
பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களைக்கொண்டவர், தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்.
பெண் சீடர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காகவும், கொலைக் குற்றத்துக்காகவும் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சாமியார் குர்மீத் ராம் ரஹீம், சிறையிலிருந்து அடிக்கடி பரோலில் வெளியே வந்து ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். அவற்றில், பா.ஜ.க தலைவர்களும் கலந்துகொள்வது ஹரியானா மாநில அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

‘குஷி’... குரு ஜி!
பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களைக்கொண்டவர், தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். சாமியாரான இவருக்கு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆஸ்ரமங்கள் இருக்கின்றன. ஹரியானா மாநிலம், சிர்சாவில் அதன் தலைமையிடம் அமைந்திருக்கிறது.
கார்ப்பரேட் சாமியார்களுக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருக்கும் இவர், பாட்டுப் பாடுவது, நடனம் ஆடுவது, திரைப்படங்களில் நடிப்பது, திரைப்படங்களைத் தயாரிப்பது, ஆடம்பர கார்களிலும் பைக்குகளிலும் பவனிவருவது என்று உற்சாக மனிதராக வலம்வந்தவர்.
சர்ச்சைக்குரிய ராம் ரஹீம், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2017-ம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்துவருகிறார்.
‘அவரைக் கடவுளாக நினைத்தேன்!’
குர்மீத் ராம் ரஹீமை அவருடைய சீடர்கள், கடவுளாகவே கருதுகிறார்கள். அப்படி, தன்னை கடவுளாகக் கருதிய இரண்டு பெண் சீடர்களுக்கு ‘பெரும் சாபத்தை’க் கொடுத்திருக்கிறார் ராம் ரஹீம். சிர்சா ஆஸ்ரமத்தில் இயங்கிவரும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் சீடர், காலையில் வகுப்பில் பாடம் நடத்திவிட்டு, இரவில் மாணவியர் விடுதியில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரை, தனது அறைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் ராம் ரஹீம். ‘அவரை என் கடவுளாக நினைத்தேன். ஆனால், என்னை அவர் சீரழித்துவிட்டார்’ என்று காவல்துறையிடம் கண்ணீர்மல்க வாக்குமூலம் அளித்தார் அந்தப் பெண் சீடர்.
இதேபோல, இன்னொரு பெண் சீடரும் ராம் ரஹீமால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். ஆஸ்ரமத்தில் இருந்த பல பெண்கள் இவரது பாலியல் இச்சைக்கு பலியானதாகச் செய்திகள் உலவினாலும், இந்த இரு பெண் சீடர்கள் துணிச்சலாகப் புகார் அளிக்க முன்வந்ததால், ராம் ரஹீம் சிக்கினார். குற்றத்தை உறுதிசெய்த நீதிமன்றம், இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இது தவிர, இரண்டு கொலை வழக்குகளில் இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

விட்டாச்சு லீவு..!
2017, ஆகஸ்ட்டிலிருந்து ஹரியானா சிறையில் இருந்துவரும் ராம் ரஹீமுக்கு எந்தத் தடையும் இல்லாமல் அடிக்கடி பரோல் வழங்கப்படுவது தற்போது சர்ச்சையாகியிருக்கிறது. முன்பு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக இருந்த இவர், 2014-நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் பா.ஜ.க ஆதரவாளராக மாறினார். தற்போது ஹரியானாவில் நடைபெற்றுவரும் மனோகர்லால் கட்டா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி, இவருக்கு பரோல் வழங்குவதில் சலுகை காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் பரோலில் வெளியே வந்த ராம் ரஹீம், உ.பி-யில் இருக்கும் ஆஸ்ரமத்தில் உற்சாகமாக தீபாவளி கொண்டாடினார். அது மட்டுமல்ல, தீபாவளிக்கான இசை வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். மேலும், பரோலில் வெளியே வந்திருக்கும் இந்த சிறைக் கைதி, ‘சத்சங்’ உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். கார்ப்பரேட் ஊழியர்கள் விடுமுறையைக் கொண்டாடும் மனநிலை யில், இவர் சுற்றிக்கொண்டிருக்கிறார். இவரது சத்சங் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இது, ஹரியானா அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
இந்த நிலையில், “ராம் ரஹீம் ஒரு பாலியல் குற்றவாளி. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு, விரும்பும்போதெல்லாம் ஹரியானா மாநில அரசு பரோல் வழங்குகிறது. அவர் வெளியே வந்து ‘சத்சங்’ நடத்துகிறார். அந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகரும் மேயரும் பங்கேற்கிறார்கள். ராம் ரஹீமுக்கு வழங்கப்பட்டிருக்கும் பரோலை ஹரியானா அரசு ரத்துசெய்ய வேண்டும்” என்று கொந்தளித்திருக்கிறார் டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால்.

பரோலும் தேர்தல்களும்!
ஹரியானா, இமாச்சல் மாநிலங்களின் தேர்தல்களுக்கும் இவருக்கு பரோல் வழங்கப்படுவதற்கும்கூட தொடர்பிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் மூன்று வாரகால பரோலில் ராம் ரஹீம் வந்தபோது, அவருக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பிறகு, கடந்த ஜூன் மாதம் 30 நாள்கள் பரோலில் அவர் வந்த நேரத்தில், ஹரியானாவில் 46 நகராட்சிகளுக்குத் தேர்தல்கள் நடைபெற்றன. தற்போது பரோலில் வந்திருக்கும் நேரத்தில்தான், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது.
ராம் ரஹீமுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் இருப்பதால், அந்த வாக்குகளைக் கவருவதற்காகவே, இவருக்கும் பரோல் வழங்கப்படுகிறது என்றும், அவர் நடத்துகிற சத்சங் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் பங்கேற்கிறார்கள் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அதற்கு ஹரியானா மாநில அரசிடமிருந்து எந்த விளக்கமும் இல்லை.
ஒவ்வொரு சிறைக் கைதிக்கும் நன்னடத்தை அடிப்படையில் பரோல் பெறுவதற்கான உரிமை இருக்கிறது. அப்படி பரோலில் வருபவர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் சட்டம் விதித்திருக்கிறது. அப்பாவிப் பெண்களை பாலியல் வேட்டையாடிய ஒரு குற்றவாளிக்கு, அரசியல் காரணங்களுக்காக பரோல் கொடுத்திருப்பது தவறான முன்னுதாரணம்!