Published:Updated:

``ஐபிஎல் பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க; சீக்கிரம் முடிங்க...’ - கலகலத்த சபாநாயகர் | சட்டசபை ஹைலைட்ஸ்

சபாநாயகர் அப்பாவு

நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறைக்கான மானியக் கோரிக்கை நடந்தது.

Published:Updated:

``ஐபிஎல் பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க; சீக்கிரம் முடிங்க...’ - கலகலத்த சபாநாயகர் | சட்டசபை ஹைலைட்ஸ்

நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறைக்கான மானியக் கோரிக்கை நடந்தது.

சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 11.4.2023 அன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’சட்டசபையில் நேரலை ஒளிபரப்பில் அமைச்சர்கள், முதலமைச்சர் பேசுவதுதான் வருகிறது. எதிர்க்கட்சியினர் பேசுவது வருவதில்லை” என்னும் குற்றச்சாட்டை முன்வைத்தார். `இனி நிச்சயம் ஒளிபரப்பு செய்யப்படும்’ என்றார் சபாநாயகர். ஆனால், `நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டதைக் கடந்து வேறு எதுவும் ஒளிபரப்பு செய்யப்படாது’ என்பதைக் குறிப்பிட்டு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதற்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பும் செய்தனர்.

சட்டமன்றத்தில் கூச்சலிட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள்
சட்டமன்றத்தில் கூச்சலிட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள்

அதேபோல், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரும் நேரத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக பேச முயன்றார் பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி. ஆனால், அந்தக் கோரிக்கையை இன்று (12.4.2023) தான் தந்தீர்கள். எனவே, வரும் நாள்களில் வாய்ப்பு தரப்படும் என அப்பாவு கூறிய பின்பும் அவர்கள் கூச்சலிடத் தொடங்கினர். ’’உங்களுக்கு எதிர்ப்பை பதிவு செய்யணும்னா வெளிநடப்பு செய்யுங்க’’ என்றார் சபாநாயகர். ஆனால், அவையில் சிறிது நேரம் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

நேற்று (12.4.2023) சட்டப்பேரவையில் விருத்தாசலத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்தச் செய்தியைச் செய்தித்தாள், ஊடகங்களில் பார்த்து தெரிந்துகொண்டதாகக் கூறினார். இதற்கு பதிலுரையில் பேசிய முதலமைச்சரோ, தன் விளக்கத்தைக் கூறும்போது `தொலைக்காட்சியில் பார்த்துதான் இதை தெரிந்துகொண்டேன்’ என நான் சொல்ல மாட்டேன் என மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியைச் சாடினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
ட்விட்டர்

மின்துறை மற்றும் மதுவிலக்கு மானியக் கோரிக்கை விவாதத்தின்போது உறுப்பினர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். உறுப்பினர் புகழேந்தி பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டுப் பேசிய அப்பாவு, ”சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஐபிஎல் மேட்ச் பார்க்கணும்னு ஆர்வத்துல இருக்காங்க... சீக்கிரம் முடியுங்க...” எனச் சொல்லியது அவையில் சிரிப்பலையை உண்டாக்கியது.

மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட மின்தடை குறித்துப் பேசினார். அதற்கு அப்பாவு, ”உங்களுடைய ஆட்சியில இதெல்லாம் பண்ணனும்னு குறித்துப் பேசுங்க. தி.மு.க மேல குற்றச்சாட்டை வைக்க வேண்டாம்” எனச் சொன்னார். அதற்கு நத்தம் விஸ்வநாதன், “உண்மையைத்தான சொல்றேன். வேற என்ன பேசணும்னு நீங்க நினைக்கிறீங்க, இல்ல நான் என்ன பேசணும்னு நீங்க சொல்லுங்க” என்றார்.

அதேபோல் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து நத்தம் விஸ்வநாதன் பேசியதுக்கு எதிராக அப்பாவு, ``உங்க அம்மா (ஜெயலலிதா)தான் போராட்டங்காரர்களுக்கு எதிராக வழக்கு போட்டாங்க, அதை எல்லாத்தையும் ரத்து செய்தது தி.மு.க அரசு. அது என்னோட ஊரு என் தொகுதி எனக்குத் தெரியும்” என்றார் காட்டமாக.

 நத்தம் விஸ்வநாதன்
நத்தம் விஸ்வநாதன்

தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் பேசும்போது , “வேறு சப்ஜெக்டுக்கு வாங்க” என அப்பாவு கூறினார். அதற்கு நத்தம் விஸ்வநாதனும், “நான் சப்ஜெக்டோடதான் பேசுறேன். உங்களுக்கு சப்ஜெக்ட் தெரியாதுன்னா என்ன பன்றது?” என்றார்.

அதற்கு அப்பாவு, ’’100 சப்ஜெக்ட்... எந்தத் துறை எடுத்தாலும் அது குறித்து சப்ஜெக்ட்டிவா பேசுறதுக்கு நான் தயாரா இருக்கேன். கேள்வி கேளுங்க” என பதிலடி கொடுத்தார். அதற்கு நத்தம் விஸ்வநாதனும், “அப்போ மற்ற அமைச்சர்களுக்கு பதிலா நீங்களே எல்லாத்துக்கும் பதில் சொல்லலாமே...” என நக்கல் தொனியில் பேசினார்.

அப்போது எழுந்த அமைச்சர் துரைமுருகன், நத்தம் விஸ்வநாதனைக் குறிப்பிட்டு, ``எதிர்க்கட்சி உறுப்பினர் மிக வேகமாகப் பேசுவாரு. அப்படியே நம்பற மாதிரியே பேசுவாரு” எனக் கலாய்த்தார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி கொறடா வேலுமணி, ``அவர் அ.தி.மு.க மூத்த நிர்வாகி, 2 முறை அமைச்சராக இருந்தவர். அவர் இயல்பாகப் பேசினார். அதைக் குற்றம் சொல்லக் கூடாது. பேச அனுமதிக்க வேண்டும்” என்றார்.

அப்பாவு
அப்பாவு

மேலும், டாஸ்மாக் வருவாய் குறைவது ஏன் என்பது தொடர்பாகப் பேசிய நத்தம் விஸ்வநாதன், `அரசுக்கு ஆலோசனைதான் வழங்குகிறேன்’ என்றார். இதற்கு பதிலளித்த துரைமுருகன், “இந்த ஆலோசனையெல்லாம் நீங்க கடைப்பிடிச்சிருந்தா இப்படியான குறையே வந்திருக்காது’ என்றார்.