Published:Updated:

``கல்பாக்கம் அணுஉலைகள் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை!'' - உலக அணு ஆற்றல்துறை அறிக்கை விவரம்

இந்த ஆய்வறிக்கைப்படி, உலகத்தின் ஆற்றல் தேவையில் 1996-ம் ஆண்டு 17.46 சதவிகிதமாக இருந்த அணு ஆற்றல் துறை, 2018-ம் ஆண்டுக் கணக்குப்படி 10.15 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

Nuclear Power Plant
Nuclear Power Plant ( Pixabay )
பருவநிலை சீரற்று இருக்கின்றது. அதை உடனடியாகச் சீராக்க வேண்டியது அவசியம். ஆனால், அணு ஆற்றல் துறை மிக மெதுவாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்தை ஈடுகட்டும் வகையில் வேகமாகச் செயல்பட அதனால் முடியவில்லை.
மைக்கேல் ஸ்கெய்டர் (Mycle Scheider)
Nuclear Reactor
Nuclear Reactor
Pixabay

கடந்த 24-ம் தேதி, உலக அணு ஆற்றல் துறையின் நிலைகுறித்த அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையைத் தயாரித்த குழுவின் தலைவர்தான், மைக்கேல் ஸ்கெய்டர். அந்த ஆய்வறிக்கைப்படி, உலகத்தின் ஆற்றல் தேவையில் 1996-ம் ஆண்டு 17.46 சதவிகிதமாக இருந்த அணு ஆற்றல் துறை, 2018-ம் ஆண்டுக் கணக்குப்படி 10.15 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இந்த வீழ்ச்சி, உலக நாடுகளின் கவனம் அணு ஆற்றலைத் தாண்டி புதுப்பிக்கத்தக்க, நீண்டகாலம் பயன்தரக்கூடிய ஆற்றலின் பக்கம் செல்வதைக் காட்டுகிறது. அணு ஆற்றலைப் பின்னுக்குத் தள்ளி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, நீர்மின் ஆற்றல் போன்றவை உலக அளவில் பெருகிக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு அமைப்புகள் இணைந்து, உலக அணு ஆற்றல் துறையின் நிலைகுறித்த அறிக்கையை வெளியிடும். இந்த ஆண்டு வெளியாகியுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுக்கவே அணு ஆற்றல் துறை வீழ்ச்சியில்தான் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவின் அணு ஆற்றல் துறையும் மிக மோசமான நிலையில்தான் இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கூடங்குளம் அணுஉலை அடிக்கடி பழுதடைந்துகொண்டிருப்பது முதல், கடந்த ஆண்டு ராஜஸ்தானில் மூடப்பட்ட அணுஉலை வரை நமக்கு அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. அணு ஆற்றல் துறையின் உற்பத்தித் திறனே மிகக் குறைவான சதவிகிதத்தில் இருக்கும் நிலையில், கூடங்குளம் அணு ஆலையில், பாதிக்கும் குறைவான உற்பத்தியே நடைபெற்றுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

Nuclear Energy
Nuclear Energy
Pixabay

இந்தியாவின் மின்சார உற்பத்தியில், அணு ஆற்றல் துறையின் பங்கு மிக மிகக் குறைவு. 2016-201ஆம் ஆண்டின் மொத்த மின்சார உற்பத்தி 1,478 டெராவாட். அதில் 75 சதவிகிதம், நிலக்கரி மூலம். 9 சதவிகிதம், நீர்மின் நிலையங்கள் மூலம். 5 சதவிகிதம் இயற்கை எரிவாயு மூலம். 4 சதவிகிதம் சூரிய மின்சக்தி மூலம் கிடைத்துள்ளது. இவை எல்லாவற்றையும்விட மிகக் குறைவாக, வெறும் 2.6 சதவிகித மின்சக்திதான் அணு ஆற்றல் மூலம் கிடைத்தது. இந்த மொத்த உற்பத்தியிலும் 18 சதவிகித மின்சாரம், விநியோகத்தின்போது வீணாகியுள்ளது. ஆகவே, மக்களுக்குக் கிடைத்தது 1110 டெராவாட் மின்சாரம்தான். விநியோகத்தில் வீணான அந்த 18 சதவிகித ஆற்றலில், அணு ஆற்றல் எவ்வளவு இருந்திருக்கும் என்ற கணக்கு கிடைத்தால்தான், அதனால் விளைந்த பயன் எவ்வளவு என்பது தெரியவரும்.

