விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி தாலுகாவுக்குட்பட்ட தாமரைக்குளத்தில் சாயப்பட்டறை அமைக்கும் முடிவை கைவிடவேண்டும், சாத்தூரில் புதிய ஜவுளி பூங்கா அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி தாமரைக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தாமரைக்குளம் முதல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பாதயாத்திரை மேற்கொண்டு போராட்டம் நடத்தினர். கடந்த 7-ம் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன்,``தென் மாவட்டங்களில் முந்தைய காலகட்டங்களில் தொழில் வாய்ப்புகள் இல்லாததால் சாதிக் கலவரங்கள் நடைபெற்றதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தென் தமிழகத்தில் ஆய்வு நடத்தி தென் மாவட்டங்களில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமாகதான் சாதிக் கலவரங்களை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என அறிக்கை சமர்ப்பித்தது. எனவே அந்த அறிக்கையின்படி, புதுதொழில்களை உருவாக்க தமிழக அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே சாத்தூரில் தமிழக அரசு அறிவித்த புதிய ஜவுளி பூங்காவை தொடங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல தாமரைக்குளத்தில் சாயப்பட்டறை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மானாவாரி பகுதியான தாமரைக்குளத்தில் சாயப்பட்டறை அமைந்தால் மழையை நம்பி விவசாயம் செய்யும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழாய் போகும் சூழ்நிலை ஏற்படும். விவசாயம் அழிந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படும். எனவே தாமரைக்குளம் பகுதியில் சாயப்பட்டறை அமைக்கும் முடிவினை அரசு கைவிட வேண்டும். மத்திய அரசு ஏழைகளுக்குச் சொன்ன வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆண்டுதோறும், வேலைவாய்ப்பை அதிகரிப்போம் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அவர் சொன்னப்படி பார்த்தால் இந்நேரம் இந்தியாவில் 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் 16 ஆயிரம் பேருக்குக்கூட வேலை வாய்ப்பை வழங்கவில்லை.
இந்தியாவின் ஜவஹர்லால் நேரு தொடங்கி முன்பிருந்த பிரதமர்கள் வரை நாட்டுக்கு புதிதாக பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கித் தந்தார்கள். ஆனால் பிரதமர் மோடி, இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருகிறார். மத்திய அரசை பொறுத்தவரை கார்ப்பரேட்டுகள் மட்டுமே பலமாகவும், வளமாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கையோடு செயல்படுகிறது" எனக் காட்டமாகக் கூறினார்.