சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பொருளாதார வளர்ச்சி: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

பொருளாதார வளர்ச்சி: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
பொருளாதார வளர்ச்சி: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

ஜெ.ஜெயரஞ்சன், ஓவியம்: பாலகிருஷ்ணன்

டுத்து அமையப்போவது காங்கிரஸ் அரசா, பா.ஜ.க அரசா, கூட்டணி அரசா என்பதற்கான விடை, மே 23-ல் தெரிந்துவிடும். எந்த அரசாக இருந்தாலும், புதிய அரசு கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் எவை என்பது குறித்து அலசும் மினி தொடர் இது. இந்த வாரம் பொருளாதார வளர்ச்சி குறித்து அலசுகிறார், பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன்.

யாருக்கு வளர்ச்சி?

இந்தியப் பொருளாதாரம் 7-8 விழுக்காடு என்ற அளவில் விரைவாக வளர்ந்து வருகின்றது. இந்த வளர்ச்சி வேகத்தின் அளவு குறித்துப் பல கேள்விகள் இருந்தபோதிலும், நாம் கவனம் கொள்ள வேண்டியது வளர்ச்சி யாருக்கானது என்பதேயாகும். நாடு வளர்கிறது எனும்போது அதிலுள்ள மக்களின் பொருளாதார நிலையும் வளர்கிறது என்பது மறைபொருள். அதாவது வளர்ச்சியின் பலன்கள் நாட்டுமக்கள் அனைவருக்கும் சேர்கிறது என்பதேயாகும். நடைமுறையில் வளர்ச்சியினால் அனைவரும் பயன்பெறுகின்றனரா என்று கேட்டால் ஆம் என்பதே விடை. ஆனால், இந்தப் பலன்கள் எல்லோருக்கும் சமமாகவும் தொடர்ச்சியாகவும் இருப்பதில்லை.

மேல்தட்டிலுள்ள ஒரு விழுக்காடு மக்களின் வருவாய் குறிப்பிட்ட கால அளவில் பெருகும் வீதம் மிக அதிகமாகவும், பெரும்பான்மை தொகையினரின் வருவாய் அதிகரிக்கும் வேகம் மிகக்குறைவாகவும்  இருக்கிறது. இதிலும் பல துறையிலுள்ள மக்களின் வருவாய் தேக்கநிலையை அடைந்துள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி நிகழும்போது ஒரு சிறு பகுதியினர் பெரும்பலனைத் தன் வசமாக்கிக்கொள்கின்றனர். நம்நாட்டில் இந்நிலை தொடர்வதைப் புரிந்துகொண்டு அதைச் சீர்செய்ய வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களுக்கான தார்மிகக் கடமையாகும்.

பொருளாதார வளர்ச்சி: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

வேளாண்துறைக்கு உரிய பங்கு

நாட்டின் உற்பத்தியில் வேளாண்துறையின் பங்கு குறைந்து வருகிறது. இது பொருளாதார வளர்ச்சி யில் தவிர்க்க முடியாத போக்கே. வேளாண்மையின் பங்கு குறையும்வேளையில் வேளாண்மையை வாழ்வா தாரமாகக் கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைவதுதான் நியதி. ஆனால் நம்நாட்டில் நடப்பது நேரெதிராக உள்ளது. வேளாண்மைத்துறையின்  பங்கு குறையும் வேகத்தில் அதை நம்பியிருப்போரின் பங்கு குறையவில்லை. ஏனெனில், வளரும் பிற துறையில் வேளாண்துறையிலுள்ள அதிகப்படியான மக்கள் தொகையை ஈர்த்து வேலைவாய்ப்பை வழங்கவில்லை. இதனால் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்போரின் எண்ணிக்கை இன்னும் உயர்ந்தே காணப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, வேளாண்துறையினர் பெரும் நசிவையும் சந்தித்து வருகிறார்கள். இத்துறையில் அரசின் முதலீடுகள் போதுமானதாக இல்லை. வேளாண்துறைக்கு மிகவும் அவசியமான இயற்கை வளங்கள் குன்றிவருகின்றன. இடுபொருள் மானியங்கள் குறைக்கப்படுகின்றன. விளைந்த பொருள்களுக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து இழப்பைச் சந்திக்கின்றார்கள். அவர்களது கடன் சுமை அவர்களை அழுத்துகிறது. அவர்களது கடனை ரத்து செய்வது உடனடித் தீர்வாகவும் கட்டுப்படியான விலை நீண்டகாலத் தீர்வாகவும் அமையும்.

வேறு துறைகளில் ஏற்படும் வளர்ச்சியினால் அவர்கள் வேளாண்துறையிலிருந்து வெளியேறும் சூழல் உருவாகும் வரை பெரும்பான்மையினருக்கு வாழ்வளித்து வரும் வேளாண்துறையின் மீது கவனம் செலுத்துவது அவர்களது அவலத்தைக் குறைக்கும்.

