தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி தொடக்கம் முதலே, தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளைக் கூறிவந்தார். குறிப்பாக, சித்தாந்தரீதியில் பொது வெளியில் அவர் பேசியதும் பரபரப்பானது. இவ்வாறு பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியவர், கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது கொடுக்கப்பட்ட தமிழக அமைச்சரவையின் உரையை வாசிக்காமல், சிலவற்றை நீக்கியும்... சிலவற்றை சேர்த்தும் அவர் ஆற்றிய உரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போதே அவர் ஆற்றிய உரைக்கு எதிராகத் தமிழக அரசு சார்பாக தீர்மானம் கொண்டுவந்து அவரின் உரை சட்டப்பேரவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது நிதி, வேளாண் பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டு ஒவ்வொரு துறைக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் சட்டப்பேரவையில் நடந்துவருகின்றன.

மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய அளுநர்!
சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர், ``அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு மசோதாவை ஆளுநர் ஒப்புதலளிக்காமல் நிறுத்திவைப்பதே, கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத்தான் அர்த்தம். உச்ச நீதிமன்றம் இதைப் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியிருக்கிறது" எனக் கூறி சர்ச்சையை மீண்டும் கிளப்பினார். இதற்கு தமிழக முதலமைச்சர் சார்பாக பதிலும் வழங்கப்பட்டிருந்தது. அதில் அவர், ``தனது கடமைகளிலிருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.

இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத முடக்குவாதச் செயலாகவே அமைந்திருக்கிறது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பிவைத்துவிட்டு, தனது கடமை முடிந்ததாக இருக்கிறார் ஆளுநர். மாநில நலனுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் தமிழ்நாடு ஆளுநருக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
ஆளுநருக்கு எதிராகத் தனித் தீர்மானம்!
இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தனித் தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்தார். ஆளுநருக்கு எதிராகச் சட்டப்பேரவை விதி 92 (7) பதங்களைத் தளர்த்தும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதற்கு நான்கில் மூன்று பங்கு ஆதரவு வேண்டும் என்பதால், வாக்கெடுப்பு `எண்ணி கணிக்கும்' முறைப்படி நடந்தது.
தீர்மானம் கொண்டுவரப்போவதை முன்பே அறிந்த அ.தி.மு.க-வினர், வேண்டுமென்றே எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தைக் கவன ஈர்ப்பு தீர்மானமாகக் கொண்டுவர கோரிக்கை வைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவைத்தலைவரோ, ``நேற்று எதிர்க்கட்சி கொறடாவிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதற்கு ஏதேனும் விஷயங்கள் இருக்கின்றனவா... என்பதைக் கேட்டேன் அவர், `இல்லை’ என்றார். இப்போது திடீரென கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவது ஏன்?” என்னும் கேள்வியை முன்வைத்தார். அதற்கு அவை முன்னவரான துரைமுருகன், “அவர்கள் கவன ஈர்ப்பைக் கொண்டுவரட்டும்” எனக் கூறினார்.

அதன் பிறகு பேசத் தொடங்கிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை யாருக்கு இருக்கிறதோ... அவர்களை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்க வேண்டும். ஆனால், இருக்கை மாற்றப்படாமல் இருக்கிறது" என்றார். அதற்கு பதிலளித்த அவைத் தலைவர், “ஏற்கெனவே, இதற்கு போதுமான விளக்கத்தை அவையில் நான் கூறிவிட்டேன். இன்று அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவர இருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதாகச் சொல்வது ஏற்புடையது அல்ல” எனக் கூறினார்.

இதை ஏற்க மறுத்த அ.தி.மு.க உறுப்பினர்கள், அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி, ”தி.மு.க தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவையில் நடைபெறுவது முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படும் எனக் கூறினர். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யார் பேசுவதும் ஒளிபரப்பாகாமல், அமைச்சர்களும், முதலமைச்சர் பேசும் பதிலுரைகள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன. சட்டப்பேரவை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதில்லை” எனக் கூறி தன் கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
அதைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அரசினர் தீர்மானத்தின் `எண்ணி கணிக்கும்' வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரவு வேண்டுமெனும் நிலையில், அதற்கு மேலாக 144 பேரின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. இந்த வாக்கெடுப்பு நடக்கும்போது அவையின் கதவுகள் மூடப்பட்டன. இதனால் பா.ஜ.க உறுப்பினர்களால் வெளியே செல்ல முடியவில்லை. உள்ளேயே இருந்த பா.ஜ.க உறுப்பினர்களான எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி ஆகிய இருவர் மட்டும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தீர்மானத்தின்மீதான விவாதத்தின்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
மக்களாட்சித் தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மை ஆகியவற்றுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், இந்தப் பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் அளித்திட வேண்டுமென்று, ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வலியுறுத்த வேண்டும் என இந்தப் பேரவை ஒருமனதாகத் தீர்மானம் கொண்டுவருகிறது” என்றார்.

எதிர்க்கட்சியினர் இருக்கை விவகாரத்தை இன்று சட்டப்பேரவையில் எழுப்பியதற்கு, ``உண்மையில் இந்த தனித் தீர்மானம்தான் காரணமா... ஏதோ நோக்கத்தோடவே செய்றீங்க" என்றார் அவைத்தலைவர். ``இன்று ஓ.பன்னீர்செல்வம், அவரின் ஆதரவாளர்கள் ஆப்சென்ட் என்னும் அடிப்படையில்கூட மீண்டும் இருக்கை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கையிலெடுத்திருக்கலாம். எனினும் இப்படியான தீர்மானம் கொண்டுவரும்போது அ.தி.மு.க உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்திருக்க வேண்டும்" என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாகயிருக்கிறது.
ஆனால், பல நாள்களாகக் கூட்டணிக் கட்சிகள் வைத்த கோரிக்கையை ஏற்று, தி.மு.க ஆளுநருக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. தீர்மானம் இயற்றப்பட்ட மாலையிலேயே ஆளுநர் ’இரண்டாவது முறையாக தமிழகச் சட்டசபையில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு’ ஒப்புதல் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.