Published:Updated:

கொரோனா: `சூப்பர் ஆக்‌ஷன் டீம்’ அமைக்க ஆவன செய்யுமா தமிழக அரசு?

ஆய்வில் விஜயபாஸ்கர்
ஆய்வில் விஜயபாஸ்கர்

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் திறமை மிகுந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் களத்தில் இறக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆரம்பத்தில் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ``தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை“ என்கிற ரீதியிலேயே பேசிவந்தார். இப்போதும் பேசி வருகிறார். மக்களுக்கு பீதியை ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் அப்படிச் சொன்னாரா என்பது தெரியவில்லை. ஆனால், உண்மை நிலையை மறைத்துவிட்டு எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சர் கூறுவதாகப் பலர் விமர்சித்தார்கள். அவர்கள் சொல்வதைப் போலவே இன்றைக்கு நிலைமை கவலைக்குரியதாக மாறிவருகிறது. தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் எடுத்துவந்தாலும் இவை மிகவும் தாமதமான நடவடிக்கை என்றே எதிர்க்கட்சியினர் உட்பட பல தரப்பினரும் விமர்சித்துவருகின்றனர்.

பெண் ஊழியர்கள்
பெண் ஊழியர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் திறமையான அதிகாரிகள் பலர் தற்போது பணியாற்றிவருகின்றனர் என்றபோதிலும், டம்மியான பதவிகளில் வைக்கப்பட்டுள்ள திறமைமிக்க அதிகாரிகள் அனைவரையும் இப்போது களத்தில் இறக்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்குமென்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் தற்போதுள்ள எடப்பாடி அரசில் இது உச்சம் தொட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக திறமையும் நேர்மையும் இல்லாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரும் அமைச்சர்களின் ஆதரவுடன் மிக முக்கியமான பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் அமைச்சர்களுக்கு வேண்டிய பதவி உயர்வில் ஐ.ஏ.எஸ் ஆன அதிகாரிகள்தான் ஆட்சியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மக்கள் நலன், மாவட்டத்தின் வளர்ச்சி போன்றவற்றைவிட அமைச்சர்கள், ஆளும்கட்சியினர் போன்றோரைத் திருப்திப்படுத்தும் வகையில் பணியாற்றி, அதில் தாங்களும் பலன் அடைவதே முதல் நோக்கமாகவுள்ளது. செயலர், இயக்குநர் பொறுப்புகளில் உள்ள பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அமைச்சர்களின் ஆதரவுடன் கோலோச்சி வருகின்றனர். இதற்கு நேர்மாறாகத் திறமையான, நேர்மையான அதிகாரிகள், டம்மியான பதவிகளில் பல ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளனர். இதுவரை எப்படியிருந்தாலும் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையிலாவது இவர்களைக் களம் இறக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதற்கு ஒரு சில துறைகளில் தலைமைப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் செயலற்ற தன்மையே காரணமென்பது தற்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலருக்கும் இந்த விஷயத்தில் கடும் அதிருப்தி இருந்தாலும் துணிச்சலாகப் பேசுவதற்கு அச்சப்பட்டு ஒதுங்கி நிற்கின்றனர். இதனால் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பாலச்சந்திரன் நம்மிடம் விரிவாகப் பேசினார்...

``அதிகாரிகளைப் பொறுத்தவரையில், சில பேர் ஃபைல் சம்பந்தமான பணிகளில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். சில பேர் களப்பணிகளில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். இந்த இரண்டிலுமே கொட்டிக்காரர்களாக சிலர் இருப்பார்கள். இரண்டிலும் கெட்டிக்காரத்தனமாக இருக்கும் அதிகாரிகளை இந்த மாதிரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து, அவர்களைக் களத்தில் இறக்க வேண்டும். திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, `சூப்பர் ஆக்ஷன் டீம்’ ஏற்படுத்த வேண்டும். அரசின் அறிவிப்புகள் களத்தில் எந்தளவுக்கு அமலாக்கப்படுகிறது என்பதை இந்த அதிகாரிகள் சரியாகக் கணிப்பார்கள். களச்சூழலை கணிப்பது மட்டுமல்லாமல், அறிவிப்புகள் எதனால் சரிவர செயல்படுத்தப்படவில்லை என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து, அவற்றை எப்படி சரிசெய்யலாம் என்பதற்கான தீர்வுகளையும் சொல்வார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து ஒரு டீம் உருவாக்குவது என்பது போன்ற அணுகுமுறை மூலம், கொரோனாவுக்கு எதிரான போரில் நம்மால் வெற்றிபெற முடியும். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளைக் கையாள வேண்டும். மக்களிடம் அன்பாகச் சொல்வது ஒன்று, வற்புறுத்திச் சொல்வது, அச்சுறுத்திச் சொல்வது என இந்த மூன்றும் அவசியம்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

இன்று நமக்கு இருப்பது சிக்கலான நேரம். இதை மக்கள் புரிந்துகொண்டது மாதிரி தெரியவில்லை. இந்தியாவில் சரியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் 30 கோடிப் பேர் பாதிக்கப்படலாம் என்றும், அவர்களில் 3 - 3.5 சதவிகிதம் மரணங்கள் நிகழலாம் என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அப்படியென்றால், ஒரு கோடியே 20 லட்சம் பேர் மரணமடையும் நிலை ஏற்படும். இத்கைய சூழலில், திறமையான அதிகாரிகளை சரியான இடங்களில் பணியமர்த்தி வேலை வாங்க வேண்டும். அவர்களுக்கு போதுமான சுதந்திரம் அளிக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்தாலே நம்முடைய நோக்கத்தை அடைந்துவிடலாம்.

