அரசியல்
அலசல்
Published:Updated:

ஒன் பை டூ

ஜெயக்குமார் - சிவ.ஜெயராஜ்
News
ஜெயக்குமார் - சிவ.ஜெயராஜ்

“தற்போதைய மின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க-வினர்தான் காரணம்” என்ற அமைச்சர் தா.மோ.அன்பரசனின் குற்றச்சாட்டு?

ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

``இந்த அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பதை அமைச்சரின் கருத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. எங்கள் ஆட்சியில் தங்கு தடை இல்லாத சீரான மின்சாரம் வழங்கினோம். நாங்கள் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவுமில்லை... மக்களுக்கு எந்தச் சுமையையும் கொடுக்கவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் இலவசமாக 100 யூனிட் மின்சாரம் வழங்கினோம். அதைத் தடுப்பதற்குத்தான் தி.மு.க அரசு ஆதாரை இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. பால் விலை, மின்சாரக் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி என்று எதையுமே உயர்த்த மாட்டோம் என்று தி.மு.க சொன்னது. ஆனால், அவை அனைத்தையும் உயர்த்தியது தி.மு.க அரசுதானே... சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக, இரட்டை வேடம் போடுவதில் தி.மு.க-காரர்கள் கெட்டிக்காரர்கள். தி.மு.க-வினர் வீட்டில் உலை கொதிக்கவில்லை என்றாலும் அ.தி.மு.க-வைக் குறைசொல்வார்கள். வரி உயர்த்தியதைத் தவிர மக்களுக்கு என்ன செய்துவிட்டது தி.மு.க அரசு... ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைத்த குழு என்ன ஆனது... எங்கள் ஆட்சியில் மின்சாரத்துறையைச் சீரும் சிறப்புமாக வைத்திருந்தோம். அதைச் சீரழிக்கும் வேலையைச் செய்து, கட்டணத்தை உயர்த்துவதே தி.மு.க-வின் வாடிக்கை. இதில் மின்வெட்டு பிரச்னை வேறு. தி.மு.க-வினருக்குத் திராணியிருந்தால், 1991-ம் ஆண்டு முதல் மின்சாரத்துறையில் மின் உற்பத்தி, கடன், நிர்வாகச் செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடட்டுமே... எந்த ஆட்சியில் தவறு நடந்தது என்று ஒப்பீடுசெய்து மக்கள் முடிவுசெய்துகொள்ளட்டும்.’’

ஜெயக்குமார் - சிவ.ஜெயராஜ்
ஜெயக்குமார் - சிவ.ஜெயராஜ்

சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``உண்மை அதுதானே... உதய் திட்டத்தில் கையெழுத்துப் போட்டது கடந்த அ.தி.மு.க ஆட்சியில்தான். குழந்தையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டுவதுபோல, எல்லாத் தவறு களையும் செய்துவிட்டு, எதுவும் தெரியாததுபோல நடிப்பவர்கள் அ.தி.மு.க-வினர். ஆனால், `தி.மு.க ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது’ என்று வாய்ப்பேச்சு வீரர்களாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு உதய் திட்டத்தில் சேரச் சொன்னபோது கலைஞர் மட்டுமல்ல, அம்மையார் ஜெயலலிதாவும் அதற்கு இணங்க மறுத்துவிட்டார். இவர்கள் ஊழலில் திளைத்து, ஆட்சி பறிபோய்விடக் கூடாது என்பதற்காக ஒன்றிய அரசிடம் அடிபணிந்து உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டார்கள். அதுமட்டுமா... கடந்த பத்து வருட அ.தி.மு.க ஆட்சியில் ஒரு புதிய மின் உற்பத்தித் திட்டம்கூடத் தொடங்கவில்லை. நிலக்கரி கொள்முதலில் ஆரம்பித்து, வெளிமாநில ஒப்பந்த மின்சாரம், காற்றாலை மின்சாரம் என அத்தனை மின் கொள்முதல்களிலும் ஊழல் செய்துவைத்திருக்கிறார்கள். இந்த ஊழலைக் களைந்து, மின்துறையைச் சீர்செய்யும் நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் ‘தி.மு.க ஆட்சியில் மின் தட்டுப்பாடு நிலவுகிறது’ என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்துவார்கள். உண்மையில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 1.3 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கியிருக்கிறோம். பல்வேறு மின் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். கடன் சுமையிலிருந்து மீள வழிவகை செய்திருக்கிறோம். நாங்கள் வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார். அ.தி.மு.க-வினர் கடந்த ஆட்சியில் ஊழலில்லாத ஒரு திட்டத்தையாவது கொண்டுவந்தோம் என்று வெறும் அறிக்கைவிடட்டுமே பார்க்கலாம்.’’