“முன்விடுதலையைத் தடுக்க கவர்னர் மாளிகை சூழ்ச்சி!” - வேலூர் சிறையில் கதறும் முருகன்...

“முன்விடுதலையைத் தடுக்க கவர்னர் மாளிகை சூழ்ச்சி!” - வேலூர் சிறையில் கதறும் முருகன்...
‘ஏழு பேர் விடுதலையில் விருப்பம் இல்லையெனில், கருணைக் கொலை செய்துவிடுங்கள். மௌனமாக இருக்க வேண்டாம்’ என்று கடிதம் எழுதி, கவர்னர் மாளிகையை அதிரவைத்திருக்கிறார், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன். இவரது கடிதத்துக்கு, கவர்னர் மாளிகையிலிருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘கவர்னருக்கு மனு அனுப்புவதை இத்துடன் நிறுத்திக்கொள்’ என்று முருகனை மிரட்டியதாகச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சிறைத்துறை டி.ஐ.ஜி-யான ஜெயபாரதி.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டு களாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்காக, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியது. இதுதொடர்பாக, கவர்னர் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பதால், ஏழு பேரும் கடுமையான மனஉளைச்சலில் உள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில், வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த ஜனவரி 31-ம் தேதி 14 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை கவர்னருக்கு எழுதியிருந்தார்.

அதில், ‘‘இந்த வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரிகள் மற்றும் தீர்ப்பளித்த நீதிபதிகள்கூட, ராஜீவ் காந்தி கொலையில் எங்களுக்குச் சம்பந்தமில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கோப்புகள், உங்கள் மேஜையில் தவம் கிடக்கின்றன. காந்தி, இந்திரா காந்தி கொலை வழக்குகளில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள்கூட விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எங்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள் அல்லது சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக்கொள்வதற்கு அனுமதி கொடுங்கள்’’ என்று உருக்கமாக எழுதியுள்ளார் முருகன்.
இந்நிலையில் முருகனின் வழக்கறிஞரான புகழேந்தி, “முருகன் கடிதம் எழுதிய பிறகு, முருகனின் அறைக்குள் சென்ற டி.ஐ.ஜி ஜெயபாரதி, மூன்று மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை என்ற பெயரில் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தார்’’ என்று குற்றம்சாட்டினார்.
இது குறித்து புகழேந்திடம் நாம் பேசியபோது, ‘‘வேலூர் சிறையில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கின்றன. சிறை வளாகத்துக்குள் சாய்பாபா கோயில் ஒன்று உள்ளது. அதன் சாவியை ஆன்மிகத்தில் நாட்டமுள்ள கைதிகளிடம் சிறைத் துறையினர் கொடுத்துள்ளனர். அப்படி இருக்கையில், கோயில் பூட்டை நள்ளிரவில் சிறைத் துறையினரே உடைத்து, சோதனை நடத்தியிருக்கிறார்கள். அதற்கான அவசியம் ஏன் வந்தது? சாவியைக் கேட்டாலே கொடுத்திருப்பார்கள். இச்செயல், கைதிகளிடம் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக் கிறது. முருகன், ‘ஹரே ராம ஹரே கிருஷ்ண’ அமைப்பின் சீடராக மாறிவிட்டார். அறையில் சுவாமி படங்களை வைத்துப் பூஜை செய்துவருகிறார். போலீஸார் மற்றும் சிறைத் துறையினரை, ஷூ காலுடன் அறைக்குள் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், டி.ஐ.ஜி ஜெயபாரதி வேண்டுமென்றே, ஷூ காலுடன் அறைக்குள் சென்றுவருவதால், அவர் மனதளவில் காயப்பட்டுள்ளார். முன்விடுதலையைத் தடுப்பதற்காகச் சிறைக்குள் முருகனுக்கு எதிராகச் சதி நடக்கிறது. சிறைக் குற்றங்களைச் செய்தவர்களை, முன்விடுதலை செய்ய முடியாது. ‘செல்போன், சிம் கார்டு, சார்ஜர், கத்தி, பணம் போன்ற பொருள்களை அறைக்குள் வைத்திருப்பதாகப் பிரச்னையில் சிக்கவைக்க, கவர்னர் மாளிகையைச் சேர்ந்த அதிகாரிகள், டி.ஐ.ஜி மூலம் திட்டம் போட்டிருக்கிறார்கள்’ என்று முருகன் அச்சப்படுகிறார்’’ என்றார்.

இதுகுறித்து டி.ஐ.ஜி ஜெயபாரதியிடம் கேட்டோம், ‘‘சிறை விதிகளின்படிதான், முருகன் அறையில் சோதனை நடத்தினோம். கவர்னர் தரப்பிலிருந்து என்னை யாரும் இயக்கவில்லை. மாதம்தோறும் சோதனை நடத்துவது வழக்கம். ஷூ காலுடன் மட்டுமல்ல, அறைக்குள்ளேயே என்னை வரக்கூடாது என்கிறார் முருகன். சிறைக்குப் புறம்பான பொருள்களை அறைக்குள் வைத்திருக்கவில்லை என்று சொல்லிவிட்டு, சோதனை நடத்த ஒத்துழைப்பு தர மறுக்கிறார். நான் சோதனை நடத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. மன உறுத்தலில், வழக்கறிஞரை வைத்து என் மீது தொடர்ந்து வீண்பழி சுமத்திக் கொண்டிருக்கிறார். அவர் எழுதிய கடிதத்தை நான் படித்துவிட்டு, என் உயரதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறேன். அவர்கள் மூலம் கவர்னர் மாளிகைக்குக் கடிதம் போய்ச் சேரும்.

முருகன் அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பதாக, பொய்யான தகவல்களை வழக்கறிஞர் தெரிவிக்கிறார். உண்ணாவிரதம் இருப்பதற்கான கோரிக்கையை எழுதி, சிறைக் கண்காணிப்பாளரின் முகவரிக்குத் தபாலில் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, சிறைத்துறை மூலம் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவருக்குத் தேவையான உணவு, தண்ணீரைக் கொடுத்துக்கொண்டே இருப்போம். பேச்சு வார்த்தை நடத்துவோம். உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால், 24 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவர்களை வரவழைத்துப் பரிசோதனை செய்வோம். முருகன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, ஒருமுறைகூட சிறைக் கண்காணிப்பாளருக்குத் தபாலில் தகவல் தெரிவித்து, அனுமதி பெற்றதில்லை’’ என்றார் விளக்கமாக.
இனியாவது இந்த விவகாரத்தில் மௌனம் கலைப்பாரா கவர்னர்?
- கோ.லோகேஸ்வரன்