சமூகம்
Published:Updated:

குற்றவாளிகள் ஜாக்கிரதை! - உற்றுநோக்கும் மூன்றாவது கண்!

குற்றவாளிகள் ஜாக்கிரதை! - உற்றுநோக்கும் மூன்றாவது கண்!
பிரீமியம் ஸ்டோரி
News
குற்றவாளிகள் ஜாக்கிரதை! - உற்றுநோக்கும் மூன்றாவது கண்!

குற்றவாளிகள் ஜாக்கிரதை! - உற்றுநோக்கும் மூன்றாவது கண்!

சென்னை நகருக்குள் யார் புதிதாக நுழைந்தாலும், 30 மீட்டருக்கு ஒரு சி.சி.டி.வி கேமரா இருப்பதைக் காண முடியும். நகரம் முழுவதும் இரண்டரை லட்சம் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி நகரத்தின் மொத்த இயக்கத்தையும் தங்களது கண்காணிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது சென்னை காவல் துறை. இதனால் நடப்பு ஆண்டில் சங்கிலி பறிப்புகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் கணிசமான அளவு கட்டுப் படுத்தப்பட்டிருப்பதுடன் புலனாய்வு பணிகளும் எளிதாகியிருக்கின்றன. குறுகிய காலத்தில், தனியார் நிறுவனங்களையும் பொதுமக்களையும் ஒருங்கிணைத்து இதைச் செய்துமுடித்துள்ளது காவல்துறை. 

குற்றவாளிகள் ஜாக்கிரதை! - உற்றுநோக்கும் மூன்றாவது கண்!

ஒரு குற்றம் நிகழ்ந்தால், சம்பவ இடத்துக்கு வந்துசென்றவர்களின் அடையாளம்கூட முழுவதுமாகத் தெரியாமலேயே ஒரு காலத்தில் போலீஸ் விசாரணைகள் நடைபெற்றன. பல நாள்கள் தேடலுக்குப் பிறகு குற்றவாளியைக் கண்டுபிடித்தாலும் அவர்தான் குற்றம் இழைத்தார் என்பதை உறுதிப்படுத்தச் சாட்சிகளைத் தயார்செய்ய வேண்டியிருக்கும். இந்தப் பணிகளை எல்லாம் தற்போது ஒரே ஒரு கேமரா செய்து முடித்து விடுகிறது. காவல்துறையினரிடமிருந்துகூட குற்றவாளிகள் தப்பிவிடலாம்; ஆனால், இந்த கேமராக்களிடமிருந்து தப்ப முடியாது. இது காவல் துறையினருக்கும் பொருந்தும். சென்னையில் மெரினா புரட்சி கலவரத்தின்போது காவலர்கள் சிலர் செய்த அட்டூழியங்களையும்... சில மாதங்களுக்கு முன்பு காவல் துறையினர் சிலர் சாலையில் தள்ளுவண்டிக் கடையைப் போட்டு உடைக்கும் காட்சிகளையும் அம்பலப்படுத்தின சி.சி.டி.வி பதிவுகள். 

குற்றவாளிகள் ஜாக்கிரதை! - உற்றுநோக்கும் மூன்றாவது கண்!

“2018 ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற குற்றச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், 2019 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை சி.சி.டி.வி கேமராக் களால் வெகுவாகக் குறைந்துள்ளன. செயின் பறிப்பு சம்பவங்கள் 48 சதவிகிதமும் கன்னக் கொள்ளைகள் 24 சதவிகிதமும் பொது இடங் களில் தகராறு செய்வது 11 சதவிகிதமும் கொடுங் காயம் ஏற்படுத்துதல் 42 சதவிகிதமும் குறைந்துள் ளன” என்கிறார் சென்னை மாநகர நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு.

அரை மணி நேரத்தில் பிடிபட்ட கொலையாளி!


புலனாய்வுப் பணிகளும் எளிதாகியிருப்பதற்கு சில உதாரணங்களைச் சொல்கிறார்கள். கடந்த மார்ச் 3-ம் தேதி பள்ளிக்கரணை - மேடவாக்கம் பிரதான சாலையில், முதியவர் ஒருவர் வாகனம் மோதி விபத்தில் பலியானதாகக் காவல்துறை யினருக்குத் தகவல் கிடைத்தது. இறந்தவரின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்தால், வாகனம் மோதியதால் ஏற்பட்டது போல இல்லை. அருகிலிருந்த சி.சி.டி.வி பதிவுகளைப் பார்த்தபோது குடிபோதையில் ஒருவன், முதியவரின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டுக் கொலைசெய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அடுத்த அரைமணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்தது காவல் துறை.

