Published:Updated:

தனியார்மயமாகும் ரயில்வே

தனியார்மயமாகும் ரயில்வே
பிரீமியம் ஸ்டோரி
தனியார்மயமாகும் ரயில்வே

கட்டணங்கள் கடுமையாக உயரும்... ரயில் பயணங்கள் கனவாக மாறும்!ஓவியம்: அரஸ்

Published:Updated:

தனியார்மயமாகும் ரயில்வே

கட்டணங்கள் கடுமையாக உயரும்... ரயில் பயணங்கள் கனவாக மாறும்!ஓவியம்: அரஸ்

தனியார்மயமாகும் ரயில்வே
பிரீமியம் ஸ்டோரி
தனியார்மயமாகும் ரயில்வே

மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் தனியாரை அனுமதிப்பதற்குக் கதவுகளைத் திறந்துவிடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இரவும் பகலும் கோடிக் கணக்கான மக்கள் பயணம் செய்துவரும் ரயில்வே துறையை வசப்படுத்திக்கொள்ள அதானியும், அம்பானியும் ஆர்வத்துடன் களமிறங்குகிறார்கள்!

ரயில்வேயைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை, முந்தைய பி.ஜே.பி ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. ஆனாலும், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, அதில் பெரிய அளவுக்கு அப்போது வேகம் காட்டப்படவில்லை. “பொதுப்போக்குவரத்தைப் பெரிதும் சார்ந்துள்ள சாமானிய மக்களைப் புறக்கணிக்க முடியாது. ஆகவே, ரயில்வே துறையில் தனியார்மயம் இருக்காது” என்று ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு கூறினார். இவருக்குப் பிறகு ரயில்வே அமைச்சராக வந்த பியூஷ் கோயல், “ரயில்வேயைத் தனியார்மயம் ஆக்குவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. எதிர்காலத்திலும் ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படாது” என்றார். ஆனாலும், இரண்டாவது தடவையாக மத்தியில் மோடி அரசு அமைந்துள்ள சூழலில், ரயில்வேயில் தனியார்மய நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

தனியார்மயமாகும் ரயில்வே

இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரி களிடம் பேசியபோது, “ரயில்வே துறை யில் தனியாரை அனுமதிக்க வேண்டும்; தனியாருக்கு ரயில் சேவை களில் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது முன்பே பி.ஜே.பி அரசு எடுத்த முடிவு. தற்போது முதற்கட்டமாக, நெரிசல் இல்லா வழித்தடங்களிலும் சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ள வழித்தடங்களிலும் ரயில்கள் தனியார்வசம் அனுமதிக்கப்பட உள்ளன. பிறகு, தங்க நாற்கரப் பாதை எனப்படும் சென்னை - மும்பை, மும்பை - டெல்லி, டெல்லி - ஹவுரா, ஹவுரா - சென்னை ஆகிய வழித்தடங்களிலும் தனியார் ரயில்கள் அனுமதிக்கப்படும். ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட பிரீமியம் கட்டண ரயில்களைத் தனியார் இயக்குவதற்கு விரைவில் ஒப்புந்தப் புள்ளிகள் கோரப்படும். இது, ‘100 நாள் செயல்திட்டம்’ என்ற அடிப்படையில் செயல்படுத்தப் படும்” என்றனர்.

ரயில்வேயில் தனியார் அனுமதிக் கப்படுவது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர் ஷியாம் சேகரிடம் கேட்டோம். “ரயில்வேயில் கண்டிப்பாகத் தனியாரை அனுமதிக்க வேண்டும். ரயில்வேயின் திறன்களை அதிகரித்தால்தான், நாளைய தேவைகளுக்கான முதலீடு களைச் செய்ய முடியும். விமானத் துறையைக் காட்டிலும், அதிகமான வாய்ப்புகள் இருப்பது ரயில்வே துறையில்தான். இன்றைக்குச் சராசரியாக ரயில்கள் 120 கி.மீ வேகத்தில்தான் செல்கின்றன. இதை, 160 கி.மீ-லிருந்து 180 கி.மீ ஆக அதிகரிப்பது இந்தியாவில் அடுத்தகட்ட வறுமை ஒழிப்புக்கு முக்கியமானது. 160 கி.மீ வேகம் என்று அதிகரித்துவிட்டால், திருச்சி யிலிருந்து சென்னைக்கு விவசாயப் பொருள்களை மிகக் குறைந்த நேரத்தில் கொண்டுவர முடியும். அதனால், பொருளாதாரம் வளரும்.

ரயில்வேயின் திறனை உயர்த்துவதற்குத் தேவையான முதலீடுகள் செய்வதற்கு அரசுக்குப் பணபலம் இல்லை. ஆனால், ரயில்வேயிடம் நிறைய அசையா சொத்துகள் உள்ளன. அவற்றைத் தனியாருக்கு வாடகைக்குவிடலாம். அதில் கிடைக்கும் பணத்தை முதலீடு செய்தால், நிறையப் பொருளாதார மாற்றங்களை ரயில்வே மூலமாக நாட்டுக்குக் கொடுக்க முடியும்” என்றவரிடம், “ரயில் கட்டணங்கள் உயர்ந்தால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார் களே?” என்று கேட்டோம். “போட்டி சார்ந்த பொருளாதாரம் என்றைக்கும் யாரையும் ஓர் அளவுக்கு மேல் சம்பாதிக்கவிடாது. விமானத் துறையில் தனியாரை அனுமதித்தக் காரணத்தால், இன்றைக்குச் சாமானியர்கள்கூட விமானத்தில் பயணம் செய்யும் நிலை வந்துள்ளது. அதுபோல ரயில்வேயையும் மாற்றினால், விமானமும், பேருந்தும் போட்டிக்கு வரும். இதனால், மக்களுக்கு நல்லவை நடக்கும்” என்றார்.

