அலசல்
சமூகம்
Published:Updated:

“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க!’’

“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க!’’
பிரீமியம் ஸ்டோரி
News
“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க!’’

“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க!’’

‘ஸ்வச் பாரத்’ போகாத பொட்டுலுப்பட்டி

பொட்டுலுப்பட்டிக்குள் நாம் நுழைந்தபோது, குண்டும்குழியுமான அந்தச் சாலையின் இருபுறங்களிலும் சிறுவர்கள் இயற்கை உபாதையைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். பொதுக் கழிப்பறை வேண்டும் என்பது இந்தக் கிராம மக்களின் இருபது ஆண்டுகாலக் கோரிக்கை. சமீபத்தில், அங்கு கழிப்பறை கட்டுவதென்று பேரூராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது. ஆனால், மக்களுக்கு வசதியான இடத்தில் கழிப்பறையைக் கட்டாமல், சுடுகாட்டில் கட்டியுள்ளனர். இதனால், கொதிப்பில் இருக்கிறார்கள் பொட்டுலுப்பட்டி மக்கள்.

‘பொதுக் கழிப்பறை வேண்டுமென்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்த எங்களுக்கு இப்போது சுடுகாட்டில் போய் அதைக் கட்டியிருக்கி றார்கள்’ என்று குமுறலுடன் நமக்குத் தகவல் தெரிவித்தனர் பொட்டுலுப்பட்டி மக்கள். உடனே அந்த ஊருக்குப் பயணமானோம். வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு மிக அருகே பொட்டுலுப்பட்டி அமைந்துள்ளது. இங்கு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அந்த ஏழை எளிய மக்கள், பொதுக்கழிப்பறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைகளைக் கழிக்க அருகில் உள்ள காட்டுப் பகுதியிலும், வயல்வெளி களிலும் ஒதுங்குகிறார்கள். தெருவோரமாகவோ, சாலையோரமாகவோ சிறு குழந்தைகள் ஒதுங்குகி றார்கள். பெண்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது. 

“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க!’’

“எங்க கிராமத்துக்கு பொதுக்கழிப்பறை வேணும்னு பல வருஷமா கேட்டுவர்றோம். கலெக்டர் உட்பட பல அதிகாரிங்ககிட்ட மனுக் கொடுத்துட்டோம். யாரும் கண்டுக்கல. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான், ஊர் மந்தைக்கு ஓரமா கட்டித் தர்றோம்னு சொன்னாங்க. ‘நல்லது கெட்டதுக்கு மக்கள் கூடுறதுக்கு அந்த ஒரு இடம்தான் இருக்கு. வேற ஒரு நல்ல இடத்துல கட்டிக்கொடுங்க’ன்னு சொன்னோம். அதுக்கு அதிகாரிங்க கோபப்பட்டுட்டுப் போயிட்டாங்க. அப்புறம், மக்கள் யார்கிட்டேயும் கேட்காம, சுடுகாட்டுல போய் கழிப்பறையைக் கட்டியிருக்காங்க” என்று குமுறினார், அந்தப் பகுதியைச் சேர்ந்த அய்யனார்.

“இயற்கை உபாதையைக் கழிக்க நாங்க சுடுகாட்டுக்கா போகணும்? ஒரு லைட்கூட இல்லாத அந்தச் சுடுகாட்டுக்கு, ராத்திரி நேரத்துல ஆத்திர அவசரத்துக்கு எப்படிங்க போக முடியும்?” என்று வருத்தத்துடன் கூறினார், அப்பகுதியைச் சேர்ந்த சுதா.

இங்கு பொதுக்கழிப்பறை கட்டித் தருமாறு மதுரை மாவட்ட கலெக்டர் தொடங்கி பிரதமர் வரை மனு அனுப்பி யுள்ளனர், அப்பகுதி இளைஞர்கள். “இதுக்காக நாங்க சந்திக்காத அதிகாரிங் களே இல்லைங்க. ‘ஸ்வச் பாரத்’ திட்டத்துல இங்கு கழிப்பறைக் கட்டிக் கொடுங்கன்னு பிரதமருக்கே மனு அனுப்பினோம். யாருமே கண்டுக்கலை” என்று ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தார், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் வாடிப்பட்டி தாலுகா பொறுப்பாளரான நாகமுத்துராஜா.

“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க!’’

அவர், “மக்களுக்கு வசதியான ஒரு இடத்தைத் தேர்வுசெஞ்சு, பொதுக் கழிப்பறையைக் கட்டாம, சுடுகாட்டுல கட்டியிருக்காங்க. கோழி வேஸ்ட் உட்பட ஒரே குப்பையும் கூளமுமா கிடக்குற சுடுகாட்டுல, அதைச் சுத்தம் செய்யவோ, ஒரு லைட் போடவோ முன்வராத அதிகாரிகள், அங்கு பாத்ரூமும் டாய் லெட்டும் கட்டியிருக்காங்க. அதனால, எந்தப் பிரயோஜனமும் கிடையாது” என்று கோபத்துடன் கூறினார்.

“பொட்டுலுப்பட்டிக்கு பக்கத்துல இருக்குற போடிநாயக்கன்பட்டியில ஒரு பொதுக்கிணறு இருக்கு. 1952-ல் ஏற்படுத்தப்பட்ட அந்தக் கிணறு பாழடைஞ்சு போயிருந்துச்சு. இங்குள்ள இளைஞர்கள் பல முயற்சிகள் செஞ்சு அந்தக் கிணத்தைச் சுத்தம் செஞ்சிட்டோம். கிணத்துக்கு பக்கத்துல தண்ணித் தொட்டி இருக்கு. அதுக்கு ஒரு பைப் லைன் கொடுத்துட்டா போதும், கிணத்து தண்ணியை மக்கள் பயன்படுத்த ஆரம்பிசிடுவாங்க. அதைக்கூட பேரூராட்சியில செஞ்சுதர மாட்டிங்கிறாங்க” என்று வருத்தத்துடன் கூறினார், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் கண்ணன்.

“சுடுகாட்டுல டாய்லெட் கட்டி பணத்தை வேஸ்ட் பண்றதுக்குப் பதிலா, எங்க ஏரியாவுல ஒரு பால்வாடியாவது கட்டியிருக்கலாம்” என்றார், சின்ராசு.

“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க!’’

இது தொடர்பாக, வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசியிடம் கேட்டபோது, “சுடுகாட்டுல வசதிகள் வேணுமில்லையா? அதான் அங்கே கழிப்பறை கட்டுறோம். மந்தையிலும் வேணாம், சுடுகாட்டுலேயும் வேணாம்ன்னா, வேற எங்குதான் கட்டுறது?” என்றார் சுருக்கமாக.

சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ-வான மாணிக்கத்திடம் இது பற்றிக் கேட்டபோது, “இந்தப் பிரச்னை என் கவனத்துக்கு வரவில்லை. நிச்சயமாகத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கிறேன். எல்லாவற்றையும் உடனே சரிசெய்து விடுகிறேன்” என்றார் உறுதியாக.

வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிற பகுதிகளில் கழிப்பறை வசதிகள் இருக்கும் போது, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?

- மு.முத்துக்குமரன்
படங்கள்: வீ.சதீஷ்குமார்