Vikatan

இந்தியாவில், ஏழு அணு ஆலைகளில் 22 அணுஉலைகள் இயங்குவதாக அரசாங்கம் சொல்கிறது. ராஜஸ்தானின் அணு ஆலையிலுள்ள முதல் உலை அதிகாரபூர்வமாக மூடப்பட்டிருப்பதாகக் கடந்த ஆண்டுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த உலையில் 2005-ம் ஆண்டிலிருந்தே மின்சார உற்பத்தி நடைபெறவில்லை.

என்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..? #DoubtOfCommonMan

'ஆற்றல் துறையின் புள்ளிவிவரங்கள்' (Energy Statistics 2019) என்ற அறிக்கையின்படி, 2017-2018 ஆண்டின் மின்சார உற்பத்தியில் அணு ஆற்றல் துறையின் பங்கு 2.58 சதவிகிதம் மட்டுமே. சூரிய மின்சக்தி உற்பத்தி 7.02 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அணு ஆற்றலில், ஆரம்பத்திலிருந்தே இந்திய அரசு தவழ்ந்துகொண்டு தானிருக்கிறது. உலக அணு ஆற்றல் துறையின் நிலைகுறித்த அறிக்கைப்படி, இந்திய அரசு இன்னமும் தவழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.

உலகமே புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய பாய்ச்சலில் வேகமெடுத்துள்ளது. இப்போது, வளர்ந்துகொண்டிருக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை, அணு ஆற்றலின் உற்பத்தியை இன்னும்கூட குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018-ம் ஆண்டில், புதிதாக எந்த அணுஉலையும் மின் உற்பத்தியைத் தொடங்கவில்லை. கல்பாக்கத்தில் கட்டப்படும் ஈனுலைகளைப் பற்றிய கடுமையான விமர்சனங்களை இந்த அறிக்கை முன்வைக்கிறது. 2010-ம் ஆண்டே தொடங்கியிருக்கவேண்டிய மின் உற்பத்தி, இன்றளவும் தொடங்கவில்லை. இன்னும் கட்டுமானப் பணியிலேயே இருக்கிறது.

WInd energy
WInd energy
Pixabay

இதுபோக, கக்ரபார் அணுஉலைகள் கட்டுமானம், கோரக்பூரில் திட்டமிடப்பட்டுள்ள கனநீர் உலைகள் எனப் பல வேலைகள் தாமதப்பட்டும் நிலுவையிலும் உள்ளன. நாட்டின் மின்சாரத் தேவையில் குறைந்தபட்ச தேவையைக்கூட அணு ஆற்றல் துறையால் வழங்க முடியவில்லை. அதோடு, இருக்கும் 22 உலைகளும் அதிகமான செலவுகளை எடுத்துக்கொள்கின்றன. இந்தியாவின் அணு ஆற்றல் துறை மிக மோசமான நிலையில் இருப்பதாக, உலக அணு ஆற்றல் துறையின் நிலைகுறித்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியா மட்டுமல்ல, அணுசக்தித் துறையில் லட்சிய நோக்கோடு திட்டமிட்டுக்கொண்டிருக்கும் சீனா உள்பட அனைத்து அணுசக்தி நாடுகளுமே, அணு ஆற்றலைவிட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்தான் அதிக மின்சாரத்தை உற்பத்திசெய்துள்ளன.

உலக அணு ஆற்றல் அமைப்பு, ஓர் அணு உலையை அமைப்பதற்கென சராசரியாகக் கணித்த காலம் ஐந்து முதல் எட்டு ஆண்டுகள்தான். ஆனால், நடைமுறையில் சராசரியாக ஓர் அணு உலையை அமைக்க 10 ஆண்டுகளுக்கும் மேல் தேவைப்படுகிறது. அதன்பிறகும்கூட, அணுஉலைகள் தம் இயக்கத்தைத் தொடங்குவது மிகத் தாமதமாகிறது. உலக அளவில் 2018-ம் ஆண்டு ஒன்பது யூனிட்டுகளும், 2019-ம் ஆண்டு இதுவரை ஐந்து யூனிட்டுகளும் இயக்க முடியாமல் மூடப்பட்டுவிட்டன. சர்வதேசப் பருவநிலை மாற்றப் பிரச்னை மிக வீரியமாக இருக்கும் இந்தச் சமயத்தில், இவ்வளவு மெதுவாகச் செயல்படும் அணு ஆற்றல் துறையால் தாக்குப்பிடிக்க முடியாதென்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Production
Production
Pixabay