ரயில்வே தொழிற்சங்கமான டி.ஆர்.இ.யூ-வின் துணைத் தலைவர் ஆர்.இளங்கோவனிடம் பேசினோம். “நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் அதிக அளவில் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். இது, பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் இருக்கிறது. அடிப்படையில் இது ஒரு சேவைத் துறை. ஆனால், ரயில்களை இயக்குவதற்கு ஆர்வம் காட்டும் தனியார் நிறுவனங்களுக்கு மக்களின் சேவையைப் பற்றிய கவலை இருக்காது. ரயில்வே துறையின் ஆதாரங்களைச் சுரண்டுவதும் அதிகபட்சமாக லாபம் சம்பாதிப்பதும் மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்கும். ரயில் பாதைகளை அமைப்பது போன்ற அதிக முதலீடுகள் தேவைப்படும் திட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு ஆர்வம் கிடையாது. ஏற்கெனவே அரசு உருவாக்கிவைத்துள்ள உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் பெரும் லாபம் சம்பாதிப்பதில் மட்டுமே அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

தனியார்மயமாகும் ரயில்வே

தனியார் ரயில்கள் வந்துவிட்டால், ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணங் களைவிட அதிகமாக உயர்த்திவிடுவார்கள். சரக்குக் கட்டணங்களும் உயர்ந்துவிடும் சமையல் எரிவாயு மானியத்தை ‘விட்டுக்கொடுக்க’ மத்திய அரசு உஜ்வாலா பிரசாரத்தை நடத்தியது. அதைப் போல, ரயில் கட்டணத்தில் வழங்கப்படும் மானியத்தை ‘விட்டுக்கொடுப்பது’ தொடர்பாக பயணிகளிடம் கருத்துக் கேட்கப் போவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மானியம் ரத்து செய்யப்பட்டால், சுமார் 50 சதவிகிதம் வரை கட்டணங்கள் உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால், ரயில் பயணம் என்பதே நடுத்தர, ஏழை எளிய மக்களுக்குக் கனவாக மாறிவிடும்” என்றார் இளங்கோவன்.

பி.ஜே.பி-யின் சகோதர அமைப்பான பாரதிய மஸ்தூர் யூனியனும்கூட ரயில்வேயில் தனியாரை அனுமதிக்கக்கூடாது என்று தீவிரமாகக் குரல் கொடுத்தது. முன்பு,  நாடாளுமன்றத்தை நோக்கி மிகப் பெரிய பேரணியை அந்த அமைப்பு நடத்தியது. ஆனால், பெரும் பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு, எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தன் பாதையில் நடைபோட ஆரம்பித்துள்ளது!

- ஆ.பழனியப்பன்

மூடப்படும் ரயில்வே அச்சகங்கள்!

யில் டிக்கெட், ரயில்வே கால அட்டவணை போன்றவற்றை அச்சிடவும், ரயில்வே துறைக்குத் தேவையான எழுதுபொருள்களைத் தயாரித்துக் கொடுக்கவும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ரயில்வே அச்சகங்கள் செயல்பட்டுவந்தன. அவற்றில் பல மூடப்பட்டுவிட்டன. சில அச்சகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சென்னை ராயபுரத்தில் உள்ள அச்சகம் உள்ளிட்ட சில அச்சகங்கள் மூடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணச்சீட்டு வழங்கும் பணியும் தனியாரிடம் போகிறது.

தனியார் ரயில் நிலையங்கள்!

செ
ன்னை ‘எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்’ உட்பட பல ரயில் நிலையங்களை ‘நவீனமயமாக்கல்’ என்கிற பெயரில், தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் கடந்த ஐந்தாண்டு கால பி.ஜே.பி ஆட்சியில் நடை பெற்றன. அந்த முயற்சி இப்போது வேகமெடுத்துள்ளது. மேலும், ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலங்களைக் குத்தகை அடிப்படையில் தனியாருக்குக் கொடுப்பதற்கான திட்டமும் உள்ளது. அந்த இடங்களில் மால்கள், திரை அரங்குகள், உணவகங்கள், பல்நோக்கு மருத்துவமனைகள் போன்றவற்றைத் தனியார் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.

தனியார் பி.ஆர்.ஓ-க்கள்!

யில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே மண்டல தலைமையிடங்களில் தலைமைத் தகவல் தொடர்பு அதிகாரிகள், மூத்தத் தகவல் தொடர்பு அதிகாரிகள் மற்றும் தகவல் தொடர்பு ஆய்வாளர்கள் எனப் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் பணியாற்றிவருகின்றனர். இந்தப் பணிகளிலும் ‘அரசு - தனியார்’ என்கிற கூட்டு அடிப்படையில் சில மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறார்கள்.

‘‘ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைக் கையாளுவதில், ரயில்வே அதிகாரிகளுக்கு போதியப் பயிற்சி இல்லை. எனவே, தனியார் நிறுவனத்தினரை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.” என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.