வேளாண்மையைச் சார்ந்திருக்கும் நிலமற்ற தொழிலாளர் களின் கூலி மட்டம் தேங்கியுள்ளது. மகாத்மா காந்தி வேலை உறுதித்திட்டம் செயல்படுத்தப்பட்ட வேளையில் அவர்களது உண்மை கூலி மட்டம் உயர்ந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் அந்தத்திட்டத்திற்குச் செலவிடப்பட்ட தொகை தேங்கிப் போனதாலும், வேளாண்துறை நலிவுற்றதாலும் கூலி மட்டம் தேங்கியுள்ளது. வேளாண்துறையின் மீது புதிய மத்திய அரசு கவனம் செலுத்தினால் மட்டும் அம்மக்களின் வாழ்வு மீளும்.

கட்டுமானத் துறையை ஊக்குவித்தல்

வேளாண்துறைக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பை வழங்குவது கட்டுமானத்துறை. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற கொள்கை முடிவுகள் இத்துறையை முடக்கிவிட்டன.  பல்லாயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். சிறு கட்டுமான நிறுவனங்கள் பெரும் இழப்புக்கு உள்ளாயின. இத்துறையினர் சந்திக்கும் சிக்கல்களைக் களைந்து இத்துறையைப் புதுப்பித்தால் வேலையின்மைப் பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கமுடியும். குறிப்பாக ஊரகப் பகுதியிலிருந்து அங்கு தேங்கி நிற்கும் தொழிலாளர்களை ஈர்ப்பதற்கு இது உதவும் அவர்களது வேலை வாய்ப்பும் வருமானமும் உயரும். முடங்கிய இத்துறையை உயிர்ப்பிப்பது அவசரத் தேவையாகும்.

சிறு, குறு தொழில்களைப் புதுப்பித்தல்

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற முடிவுகளால் பெரும் அல்லலுக்கும் சீரழிவிற்கும் உள்ளானது சிறுகுறுந்தொழில்துறை. தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 50,000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. பெரும் தொழில் நிறுவனங்கள் வேலை வழங்கும் திறனைவிட, சிறு, குறு தொழில்கள் அதிக வேலை வழங்கும் திறம் படைத்தவை. சிறிய முதலீட்டிலேயே பலருக்கும் வேலை வழங்கமுடியும். நாட்டில் நிலவும் வரலாறு காணாத வேலையில்லாப் பிரச்னையைத் தீர்க்க இந்தத் துறையைப் புதுப்பித்தல் பெருமளவில் உதவும். இதற்குத் தேவையான முன்னெடுப்புகளில் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்தத் துறை சந்திக்கும் நிதிச் சிக்கல்கள், வரிச்சுமை ஆகியவற்றை அக்கறையோடு அணுகி அதற்குரிய தீர்வுகளை விரைந்து காண வேண்டும். தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும். ஊரக மக்களை ஈர்க்கவும் உடனடி பலன்களைக் காணவும் இம்மீட்டெடுப்பு மிகவும் உதவும்.

வரி விதிப்பு முறைகளில் மாற்றம்

அரசின் வரிக்கொள்கைகள்  பொருளாதாரம் எப்படி வளர்கிறது, அதன் பலன்கள் யாருக்குச் சென்றடைகின்றன என்பவற்றைத் தீர்மானிக்க வல்லவை. தற்போதுள்ள வரிவிதிப்பு முறை மறைமுக வரிகளையே பெரிதும் சார்ந்துள்ளது. இதற்கான காரணம் நமது அரசியலமைப்பு, மாநிலங்களின் வரி உரிமைகள் அனைத்தும் மறைமுக வரிகளாக உள்ளன. ஒன்றிய அரசு நேரடி வரியை வசூலிக்கிறது. மறைமுக வரியையும்  வசூலிக்கின்றது. மொத்த வரி வருவாயில் நேரடி வரியின் பங்கு அதிகரித்தும் மறைமுக வரியின் பங்கு குறைந்தால் மட்டுமே ஒரு நியாயமான வரி விதிப்பு முறை பிறக்கும்.

நாட்டில் நிலவும் மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதற்கு  இம்முறையே வழிவகுக்கும். ஆனால், தற்போதைய நடைமுறையில் சாமானியன் சுமக்கும் வரிச்சுமை கூடுதலாகவும், பெரும் பணம்படைத் தவர்கள் சுமக்கும் வரிச்சுமை குறைவாகவும் இருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிவேகமாக அதிகரிக்கும்.  பொருளாதார சமத்துவத்தை நோக்கிய ஒரு சிறு அடிகூட எடுத்து வைக்காத சூழல் தொடர்ந்தால், பொருளாதார வளர்ச்சியையே பாதிக்கும் என்பதை உணர்தல் வேண்டும். அரசியல் சமத்துவம் அனைவருக்கும் வாக்குரிமை வழங்குகிறது. அந்த வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைப்போர் பொருளாதார சமத்துவப் பயணத்தைத் தொடங்கவே மறுப்பதுதான் இது வரையிலான வரலாறு. அதை மாற்ற வேண்டியது புதிய அரசின் கடமை. ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே புலப்படுகின்றன.

