1935 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரமான நியூரெம்பெர்க்கில் நாஜி கட்சியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஜெர்மனியின் 'தூய ரத்தத்தைப்' பாதுகாக்க, புதிய சட்டங்களை அமல்படுத்தியது ஹிட்லரின் அரசு. அதன்படி ஜெர்மன் ரத்தத்தையும், கௌரவத்தையும் பாதுகாக்க, ஜெர்மானியர்களுக்கும், அவர்களுக்கு இணையான சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் எனவும், ஜெர்மானியர்கள் அல்லாத சமூகங்களான யூத, ஜிப்ஸி, ரோமானிய சமூகங்கள் குடியுரிமையற்றவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு, இந்தியாவில் வெள்ளையர்கள் வெளியேறி, இந்திய அரசு உருவான போது, அப்போதைய தலைவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மிகக் கவனமாக உருவாக்கினர். மதம், சாதி, பொருளாதாரம், மொழி, இனம் எனப் பல வழிகளில் பிரிந்து கிடந்த தேசங்களை இந்திய ஒன்றியத்தின் கீழ் கூட்டமைப்பாக மாற்றினர். முடியாட்சி கால வழக்கங்கள் ஒழிக்கப்பட்டு, ஒரு குடிமகனை அரசு எந்த பேதமுமின்றி அணுகும் எனச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்தியா `மதச்சார்பற்ற' நாடாகப் பிறந்தது. 70 ஆண்டுகளில், நடைமுறைகளில் மாற்றங்கள் இருந்திருக்கலாம்; ஆனால் அரசியலமைப்பின்படி, இந்தியா மிகவும் வலுவான மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது; இந்திய அரசியலமைப்பின்படி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் சமம் என்பதே கொள்கை.

2008ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி, 'ஜோதிபுஞ்ச்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டிருந்தார். அதில் தன்னை ஈர்த்த 16 தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை தனித்தனிக் கட்டுரைகளாக எழுதியிருந்தார். இந்தக் கட்டுரைகளில் மிக நீண்ட கட்டுரையாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவரான மறைந்த கோல்வால்கரின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றிருந்தது. விவேகானந்தரை ஆதர்சமாகக் கருதுவதாகவும் விவேகானந்தருக்கு அடுத்த இடத்தில் கோல்வால்கரை வைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி அதில் எழுதியிருந்தார்.
பிரதமர் மோடியின் குருஜி கோல்வால்கர் எழுதிய 'We or Our Nationhood defined' புத்தகம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் கொண்டாடப்படும் புத்தகங்களுள் ஒன்று. அதில் கோல்வால்கர் ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டங்களைப் பாராட்டிவிட்டு இப்படி எழுதுகிறார் - "ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், முஸ்லிம்கள் வெளிநாட்டவர்களாகக் கருதப்பட வேண்டும்; அல்லது அவர்கள் இந்தியாவில் வாழ விரும்பினால், இந்து தேசத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக, எந்தச் சிறப்புரிமையும் கோராதவர்களாக, சாதாரண குடியுரிமை கூட இல்லாதவர்களாக இருந்துகொள்ளட்டும்."

ஹிட்லரைப் பாராட்டிய கோல்வால்கரை ஆதர்சமாகக் கருதும் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியில் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கிறது. நாடு முழுவதும் மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் இணைய வசதி முடக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தச் சட்டத் திருத்தத்தால் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என விளக்கி வருகிறார். தமிழ்நாட்டின் அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் அவர் கூறியதை வழி மொழிந்திருக்கின்றன.
ஹிட்லரின் நியூரெம்பெர்க் சட்டம் யூத சமூகத்தைக் குறிவைத்து ஜெர்மானியர்களிடமிருந்து பிரித்தது. மோடி கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம் அண்டைநாட்டு அகதிகளில் முஸ்லிம் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்குகிறது. இதை ஒப்பிடுவதே தவறு என்று கருதலாம். எனினும், ஹிட்லரின் சட்டமும், மோடியின் சட்டமும், ஒரு அரசு தன் குடிமக்களை மத அடிப்படையில் பார்க்கின்றன; அரசின் முன் நிற்கும் ஒரு தனி மனிதன் தன் மத நம்பிக்கையின் அடிப்படையில், தான் வணங்கும் கடவுள் யார் என்ற அடிப்படையில் பார்க்கப்படுகிறான். இது இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதல் என்பதோடு, 'இந்து ராஷ்ட்ரம்' என்ற கோல்வால்கரின் கனவை நிறைவேற்றுவதற்கு அவரின் சீடர்கள் போடும் அடித்தளம் என்றே எதிர்க்கட்சியினரும், சமூகச்செயற்பாட்டாளர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