இப்போதிருக்கும் அணுஉலைகளின் எண்ணிக்கை முன்பிருந்ததைவிடக் குறைவுதான். 2002-ம் ஆண்டு, உலகம் முழுக்க 438 உலைகள் இருந்தன. தற்போது, 417 அணுஉலைகளே உள்ளன. இப்போதுள்ள பெரும்பாலான உலைகளின் வயது சராசரியாக 30 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. காலம் கடந்த உலைகள் எதிர்காலத்தில் மூடப்படும் என்பதால், இப்போதிருக்கும் அவற்றின் உற்பத்தித் திறனைத் தக்கவைக்கவே புதிதாக 188 அணுஉலைகளைத் தொடங்க வேண்டும். அதாவது, அடுத்துவரும் ஆண்டுகளில் தொடங்கப்படும் அணுஉலைகளின் எண்ணிக்கை இப்போதிருப்பதைவிட மூன்று மடங்கு வேகமாக இருந்தால்தான் இப்போது கிடைக்கும் அளவுக்கான மின்சார உற்பத்தியே கிடைக்கும். இல்லையென்றால், அணுஉலைகளின் உற்பத்தி இதைவிட மோசமான நிலைக்குத்தான் செல்லும். அணு உலைகளை அமைப்பது அதீத செலவு பிடிக்கும் செயல். அணு ஆற்றல் துறையைத் தேவையானது என்பதைவிட ஆடம்பரமானது என்று சொன்னால் அது மிகையல்ல. ஆபத்தான மற்றும் ஆடம்பரமான அணு ஆற்றல் துறையில், தொடர்ச்சியாகக் கவனம் செலுத்துவது எவ்வளவு அபாயகரமானது என்பதைத்தான் இந்த அறிக்கை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.

கரிம வாயு வெளியேற்றத்தைக் குறைக்க, அணு ஆற்றலில் கவனம் செலுத்தலாம் என்ற கருத்து ஒருபுறம் சொல்லப்படுகிறது. அதுகுறித்த அறிக்கையில், "பருவநிலை மாற்றத்தைத் தடுக்க கரிம வாயுவை வெளியேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அதை விரைவாகவும் குறைந்த செலவிலும் சாத்தியப்படுத்த வேண்டும். ஏனென்றால், நம்மிடம் நேரம் மிகக் குறைவாகவே உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்று மற்றும் சூரிய மின்சக்தியை உற்பத்திசெய்ய ஒரு மெகாவாட்டுக்கு 2,500 ரூபாய் மட்டுமே ஆகும். ஆனால், அணு மின்சக்தியை உற்பத்திசெய்ய ஒரு மெகாவாட்டுக்கு குறைந்தபட்சமே 8,000 ரூபாய் செலவாகிறது.
Climate Emergency
Climate Emergency
Pixabay

இவ்வளவு விலையுயர்ந்த மின்சாரத்தைவிட, குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகமாக உற்பத்திசெய்துவிட முடியும். இன்றைய சூழ்நிலைக்கு, சர்வதேச அளவில் அது இன்னும் எளிமையாகிவிட்டது. காற்று மற்றும் சூரிய எரிசக்தி உற்பத்தியில் முறையே 88 சதவிகிதம் மற்றும் 69 சதவிகிதம் விலை குறைந்துள்ளது. அதேசமயம், அணு ஆற்றலுக்கு 23 சதவிகிதம் விலை உயர்ந்துவிட்டது. இந்தத் துறையில் முதலீடுகள் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். காற்று மற்றும் சூரிய மின்சக்தித் துறையில் தனித்தனியாகச் செய்யப்பட்ட முதலீடுகளைக்கூட அணு ஆற்றல் துறை முதலீடு எட்டவில்லை.

அணு ஆற்றல் துறை ஆபத்தான துறை மட்டுமல்ல, அது லாபகரமான தொழிலும் கிடையாது. தீவிரமாகிவரும் பருவநிலை மாற்றங்களைச் சரிக்கட்ட, அதில் செய்யப்படும் முதலீடுகளை வேறு ஆரோக்கியமான துறைகளில் முதலீடு செய்தால், பருவநிலை பிரச்னையையும் சரிக்கட்ட முடியும். பொருளாதார, கால மற்றும் உழைப்பு விரயத்தையும் தவிர்க்க முடியும் என்பதையே உலக அணு ஆற்றல் துறையின் நிலைகுறித்த அறிக்கை உணர்த்துகிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் உலக அளவில் இந்தியாதான் முதலிடம்... பின் ஏன் அணுசக்தி? #MustRead

இந்த அறிக்கையின் சாராம்சங்களைப் புரிந்துகொண்டு, இந்திய அணு ஆற்றல் கொள்கைகளை அரசாங்கம் வகுக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைப்பதில் முனைப்போடு செயல்பட வேண்டும்.