பொருளாதார வளர்ச்சி: புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

சமூக நலத்திட்டங்களை வளப்படுத்துதல்

நமது நாடு ஏற்றத்தாழ்வு மிக்க நாடு என்பதால் மக்களின் ஒரு பெரும் பகுதியினர் தேவையான  அளவிற்கு ஊட்டச்சத்தின்றி வாழ்கின்றனர். இதைப் பல குறியீடுகளும் சுட்டுகின்றன. இதன் தாக்கம் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரையும் பாதிக்கும். அவர்களது உடல் வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் குன்றும். இதைத் தீர்க்க உருவாக்கப் பட்ட திட்டமே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை வெகுவாகக் குறைத்துவிட்டது மத்திய அரசு.  இதேபோன்று கல்வி, மருத்துவம் போன்ற துறைகளின் ஒதுக்கீடுகளும் குறைந்து போனது. இதுபோன்று பல மக்கள் நலத் திட்டங்களையும் கூட்டலாம். இத்தகைய நிதிக் குறைப்புகள் மக்கள் நலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களைச் சீர்குலைக்கும் இதை உணர்ந்து, புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு இந்தத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். சீர்குலைந்த திட்டங்கள் சீர் செய்யப்பட வேண்டும்.

அமைப்புகளிலிருந்து  குறுக்கீடுகளை விலக்குதல்

அரசின் தலையீடு பல துறைகளிலும் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இந்த அமைப்புகளின் சுதந்திரச் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கியின் செய ல்பாடுகளில் தொடங்கி பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் வரை இத்தகைய தலையீடுகள் விரவிக் கிடக்கின்றன. பல்கலைக்கழகங்களில் என்ன பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும் என்பதைத் தன்னாட்சி அமைப்புகளின் முடிவுகளுக்கு விடாமல் தங்கள் கொள்கைகளை அந்த அமைப்புகள்மீது திணிப்பது தொடங்கி யுள்ளது. அறிவியல் சார்ந்த ஒரு புரிதலிலிருந்து விலகி நம்பிக்கை சார்ந்த ஒரு கல்வி அமைப்பு அடுத்த தலைமுறையை எங்கு இட்டுச் செல்லும்?

இதுமட்டுமன்றி, நமது பொருளாதாரம் எப்படி இயங்குகிறது என்பதை அறிந்துகொள்ள புள்ளி விவரங்கள் மிகவும் தேவை. இத்தகைய தரவுகளைச் சேகரித்துத் தொகுக்க உலகத்தரம் வாய்ந்த அமைப்புகள் நம்  நாட்டில் 70 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளின் செயல்பாட்டில் தலையிட்டு அவற்றின் புள்ளி விவரங்களை மாற்றியமைக்கும் அபாய விளையாட்டு நடந்தேறியுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு இந்த நிறுவனங்களின் செயல்பாட்டில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவற்றின் சுதந்திரச் செயல்பாட்டை உறுதிசெய்ய வேண்டும். நாட்டின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு இது மிகவும் தேவை.

சமத்துவத்தை வளர்த்தெடுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று  அச்சமற்ற அரசியல் சூழல். வெறுப்பு அரசியலால் இது சாத்தியப்படாது. குடிமகன்கள் அனைவரும் சமமாக நடத்தப் படுவதற்குச் சகோதரத்துவம் பேணி வளர்க்கப்பட வேண்டும். இத்தகைய அரசியல் சூழல் விரைந்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.  புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு இதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். நாம் நம்மைக் குடியரசாக அறிவித்துக்கொண்டபோது நமது லட்சியமாகக் கொண்ட மூன்றில் சகோதரத்துவமும் ஒன்று. அவை பேணி வளர்க்கப்படவில்லை என்றால் மற்ற இரண்டு லட்சியங்களான சமத்துவமும் தன்னாட்சியும்  எட்டாக் கனிகளாகிவிடும் என்று நம்மை எச்சரித்துச் சென்றிருக்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர் என்பதைப் புதிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இதைக் காப்பது நமது மக்களாட்சியின் மாண்பைக் காப்பதாகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களாட்சி நடைபெறும் இந்த அமைப்பில் புதிதாக உருவாகும் அரசு மேற்கூறிய திட்டங்களைச் செயல்படுத்தினால் அவை மக்களுக்கான அரசாக மலரும். இல்லையென்றால், பெரு நிறுவனங்களின் அரசாகவே புதிய அரசு தொடரும்.