சரி, குடியுரிமை சட்டத் திருத்தம் என்றால் என்ன?
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஏதுவாக, ‘1955 குடியுரிமை சட்டத்தைத் திருத்துவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. 31.12.2014-க்கு முன் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்தச் சட்டத் திருத்தம் பொருந்தும்.
இந்தச் சட்டத் திருத்தம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளுக்குப் பொருந்தாது. அதேபோல மற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகள், உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் (அவர்கள் இந்துக்களாகவே இருந்தாலும்), மியான்மர் முஸ்லிம்கள் முதலானோருக்கு இது பொருந்தாது. இது Citizenship Amendment Act என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, CAA.
இது அண்டை நாடுகளிலிருந்து வந்த அகதிகளுக்கு மட்டுமான பிரச்னைதானே என்று எண்ணலாம். எனினும் இதை அஸ்ஸாமில் தற்போது கணக்கெடுக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டோடு இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது National Register of Citizens என்று அழைக்கப்படுகிறது. இதைச் சுருக்கமாக NRC என்று அழைக்கின்றனர்.
NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டது. தற்போது இந்தக் கணக்கெடுப்புகள் முடிவடைந்து, ஏறத்தாழ 19 லட்சம் மக்கள் குடியுரிமையற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் ஏறத்தாழ ஏழு லட்சம் பேர் முஸ்லிம்கள். மற்ற மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படும் எனக் குடியுரிமை சட்டத் திருத்தம் உறுதியளிப்பதால், இந்த ஏழு லட்சம் முஸ்லிம்களும் மத்திய அரசு புதிதாகக் கட்டிவரும் தடுப்பு மையங்களில் அடைக்கப்படுவர்.
நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ள நிலையில், இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்து இல்லை என மத்தியஅரசு தற்போது வலியுறுத்தி வந்தாலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களுக்குள், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்படும்" என்று அறிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது National Population Register என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, NPR.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது National Population Register என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, NPR.
தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) முதற்கட்டமாக தமிழ்நாட்டின் நீலகிரி, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சோதனை முயற்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது "நாட்டில் வசிப்போர் ஒவ்வொருவர் பற்றியுமான விரிவான பதிவு" என்கிறது மத்திய அரசின் இணையதளம். இதில் மக்கள் தொகை அடிப்படையிலான கணக்கெடுப்பும், பயோமெட்ரிக் கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) சென்சஸ் கணக்கெடுப்பைப் போல மற்றொரு கணக்கெடுப்புதான் எனக் கருதலாம். ஆனால் இதில் விவரம் அளிப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அளிப்பதோடு, தங்கள் பெற்றோர் பிறந்த இடத்தைக் குறிப்பிட வேண்டும் எனவும் கூறுகிறது.
தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) என்பதற்கும் சென்சஸ் கணக்கெடுப்பிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது குடியுரிமைச் சட்டத்தின் (1995) கீழ் வருகிறது; சென்சஸ் கணக்கெடுப்பு என்பது சென்சஸ் சட்டத்தின் (1948) கீழ் எடுக்கப்படுவது. அதனால், அடிப்படையிலேயே மாற்றம் கொண்டிருக்கிறது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR).

