`இந்தியாவின் விமானப்படை உறுதியாக இருக்கின்றது. தேவைப்படும்போது, இந்திய விமானப்படை உபயோகப்படுத்தப்படும்’ என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானப்படை வீரர்கள் மத்தியில் பேசினார்.

இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணிபுரியும் அணிகளுக்கு குடியரசு தலைவரால் வழங்கப்படும் உயரிய விருது என்று போற்றப்படும் நிஷாந்த் எனப்படும் பிரசிடன்ட்ஸ் கலர்ஸ் அவார்டு வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சூலூர் விமானப்படைத்தளத்தில் உள்ள 5 பேஸ் ரிப்பேர் டிப்போ மற்றும் தெலங்கானா மாநிலம் ஹக்கிம்பேட் ஏர் ஃபோர்ஸ் விமானப் படைத்தளம் ஆகிய இரு படை அணிகளுக்கு இன்று அந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமை விமானப்படை அதிகாரி பி.சி.தானுவா, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். எம்.ஐ17, டோர்னியர், சாரங்க், தேஜஸ், ஏ.என் 32, அவுரவ் ஆகிய விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் பாராகிளைடிங் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கிய பின்பு வீரர்கள் மத்தியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ``இந்த இரு அணிகளுக்கும் விருதுகள் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். விமானப்படையில் இரு அணிகளும் சிறப்பான சேவை புரிந்துள்ளன. கடந்த 1975 போரில் ஹக்கிம்பேட் படைப்பிரிவு சிறப்பாகச் செயல்பட்டது. ஹக்கிம் விமானப்படைத் தளத்தில் 1975 முதல் ஹெலிகாப்டரில் பெண் பைலட்டுகளுக்கும் 2016 போர் விமானங்களிலும் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா அமைதியை விரும்பினாலும் தேவைப்படும் சமயத்தில் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது. இந்திய விமானப்படை உறுதியாக இருக்கிறது. தேவைப்படும்போது இந்திய விமானப்படை உபயோகப்படுத்தப்படும். சூழ்நிலை வரும்போது அதற்கு தகுந்தபடி இந்திய விமானப் படை செயல்படும். விமானப்படையில் இரு அணிகளும் சிறப்பான சேவை புரிந்து இருக்கிறது. சமீபத்தில் எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் நமது விமானப் படை வீரமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டது. பேரிடர் சமயங்களில் விமானப்படையின் பணி மகத்தானது. இந்திய விமானப்படை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது" என்றார்