அலசல்
Published:Updated:

அம்மா பூங்காவாக மாறிய அரசுப் பள்ளி!

அம்மா பூங்காவாக மாறிய அரசுப் பள்ளி!
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மா பூங்காவாக மாறிய அரசுப் பள்ளி!

அம்மா பூங்காவாக மாறிய அரசுப் பள்ளி!

ன்னியாகுமரி மாவட்டம் மேலசங்கரன்குழி ஊராட்சியில் மூடப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளியை மீண்டும் திறக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், ‘அம்மா பூங்கா’வாக அது உருமாற்றப்பட்டுள்ளது.

நாகர்கோவில் தொகுதியில் மேலசங்கரன்குழி பேரூராட்சிக்கு உள்பட்ட சடையால்புதூர் பால்டானியேல்புரம் சர்ச் அருகே 85 ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்தது ஓர் அரசுத் தொடக்கப்பள்ளி. 2011-ல், கோடை விடுமுறைக்காகப் பூட்டப்பட்ட அந்தப் பள்ளி, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிரந்தரமாக மூடப்பட்டது. பள்ளியை மீண்டும் திறக்குமாறு கல்வித்துறை உயர்அதிகாரிகளிடம் மனு கொடுக்க அலைந்துதிரிந்தனர் மக்கள். இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு ஊஞ்சல், சறுக்கு, நடைபாதை என ரூ.20 லட்சம் செலவில் அங்கு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. ‘அம்மா பூங்கா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பூங்காவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்துள்ளார். அங்கு பள்ளி இருந்தது என்பதற்கு அடையாளமாக, புதர்கள் மண்டிய வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளன.

அம்மா பூங்காவாக மாறிய அரசுப் பள்ளி!

அரசுப் பள்ளியை மீண்டும் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருபவர் ஐசக் ராஜாமணி. அவரிடம் பேசினோம். “1933-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில், இந்தத் தொடக்கப்பள்ளி, மலையாளவழிக் கல்வியில் தொடங்கப்பட்டது. 1946-ல் தமிழக அரசு சார்பில் தமிழ்வழிப் பாடத் திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்தது. இந்தப் பள்ளியில் படித்த பலர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் என உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். நானும் இங்குதான் படித்தேன். 25 மாணவர்கள் இருந்தால் பள்ளியை ஆங்கில மீடியமாக மாற்றி மீண்டும் திறக்கலாம் என்று 2015-ம் ஆண்டு அன்றைய கலெக்டர் கூறினார். நாங்கள் வீடு வீடாகச் சென்று, 56 மாணவர்களைக் கணக்கெடுத்து பெற்றோர்களின் உறுதிமொழிக் கையெழுத்துடன் பட்டியலை கலெக்டரிடம் கொடுத்தோம். கலெக்டர் ஆர்டர் போட்டு சி.இ.ஓ-வுக்கு அனுப்பினார். சி.இ.ஓ. ஒப்புதல் வழங்கி டி.இ.ஓ-வுக்கு அனுப்பிவைத்தார். சரி, பள்ளியைத் திறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. பள்ளியைத் திறக்காமல் அங்கு பூங்காவைத் திறந்துள்ளனர். அரசுப் பள்ளிகள் உயிர்பெற்று வரும் இந்தக் காலகட்டத்தில், மீண்டும் இந்தப் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் முறையிட உள்ளோம்” என்றார்.

இந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மணி, “1989 முதல் 1995 வரை இந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். நானும்கூட, இந்தப் பள்ளியில் தான் படித்தேன். எட்டு ஆசிரியர்களும் 145 மாணவ, மாணவிகளும் இருந்தார்கள். 2011-ம் ஆண்டு பள்ளியை மூடியபோது, மூன்று ஆசிரியர்களும் 18 மாணவர்களும் இருந்தனர். அந்த ஆண்டு மேலும் 15 மாணவர்கள் புதிதாகச் சேர்வதற்குத் தயாராக இருந்தனர். ஆனால், இங்கு பணிபுரிந்த ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றலாகிச் செல்லும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

அம்மா பூங்காவாக மாறிய அரசுப் பள்ளி!

இந்தப் பள்ளிக் கட்டடம்,  பல ஆண்டுகளாக வாக்குச்சாவடியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, வகுப்பறைக் கட்டடம் பலமாகவே உள்ளது. மாணவர்களை இங்கு படிக்க அனுப்புவதற்குப் பெற்றோரும் தயாராக உள்ளனர். ஒன்றேகால் ஏக்கர் நிலப்பரப்புகொண்ட இந்தப் பள்ளி, வருங்காலத்தில் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட வேண்டும் என ஆசைப்பட்டோம். இது பூங்காவாக மாறியதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது” என்றார்.

நாகர்கோவில் சப் கலெக்டர் ராகுல்நாத்திடம் பேசினோம். “அந்தப் பள்ளிக் கட்டடத்தை வாக்குச்சாவடியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். வாக்குச்சாவடி செயல்படுவதால், அந்தக் கட்டடத்தை அகற்ற முடியவில்லை. நான் சப் கலெக்டராக வருவதற்கு முன்பே கிராமச் சபையில் தீர்மானம் கொண்டுவந்துதான் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வகுப்பறைக் கட்டடத்தை நான் ஆய்வுசெய்தபோதுகூட, ‘பள்ளியில் போதுமான மாணவர்கள் இல்லை என்பதால் மூடிவிட்டோம்’ என்று சி.இ.ஓ அலுவலகத்தில் சொன்னார்கள். தேவையான மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுசம்பந்தமாக சி.இ.ஓ-விடம் பேசுகிறேன்” என்றார்.

‘ஒரு பள்ளி திறக்கப்படும்போது அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது’ என்பார்கள். பள்ளியை மூடிப் பூங்கா அமைத்துப் புதுமை படைத்திருக்கிறது தமிழக அரசு. 

- ஆர்.சிந்து, படங்கள்: ரா.ராம்குமார்