மே 7-ம் தேதி, சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீப்ரியா என்பவர், பையில் வைத்திருந்த 19 பவுன் நகையை அண்ணா சாலையில் தவற விட்டுவிட்டார். அவர் பரிதவித்த நேரத்தில், போக்குவரத்துக் காவலர்கள் சி.சி.டி.வி பதிவு களைப் பரிசோதிக்க... ஒரு மினி லாரி டிரைவர் அந்த நகைப் பையை எடுப்பது பதிவாகியிருந்தது. சில மணி நேரத்தில், அந்த டிரைவர் கைது செய்யப்பட்டு, நகை மீட்கப்பட்டது. இவை உதாரணங்கள்தான். நாள்தோறும் நூற்றுக்கணக் கான புகார்கள், சி.சி.டி.வி கேமராக்களின் உதவி யால் எளிமையாக முடித்து வைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள் காவல் துறையினர். 

குற்றவாளிகள் ஜாக்கிரதை! - உற்றுநோக்கும் மூன்றாவது கண்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை, சென்னை முழுவதும் செயின் பறிப்பு சம்பவங்கள் சகட்டுமேனிக்கு நடைபெற்றன. பெண்களை தரதரவென பைக்கில் இழுத்துச் சென்றெல்லாம் சங்கிலி அறுத்தார்கள். வயதானவர்கள் என்றும் பார்க்காமல் காதை அறுத்து நகைகளைப் பறித்துச் சென்று ரத்தக்களறியாக்கினார்கள். சி.சி.டி.வி கேமராக்கள் முழுமையாகப் பொருத்திய பிறகு இப்போது நிலைமை பலமடங்கு சீராகிவிட்டது என்கிறது சென்னைக் காவல் துறை.

மேற்கண்ட பணிகளில் முக்கியப் பங்காற்றியவர், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன். அவரிடம் பேசினோம். “தங்கம் விலை ஏறிய பிறகு, நகர் எங்கும் சங்கிலிப் பறிப்புக் குற்றங்கள் பெருகிவிட்டன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி, டெல்லியிலிருந்து விமானத்தில் வந்து கொள்ளை அடித்துச் செல்வது வரை பல சம்பவங்கள் அரங்கேறின. குற்றவாளி களைக் கண்டுபிடிப்பதும் குற்றங்களைத் தடுப்பதும் பெரும் சவாலாக இருந்தது. அதைத் தொடர்ந்தே நகரம் முழுவதும் 100 சதவிகிதம் சி.சி.டி.வி கண்காணிப்பை விரிவுப்படுத்தத் தொடங்கினோம். தமிழக முதல்வரும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார். பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பலரும் ‘ஸ்பான்ஸர்’ செய்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் ஆர்வமும் பங்களிப்பும் அளப்பரியது. தாங்களாகவே முன்வந்து தங்கள் இல்லங்களின் முகப்பிலும் தெருக்களிலும் கேமராக்களைப் பொருத்தினர்” என்றவரிடம், “இதனால், தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக ஒரு சர்ச்சை எழுகிறதே?” என்று கேட்டோம்.

“தனி மனித சுதந்திரம் மிகவும் முக்கியம். அதைவிட முக்கியம் தனி மனிதப் பாதுகாப்பு. எனினும், தனி மனித சுதந்திரம் பாதிக்காத வகை யில் கண்ணியமான வழிமுறைகளில்தான் பதிவுகள் ஆராயப்படுகின்றன. தவிர, சாலையில் உள்ள கேமராக்கள் பொது வழிப்பாதையைத்தான் கண்காணிக்கின்றன. மக்கள் தங்கள் வீடுகளில் வைத்துள்ள கேமராக்கள், அவர்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கானது. போலீஸ் விசாரணைக்குத் தேவைப்படும் காட்சிகளை மட்டுமே அவர்களின் அனுமதியுடன் பெறுகிறோம். எந்த இடத்திலும் தனிப்பட்ட சுதந்திரம் மீறப்பட வில்லை.