தமிழ்நாட்டில் வருவாய்த்துறை செயலாளராக சுந்தரதேவன் என்ற அதிகாரி இருந்தார். ஒரு புயல் வந்தபோது, அவர் தலைமையிலான டீம், தமிழ்நாட்டில் எவ்வளவு பாதிப்பு என்பதை கிராம வாரியான துல்லியமான விவரங்களை மத்திய அரசுக்கு இரண்டாவது நாளே அனுப்பி வைத்தது. அந்தளவுக்கு சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டது தமிழ்நாடு. அரசு அதிகாரிகள் கோவேறு கழுதைகள் மாதிரி என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அவர்கள் எவ்வளவு பாரம் வேண்டுமானாலும் தாங்குவார்கள். ஆனால், அவர்கள் மீது எந்தப் பாரத்தை ஏற்ற வேண்டும் என்று கணித்து ஏற்ற வேண்டும். இன்றைய நிலைமையும் அதுதான். அரசு அதிகாரிகள் மீதும் அரசு ஊழியர்கள் மீதும் இன்றைக்கு எந்தப் பாரத்தை ஏற்ற வேண்டும் என்று கணித்து ஏற்றினால், கொரோனாவை வைரஸ் பாதிப்பை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திவிடுவோம். அதற்கு திறமைமிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்றார்.

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

இது குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசியபோது, ``தமிழ்நாடு அரசு 144 தடையுத்தரவு பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு மக்கள் மத்தியில் ஒரு பீதி கிளம்பியது. பொங்கலுக்கும் தீபாவளிக்கும் சொந்த ஊருக்கு செல்வதுபோல பல்லாயிரக்கணக்கில் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு படையெடுத்தனர். அங்கு, பேருந்து வசதிகள் முறையாகச் செய்யப்படாததால், அவர்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். தற்போதைய சூழலில், தமிழ்நாட்டில் உள்ள திறமைமிக்க அதிகாரிகள் அனைவரையும் முழுவீச்சுடன் களமிறக்கினால் இதுபோன்ற அனைத்துப் பிரச்னைகளையும் தவிர்க்க முடியும்.

ஆனால், இன்றைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் ஹீரோ போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இதுபோன்ற அசாதாரணமான சூழலில் மைலேஜ் தேடுவது மிகவும் தவறானது. கஜா புயல் நேரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மட்டுமே பேட்டி கொடுத்துக்கொண்டு தம்மை முன் நிறுத்திக்கொண்டிருந்தார். இது மிகவும் தவறான அணுகுமுறை.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்த மக்கள்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்த மக்கள்

சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ், தலைநகர் சென்னையைத் தாண்டி வேறு இடங்களுக்குப் போகிற மாதிரி தெரியவில்லை. கொரோனாவுக்கு எதிராகக் களத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றெல்லாம் புகார்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளராக இருப்பவர் சூறாவளியைப்போல சுற்றிவந்து பணியாற்ற வேண்டாமா? இறையன்பு, உதயச்சந்திரன், சகாயம், சுப்ரியா சாஹூ, அன்சுல் மிஸ்ரா, ககன்தீப்சிங் பேடி போன்ற திறமைமிக்க அதிகாரிகள் டம்மியான இடங்களில் இருக்கிறார்கள். தற்போதைய சூழலில், அவர்களை இந்த நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

அரசு பல்வேறு திட்டமிடல்கள் செய்தாலும், களத்தில் உள்ள பிரச்னைகளை சரிசெய்வதற்கும் கண்காணிப்பதற்கும் திறமையான அதிகாரிகளுக்கு பணிகள் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், ``அமைச்சர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவர்கள்தான் சுகாதாரத்துறையின் முக்கியப் பதவிகளில் இருக்கிறார்கள். எல்லோரும் தலையாட்டி பொம்மைகளாக இருந்தால், கீழே இருக்கும் பிரச்னைகளையும் தவறுகளையும் யார் சுட்டிக்காட்டுவார்கள்?

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

அரசியல் செல்வாக்கிலும் வேறு சில வழிகளிலும் வந்தவர்கள்தாம் இத்துறையின் முக்கியப் பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் ஆளும்கட்சிக்காரர்களாகவே மாறிவிடுகிறார்கள். பிறகு எப்படி நிர்வாகம் சரியாக இருக்கும்? கொரோனா தடுப்பு நடவடிக்கையில் திறமையான பல அதிகாரிகள் களத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் தலையில் நிறைய சுமைகள் இருப்பதால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அலுப்பு ஏற்பட்டுவிடுகிறது. எனவே, திறமையான அதிகாரிகள் அனைவரையும் இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்” என்றார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் இது குறித்து பேசியபோது, ``அமைச்சர்கள் தங்களுக்கு இணக்கமான அதிகாரிகளை தங்கள் துறைகளின் முக்கியப் பதவிகளில் வைத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக, மாவட்ட ஆட்சியாளர்களாக இருப்பவர்களில் பலர் நேரடி ஐ.ஏ.எஸ் கிடையாது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
கொரோனா 144 தடை உத்தரவு... சென்னை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

பதவி உயர்வின் மூலம் உயர்ந்த இடத்துக்கு வந்த அவர்கள் அமைச்சர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவர்களாக இருப்பதால், நீண்ட காலமாகவே மாவட்ட ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள். ஆனால், திறமையும் நேர்மையும் கொண்ட பல அதிகாரிகள் டம்மியான பதவிகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார்கள் கவலையுடன்

அடுத்த கட்டுரைக்கு