2003 ஆம் ஆண்டு, அன்றைய பிரதமர் வாஜ்பாய் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) என்பதை குடியுரிமைச் சட்டத்தில் இணைத்து திருத்தம் மேற்கொண்டார். அதன்படி, 'சட்டவிரோத குடியேறி' என்ற புதிய பதம் அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) கணக்கெடுப்பில், மத்திய அரசு ஒவ்வொரு வீடாகச் சென்று குடிமக்களின் தகவல்களைச் சேகரிக்கும். இது இந்தியக் குடிமக்களுக்கான தேசியப் பதிவேடு என்று பதிவு செய்யப்படும்.
இந்திய குடிமக்களுக்கான தேசியப் பதிவேடு என்பது மாநிலப் பதிவேடு, மாவட்டப் பதிவேடு, துணை மாவட்டப் பதிவேடு, ஊரகப் பதிவேடு எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படும். ஊரகப் பதிவேட்டின் கீழ் சேகரிக்கப்படும் தகவல்கள் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் (NPR) சரிபார்க்கப்படும். சரிபார்த்து, இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்வரை, 'சந்தேகத்திற்குரிய குடியுரிமை' என்ற புதிய வகை உருவாக்கப்படும். இந்தப் புதிய வகையினர் இறுதிப்பட்டியலில் தங்களை இணைத்துக்கொள்ள, தாங்கள் இந்திய குடிமக்கள்தான் என நிரூபிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில், குடியுரிமை சட்டத் திருத்தம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) ஆகியவை ஒரே நேர்க்கோட்டில், 'குடியுரிமை' என்ற அம்சத்தின் கீழ் வருகின்றன. ஊரகப்பதிவேட்டில் அரசு அதிகாரிகளிடம் குடியுரிமை கோரும் நிலைக்கு சாதாரண குடிமக்கள் தள்ளப்படுவர். இந்தியாவில் பட்டியல் சாதி மக்களும், பழங்குடி மக்களும் அரசு அதிகாரிகளிடம் சாதிச்சான்றிதழ் பெறுவதற்காக எவ்வளவு அலைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது. முஸ்லிம் அல்லாத மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு எளிதில் குடியுரிமை கிடைக்கும். குடியுரிமை வழங்கப்படாத முஸ்லிம்கள் தங்களை நிரூபித்துக் கொள்ள நேரிடும்; நிரூபிக்கவில்லையெனில், தடுப்பு முகாம்களில் அடைபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இந்தியா போன்ற நாட்டில் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுபவர்களுக்குப் பணியென்று எதையும் அளிக்க முடியாது; மேலும், பின்னடைவில் இருக்கும் பொருளாதாரச் சூழலில், அவர்களுக்காக அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற முடியாது. ஆக, இது நேரடியாக எதில் சென்று முடியும் என்பதை எளிதாக யூகிக்கலாம்.
2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு பதவியேற்றவுடன், ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பான டி.ஜே.எஸ்-ஸின் தலைவர் ராஜேஷ்வர் சிங், "2021ஆம் ஆண்டு, டிசம்பர் 31க்குள், இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் துடைத்தெறிவோம்" என்று பேசினார். அதை உண்மையாக்கும் முயற்சியாகவே இந்தச் சட்டத்திருத்தமும், கணக்கெடுப்பும் பார்க்கப்படுகிறது. ஹிட்லர் செய்ததைப் பாராட்டி, இந்தியாவிலும் அதை அமல்படுத்த வேண்டும் என்று எண்ணினார் கோல்வால்கர். அவரின் அமைப்பின் வழி வந்த சீடர்கள் அதை நடைமுறையாக்கியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

ஒரே வித்தியாசம்தான். ஹிட்லர் இனத்தூய்மை என்ற அடிப்படையில் அதை மேற்கொண்டார். மோடியும் அமித் ஷாவும், அண்டை நாட்டுச் சிறுபான்மை மத அகதிகளின் வாழ்க்கை என்ற 'மனிதாபிமான' அடிப்படையில் இதை மேற்கொள்கின்றனர்.