Election bannerElection banner
Published:Updated:

இரவு நேர ஊரடங்கால் கொரோனா பரவல் கட்டுக்குள் வருமா? - மருத்துவர்களின் கருத்து

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

ஞாயிறன்று முழு ஊரடங்கு தவிர தற்போது நடைமுறையிலுள்ள இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரைக்குமான இரவு ஊரடங்கு என்பது போதுமானதா அல்லது கட்டுப்பாடுகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமா, மருத்துவர்கள், சமூக ஆர்வலர்களிடம் பேசினோம்.

கொரோனா இரண்டாவது அலை நம் நாட்டை மிகக் கடுமையாக அச்சுறுத்திவருகிறது. வைரஸ் பரவல் மிகத் தீவிரமடைந்திருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துவிட்டது. புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில், 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, கேரளா, கர்நாடகம், நான்காவது இடத்தில் தமிழகம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு பத்து லட்சத்தைக் கடந்துவிட்டது. தினசரி பரவல் 11 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கடந்த ஆண்டு தொடங்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 13,258. அதேபோல, தலைநகர் சென்னையில் கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து பாதிப்பு மூவாயிரத்தைக் கடக்கிறது. இந்தநிலையில் ஞாயிறன்று முழு ஊரடங்கு தவிர தற்போது நடைமுறையிலுள்ள இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரைக்குமான இரவு ஊரடங்கு என்பது போதுமானதா இல்லை கட்டுப்பாடுகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமா என்பது குறித்து மருத்துவர்கள், சமூக ஆர்வலர்களிடம் பேசினோம்.

சுமந்த் சி ராமன்
சுமந்த் சி ராமன்

மருத்துவர் சுமந்த் சி ராமன் (அரசியல் விமர்சகர்)

``கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. காரணம், தமிழகத்தில் நாளொன்றுக்கு 11,000 பேருக்கும், சென்னையில் மட்டும் 4,000 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை போல தமிழகம் ஆகாதவாறு பார்த்துக்கொள்ளும் கால அவகாசம், ஒரு வாய்ப்பு தமிழ்நாட்டுக்குத் தற்போது இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்வதும், தவறவிடுவதும் அரசின் கைகளில்தான் இருக்கிறது. மக்களின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்காத ஒரு நடவடிக்கையாகத்தான் இரவு நேர ஊரடங்கைப் பார்க்க முடிகிறது. உலகின் முப்பது நாடுகளில் இரவு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மக்களிடம் எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மாலை நேரங்களில் நண்பர்களைச் சந்திப்பது, ஊர் சுற்றுவது போன்ற தேவையில்லாத செயல்பாடுகளைத் தவிர்ப்பதற்காகவே இரவு நேர ஊரடங்கு போடப்படுகிறது.

அதேவேளையில், மும்பையைப் போன்று சென்னைக்கு ஒரு வாரம் முழு ஊரடங்கு தேவைப்படுகிறது. காரணம், இங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வேகம் மிகக் குறைவாக இருக்கிறது. கிட்டத்தட்ட 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டிய சூழலில், ஒரு நாளைக்கு இருபதாயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். சென்னையில் இதுவரை, 70 லட்சம் பேரில், கிட்டத்தட்ட 12.5 லட்சம் பேர்தான் அதிகாரபூர்வமாகத் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். அவர்களில் இரண்டு டோஸும் போட்டுக்கொண்டவர்கள் நான்கு லட்சம் பேர்தான். தவிர, தடுப்பூசி பற்றாக்குறையும் இங்கு இருக்கிறது. மருத்துவமனைகளிலும் இடம் இல்லை. அதனால் சென்னைக்கு ஒரு வாரத்துக்கு மட்டும் முழு ஊரடங்கு அவசியம் என்றே நான் நினைக்கிறேன்'' என்கிறார் அவர்.

மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்
மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்

மருத்துவர் சாந்தி (சமூகச் செயற்பாட்டாளர்)

``இரவு நேர ஊரடங்கால் பெரிய அளவில் பயன் ஏதும் இல்லை. காரணம், ஊரடங்கு போடப்படுவதற்கான நோக்கமே கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காகத்தான். நம் மாநிலத்தில் இரவு நேரத்தில் யாரும் அதிகமாக வெளியில் செல்வது கிடையாது. யாரும் இல்லாத நேரத்தில் ஊரடங்கு போடுவதால் நடைமுறைச் சிக்கல்களும், ஏழை மக்களுக்கு ஏற்படும் பாதிப்பும்தான் அதிகம். இரவில் பேருந்துகள் இயங்காததால், ஒருநாள் கூடுதலாக விடுமுறை எடுத்துத்தான் வெளியூர்களுக்குச் செல்ல முடிகிறது. அதனால், தேவையில்லாத பொருளாதார இழப்புதான் மக்களுக்கு ஏற்படும். `அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது' என்பதைக் காட்டிக்கொள்வதற்கு வேண்டுமானால் இது போன்ற விஷயங்கள் பயன்படலாம். இரண்டாவது அலையின் அபாயம் குறித்து, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நாங்கள் (மருத்துவர்கள்) சொல்லிவருகிறோம். தேர்தல் காலத்தில் அரசும் அரசியல்வாதிகளும் அகு குறித்து கண்டுகொள்ளவில்லை.

``இரவுநேர ஊரடங்கு கொரோனாவை முடக்காது; எங்களைத்தான் முடக்கும்!" - வேதனையில் வணிகர்கள்

அதேபோல, தடுப்பூசியையும் சரியான அளவில் உற்பத்தி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. அதன் நன்மையையும் அறிவியல்பூர்வமான விஷயங்களையும் மக்கள் மத்தியில் இந்த அரசுகள் சரியாக எடுத்துச் செல்லவுமில்லை. அதனால், இனிமேல் முழுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும், அந்த நேரத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தால் எந்தப் பயனுமில்லை. அதேவேளையில், முதல் அலையை நாம் எதிர்கொள்ளும்போது, கொரோனாவின் வீரியம், பரவல் குறித்து எந்த அனுபவமும் இல்லாமல் இருந்தது. ஆனால், முழுமையான அனுபவத்துடன் இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்கிறோம். அது சாதகமான விஷயம்'' என்கிறார் மருத்துவர் சாந்தி.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி
அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி

சிவசங்கரி ( செய்தித் தொடர்பாளர்,அ.தி.மு.க)

``இரவு நேரத்தில்தான் நம் மக்கள் சென்னை, திருச்சி, திருப்பூர், கன்னியாகுமரி போன்ற வெளி மாவட்டங்களுக்குப் பயணம் செய்கிறார்கள். அப்படி, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தால், கோரோனா பரவலும் அதிகமாகும். ஆனால், தற்போது பகல் நேரத்தில் மட்டும் போக்குவரத்து வசதிகள் இருப்பதால் மக்கள் பயணம் செய்வது அதிக அளவில் குறைந்திருக்கிறது. பெரும்பாலான மக்கள் மாவட்டத்தைவிட்டு வெளியில் செல்வதில்லை. அடுத்ததாக, மாவட்டத்துக்குள்ளும் இரவில் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் தங்கள் வேலைகளை வேகமாக முடித்துவிட்டு சீக்கிரமாக வீட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் முழு ஊரடங்கு போடுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. மக்களின் பொருளாதாரப் பிரச்னைகளையும் வாழ்வாதாரத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே அரசு, மக்களுக்குப் பல நலத்திட்ட உதவிகளைக் கடந்த ஓராண்டுகளாக செய்துவந்திருப்பதால் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதனால் மேற்கொண்டு நிதி உதவிகள் செய்யும் நிலையில் தமிழக அரசு இல்லை. அதேவேளையில், மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், ஆலோசனைகள், வழிமுறைகளை அரசு தொடர்ந்து வழங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதை அரசு தொடர்ந்து செய்யும்'' என்கிறார் அவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு