மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - பார்த்திபன் (தேனி)

என்ன செய்தார் எம்.பி? - பார்த்திபன் (தேனி)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - பார்த்திபன் (தேனி)

பன்னீருக்குத் தம்பியாக இருக்கிறார்... தொகுதிக்கு எம்.பி-யாக இல்லை!ஓவியம்: கார்த்திகேயன் மேடி

#EnnaSeitharMP
#MyMPsScore

2006 சட்டசபைத் தேர்தலில்  போடிநாயக்கனூர் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போன பார்த்திபனுக்கு, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. நேர்காணலுக்குச் சென்ற பார்த்திபன், ‘‘கஷ்டத்தில் இருக்கிறேன். அம்மா வாய்ப்பு கொடுத்தாலும், டெபாசிட் கட்டக்கூட என்னிடம் பணம் இல்லை” என ஜெயலலிதாவிடம் சொல்லியிருக்கிறார். உடனே ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்த ஜெயலலிதா, ‘‘செலவுகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என உத்தரவிட்டார். டெபாசிட் கட்டுவது தொடங்கி வெற்றி வரை பன்னீர்செல்வம் கவனித்துக்கொண்டார். அதற்கு நன்றிகாட்டும் விதமாக இன்றுவரை பன்னீர் செல்வத்துக்கு விசுவாசமாக இருக்கும் பார்த்திபன், வாக்களித்த மக்களுக்கு என்ன விசுவாசம் காட்டினார்? 

தேனி சின்னமனூர் அருகே உள்ள கூழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். அப்போது தேனி மாவட்டச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் தன்னிடம் தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டிருந்ததால், கள்ளர் சமூகத்திலிருந்து ஒரு விசுவாசி தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என முடிவுசெய்து, பார்த்திபன் ஜெயிப்பதற்கு அத்தனை உழைப்பையும் கொடுத்தார் பன்னீர். ‘‘ஜெயித்த பிறகு எம்.பி-யாக பார்த்திபன்  மாறினாரா என்பது தெரியாது. ஆனால், பன்னீருக்கு தம்பியாகவே மாறிப்போனார். தொகுதி மேம்பாட்டு நிதி முதல் நாடாளுமன்ற உரை வரையில் பன்னீரிடம் கேட்டுத்தான் செய்வார்’’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். 

விவசாயமும், தோட்டங்களும், பல தொழில்களும் நிறைந்து விளங்கிய தேனி மாவட்டத்தில், எல்லாமே நசிந்துபோனது சமீபத்தில்தான். ‘‘தேனியைச் சுற்றி முன்பு 11 பஞ்சாலைகள் இருந்தன. இப்போது இரண்டு மட்டுமே மூச்சைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. பருப்பு மற்றும் எண்ணெய் மில்கள் பல மூடப்பட்டுவிட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பிழைப்பு தேடி சென்னை, திருப்பூர், கோவை என இடம்பெயர்ந்துள்ளனர். முல்லைப்பெரியாறும், வைகையும் இங்கிருந்து கிளம்பி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் வரை செல்கிறது. ஆனால், தேனி மாவட்டத்தில் பல இடங்களில் தண்ணீர்ப் பிரச்னை தீர்க்கப்படவில்லை’’ என்றார்கள் விவசாயிகள்.

என்ன செய்தார் எம்.பி? - பார்த்திபன் (தேனி)

‘‘தேனி மாவட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மா பயிர் செய்யப்படுகிறது. எனவே, மாம்பழக் கூழ் தொழிற்சாலையை பெரியகுளத்தில் அமைக்க வேண்டும் என்பது 20 ஆண்டு கோரிக்கை. இங்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் டன் மாம்பழங்கள் விளைவிக்கப் படுகின்றன. பெரும்பாலும் கல்லா, அல்போன்சா ரகங்கள்தான். இவை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சித்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலைகளுக்குப் போகின்றன. இதற்காக ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் செலவாகிறது. தேர்தல் நேரத்தில், ‘மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைப்போம்’ என எல்லோரையும் போல பார்த்திபனும் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், இதுநாள்வரை அதற்கான எந்த முயற்சியையும் அவர் செய்யவில்லை” என்று புலம்புகிறார்கள் பெரியகுளம் பகுதி மா விவசாயிகள்.

பா.ம.க நிர்வாகி பொன்.காட்சிக்கண்ணன், ‘‘மற்ற பகுதிகளில் சீஸன் நேரத்தில் மட்டுமே திராட்சை பயிர் செய்ய முடியும். ஆனால், கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டுமுழுவதும் திராட்சை சாகுபடி ஆகிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையின்போது, ‘திராட்சையில் அதிக அளவு மருந்து தெளிக்கிறார்கள்’ என்று சொல்லி நமது வணிகத்தை கேரளாகாரர்கள் தடுத்தார்கள். இதனால், பெரிய பொருளாதாரச் சரிவை திராட்சை விவசாயிகள் சந்தித்தனர். அதைச் சரிசெய்ய எம்.பி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டவும், சந்தைப்படுத்தவும் நிறைய திட்டங்களை அறிவித்தது மோடி அரசு. மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, அதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவர பார்த்திபன் முயற்சி எடுக்கவில்லை. இங்கு திராட்சைத் தோட்டங்களை நம்பி, சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். ஒயின் தயாரிப்பில் துவங்கி, உலர் திராட்சை தயாரிப்பு வரை பல விஷயங்களைச் செய்யலாம். அரசும் எம்.பி-யும் எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. திராட்சை ஒயின் தயாரிப்பை குடிசைத்தொழிலாக மாற்றி, மானியம் தரவேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. இன்றுவரை அதைப்பற்றி வாய் திறக்கவில்லை பார்த்திபன்” என்றார்.

எம்.பி பார்த்திபன் தத்தெடுத்த புள்ளிமான் கோம்பை ஊராட்சிக்குச் சென்றோம். நடுக்கோட்டை, கொண்டல்பட்டி, தர்மத்துபட்டி, ராஜப்பன்கோட்டை, கொட்டோடைபட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது இந்த ஊராட்சி. இக்கிராமங்களில் அரசுப் போக்குவரத்து வசதிகள் இல்லை. ஏதாவது அவசரம் என்றால், 20 கி.மீ சென்று சிகிச்சை எடுக்கும் சூழல்தான் உள்ளது. ஒழுங்கான பள்ளிக் கட்டடம், கழிவுநீர்க் கால்வாய்கள், கழிப்பிட வசதி என எதுவும் இல்லை. இவ்வளவு ஏன், புள்ளிமான் கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட சில கிராமங்களில் மின்சார வசதிகூட இல்லை.

‘‘எங்கள் ஊராட்சியை எம்.பி தத்தெடுத்ததாக சொன்னார்கள். ஓட்டு கேட்டு வந்ததோடு சரி, அதன்பிறகு இந்தப் பக்கம் அவர் வந்ததே இல்லை” என்றனர் கிராமத்தினர்.

முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-வான கம்பம் ராமகிருஷ்ணன், ‘‘முல்லைப் பெரியாறு நீரை தென் மாவட்டங்களின் விவசாயத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தீர்ப்பு வந்த பின்பும், அதற்கு ஆதாரமாக விளங்கும் பேபி அணையை பலப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திண்டுக்கல் - குமுளி ரயில் பாதை அமைக்கப்பட்டால் தேனி மாவட்டத்தின் பல ஊர்கள் பயனடையும். இதற்காக ஆய்வுப் பணிகள் முடிந்தும், திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மதுரை - போடி ரயில் பாதையை அகலப் பாதையாக்க போதிய நிதி ஒதுக்காததால், பல வருடங்களாக பணி நீண்டு கொண்டே இருக்கிறது. எம்.பி இதில் அக்கறை காட்டவில்லை. ரயிலே ஓடாத மாவட்டமாக தேனி உள்ளது. மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் சென்று ரயிலைப் பிடிக்க வேண்டியுள்ளது.

இங்கே மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியைக்கூட எம்.பி-யால் கொண்டுவர முடியவில்லை. கம்பம் வட்டாரத்தில் பல கண்மாய்கள் தூர்வாராமல் உள்ளன. அவற்றைச் சரி செய்தால், 5,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அவரோ, வாக்களித்த மக்களைவிட தன்னை எம்.பி ஆக்கிய பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கிறார்’’ என்றார்.

வர்த்தகர் சங்கத்தினர், ‘‘பருப்பு, எண்ணெய், ஏலம், தேயிலை, பழங்கள் என தமிழகத்தில் மிகப்பெரிய சந்தையாகத் திகழ்ந்த நகரம் தேனி. கேரள வியாபாரிகள் அதிகம் இங்கு வந்து கொண்டிருந்தனர். சரியான போக்குவரத்து வசதி இல்லாததாலும், இங்கு போதிய அளவு உற்பத்தி இல்லாததாலும் அவர்கள் இங்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். பருப்பு கிடைக்காமல் வட மாநிலங்களில் கொள்முதல் செய்கிறோம். வங்கிகள் கடன் கொடுக்காததால் தொழில்கள் நசிந்துவிட்டன. தோட்டத் தொழில்கள் சிறப்பாக இருந்தும், அதை மதிப்புக் கூட்டவோ, சந்தைப்படுத்தவோ கட்டமைப்பு வசதிகளைச் செய்துதரவில்லை. தேனி நகருக்கே நீராதாரமாக விளங்கும் ஊருணியைத் தூர்வார பலமுறை முறையிட்டும் எம்.பி நிதியிலிருந்து பணம் ஒதுக்கவில்லை. கம்பம், பெரியகுளம், தேனியில் சுற்றுச்சாலைகளே இல்லை’’ என வேதனையுடன் சொன்னார்கள்.

‘‘மேகமலை, குரங்கணி, சுருளி அருவி என இயற்கை கொஞ்சும் 12 சுற்றுலாத் தலங்கள் தேனி மாவட்டத்தில் உள்ளன. மத்திய அரசின் சுற்றுலாத் துறை மூலம் இவற்றை மேம்படுத்த எம்.பி அக்கறை காட்டவில்லை. இதைச் செய்திருந்தால், சுற்றுலாத் துறை மூலம் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். அதிக செலவில்லாமல் சாதாரண மக்களும் செல்வதற்கு ஏற்ற இடம் மேகமலை. அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த வசதியும் செய்து தருவதில்லை. தேனி மாவட்டத்தின் நான்கு தொகுதிகளின் நிலை இப்படியென்றால், மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகள் இன்னும் முழு வளர்ச்சியடையாமலே உள்ளன. சரியான விவசாயம் இல்லை. வேலைவாய்ப்புகளும் இல்லை. மத்திய அரசு நிறுவனங்களை அப்பகுதியில் கொண்டு வரவும் முயற்சி எடுக்கவில்லை’’ என புலம்பல்கள் கேட்கின்றன.

காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளர் சங்கர நாராயணன், ‘‘பைப் தயாரிக்கும் சிறு தொழிற்கூடங்கள் இங்கு உண்டு. அவை ஜி.எஸ்.டி-யால் மிகவும் நலிவடைந்துவிட்டன. பெரு நிறுவனங்களோடு மோத முடியாமல், சிறு நிறுவனங்கள் தொழிலை விட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு மத்திய அரசு அளிக்கும் சலுகைகளை இங்குள்ள தொழில்களுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கலாம். வங்கிக் கடனுதவி அளிப்பதற்குப் பேசியிருக்கலாம். இப்படியே போனால், தேனி மாவட்டத்தில் தொழிலும் வர்த்தகமும் அழிந்துவிடும்’’ என்றார்.

அகல ரயில்பாதைக்காகத் தொடர்ந்து போராடி வரும் போடி வர்த்தகர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ லாசர் தலைமையில் செயல்படும் போடி - மதுரை அகல ரயில்பாதை திட்ட அமலாக்க குழு ஆகியவற்றின் சார்பில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், நவம்பர் மாதத்தில் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பிரச்னைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் பற்றியும், தொகுதிக்கு இதுவரை என்ன செய்திருக்கிறார் என்பதை அறியவும் பார்த்திபனிடம் தொடர்புகொண்டோம். ‘‘சொல்வதற்கு என்ன இருக்கிறது? முடிந்தவரை எல்லாம் செய்துள்ளோம்’’ என்றவரிடம், ‘‘நேரில் விரிவாகப் பேச வேண்டும்’’ என்றோம். ‘‘அலுவலகத்தில் இருங்கள். வந்துவிடுகிறேன்’’ என்றார். நாமும் சின்னமனூரிலுள்ள எம்.பி அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தோம். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நம்மை சந்திக்க அவர் வரவில்லை. அலைபேசியிலும் பேசவில்லை.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- செ.சல்மான், எம்.கணேஷ்

என்ன செய்தார் எம்.பி? - பார்த்திபன் (தேனி)
என்ன செய்தார் எம்.பி? - பார்த்திபன் (தேனி)
என்ன செய்தார் எம்.பி? - பார்த்திபன் (தேனி)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

ன் அலுவலகத்தைக்கூட மாவட்டத் தலைநகரமான தேனியில் வைக்காமல், சின்னமனூரில் கண்ணுக்குத் தெரியாத ஓர் இடத்தில் வைத்திருக்கிறார் பார்த்திபன். சின்னமனூரில் ‘‘எம்.பி. ஆபீஸ் எங்கே இருக்கு?’’ என்று கேட்டால், ‘‘எம்.பி-யா... அவர் எப்படி இருப்பார்?’’ என எதிர்கேள்வி எழுப்புகிறார்கள். சின்னமனூரில் மரக்கடை ஒன்றுக்குள் அலுவலகம் வைத்திருக்கிறார் பார்த்திபன். அங்கு ஓர் உதவியாளரை நியமித்திருக்கிறார். மக்கள் மனு கொடுக்க வருகிறார்களா என அவரிடம் கேட்டோம். ‘‘யாரு வரப்போறாங்க?’’ என்றார் அவர். வன வேங்கைகள் என்ற அமைப்பைச் சேர்ந்த சேகர் என்பவர் மூலமாக, ‘குடிகுறவர் மக்கள் ஆயிரம் பேர் வசிக்கும் வள்ளி நகர் பகுதிக்கு கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளும், சமுதாயக் கூடமும் ஏற்படுத்தித் தர வேண்டும்’ என கோரிக்கை மனு ஒன்றை கூரியர் மூலம் எம்.பி அலுவலகத்துக்கு அனுப்பச் செய்தோம். ஒரு வாரம் கழித்து ‘‘இந்த மனு வந்துவிட்டதா?’’ என எம்.பி அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘‘வந்துவிட்டது’’ என்றார்கள். ஆனால், மனுதாரருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

எம்.பி எப்படி?

தே
னி நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியிருக்கும் பெரியகுளம், கம்பம், போடி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 600 பேரைச் சந்தித்து ஜூ.வி டீம் எடுத்த சர்வே:

என்ன செய்தார் எம்.பி? - பார்த்திபன் (தேனி)
என்ன செய்தார் எம்.பி? - பார்த்திபன் (தேனி)