எல்லோருடைய வீட்டிலும், வணிக நிறுவனங் களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் வைக்க விழிப்பு உணர்வு ஏற்படுத்திவருகிறோம். தமிழக அரசும் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தேர்தல் முடிந்தவுடன், மேலும் சில பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்களைப் பொருத்தும் பணிகள் தொடங்கும். விரைவில் முக அடையாளங்களைக் கண்டுபிடிக்கும், ‘face recognition’ வகை கேமராக்களை நிறுவத் திட்டமிட்டிருக்கிறோம். ஒரு குற்றவாளி சென்னை நகருக்குள் நுழையும் போதே, அவரது முக அடையாளங்களை வைத்து எங்கேனும் ஒரு கேமரா அவரைக் காட்டிக்கொடுத்துவிடும்” என்றார்.

சி.சி.டி.வி கேமராக்களின் செயல்பாட்டை கண்காணிக்க, ஒவ்வொரு காவல் நிலையத்திலும், தனியாக ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அன்றாடம் கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் சோதனையிடுகிறார்கள். சென்னை மட்டுமன்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டக் காவல் துறையும் சி.சி.டி.வி கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி யுள்ளதால், புறநகரின் பிரதான சாலைகள் அனைத்திலும் சிவப்பு கண்கள் மின்ன கண்காணிக்கின்றன கேமராக்கள். குற்றவாளிகள் ஜாக்கிரதை!

- ந.பொன்குமரகுருபரன்- படங்கள்: வீ.நாகமணி

குற்றவாளிகள் ஜாக்கிரதை! - உற்றுநோக்கும் மூன்றாவது கண்!

“இனி போலீஸை ஏமாற்ற முடியாது!”

கரின் 100 முக்கிய சந்திப்புகளில், வாகனங்களின் நெம்பர் பிளேட்டைக் கண்காணிக்கும் தானியங்கி சிறப்பு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் பகலவன், “தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் மூவர் செல்வது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது எல்லாம் இனி நடக்காது. தானியங்கி சிறப்பு சி.சி.டி.வி கேமராக்கள் சில நொடிகளில் அந்த வாகனங்களின் நெம்பர் பிளேட்டை கண்காணித்து, எங்களுக்குத் தகவல் அனுப் பும். அதன்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட் டீஸ் வழங்கப்படும். பல்வேறு வெளிநாடுகளில் அமலில் இருக்கும் இந்தத் திட்டத்தை, மாதவரம், செங்குன்றம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பூக்கடை ஆகிய பகுதிகளில் சோதனை முயற்சியாக மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

குற்றவாளிகள் ஜாக்கிரதை! - உற்றுநோக்கும் மூன்றாவது கண்!

“பில் இல்லாமல் மொபைல் போன் வாங்காதீங்க!”

மொ
பைல் பறிப்பு குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை மீட்டு, திருத்தி அனுப்புவதிலும் சென்னைக் காவல்துறை முக்கியப் பங்காற்றுகிறது. முதல்முறையாகக் குற்றம் இழைக்கும் குற்றவாளிகளுக்கு நீதியரசர் பி.என்.பிரகாஷின் வழிகாட்டுதலின்பேரில், சைதாப் பேட்டை சிறையை ஒதுக்கியுள் ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.நகர் துணை ஆணையர் அசோக் குமார், “பில் இல்லாத மொபைல் போன்களை மக்கள் வாங்குவதுதான் மொபைல் திருட்டுச் சந்தைக்கு வழி வகுக் கிறது. மொபைல் போன்களை பில் இல்லாமல் வாங்க மறுத்தாலே போதும், மொபைல் பறிப்புச் சம்பவங்கள் குறைந்துவிடும். கடந்த சில மாதங்களில், தி.நகர் சரகத்தில் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 28 சிறார் கள், இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குப் புனர்வாழ்வு அளித்துள்ளோம். இவர்களில் 12 பேர் தற்போது பள்ளிகளில் படிக்கின்றனர். ஐ.டி.ஐ முடித்திருந்த சிலருக்கு, தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளோம். அவர்கள் ஒழுங்காக இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க, ஐந்து பேருக்கு ஒரு உதவி ஆய்வாளரையும் நியமித்துள்ளோம். ஒரு குற்றச் சமூகம் உருவாவதைத் தடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது” என்றார்.