஆர்.டி.ஐ சட்டம் கொண்டுவந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் இதைக் கையாளும் அரசு அதிகாரிகளுக்கு இது பற்றித் தெரிவதில்லை. நாம் என்ன தவறு செய்தாலும் ஆணையம் துணை நிற்கிறது என்னும் நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. ஆனால், இனிமேல் இந்தச் சட்டப் பிரிவு நீக்கத்தைக் கைகாட்டி தகவலைத் தர முடியாது என்பார்கள். இது எங்களைப் போன்ற ஆர்வலர்களுக்கு பேரிடிதான்" என்றார்.

ஆர்.டி.ஐ
ஆர்.டி.ஐ

அரசின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் திட்டங்களாக சில திட்டங்கள் மட்டுமே செயலில் இருக்கின்றன. அதில் முக்கியமான திட்டமாக இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம். ஆனால், அதைப் பறிக்கும் இது போன்ற சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது. இது மக்களுக்கும் அரசுக்குமான இடைவெளியை மேலும் அதிகரிக்கும். 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' எனப் பெயர் மட்டும் வைத்துவிட்டு எந்தத் தகவலையும் தர மாட்டோம் என சொல்வது நியாயமல்ல என வருந்துகிறார்கள் ஆர்டிஐ ஆர்வலர்கள்.