
சட்டப்படி துணை மேயர் என்பவர் மற்ற மாமன்ற உறுப்பினர்கள் அமரும் வரிசையில்தான் அமரவைக்கப்பட வேண்டும். ஆனால், சேலத்தில் மேயருக்கு அருகிலேயே துணை மேயரும் அமர்த்தப்பட்டிருக்கிறார்.
சேலம் மாநகராட்சியில், தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான ‘நாற்காலிச் சண்டை’ விஸ்வரூபமெடுத்திருக்கிறது!
சேலம் மாநகராட்சியில், மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த ராமச்சந்திரனும், துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாரதாதேவியும் இருக்கின்றனர். அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தின்போது, ‘மேயருக்கு இணையாக துணை மேயருக்கு நாற்காலி போடக் கூடாது. கவுன்சிலர்கள் வரிசையில்தான் துணை மேயரும் அமரவைக்கப்பட வேண்டும்’ என்று வி.சி.க கவுன்சிலர் இமயவர்மன் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறார். இதையடுத்து, தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கிடையே முட்டல் மோதல் அனல் பறக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய துணை மேயர் சாரதாதேவி, “எல்லா மாநகராட்சியிலும் இருப்பது போலவே, கூட்ட அரங்கில் மேயருக்கு அருகே துணை மேயருக்கான நாற்காலியும் போடப்பட்டது. ஆனால், தனக்கு இணையாக துணை மேயர் அமர்வதா என்று மேயர் தூண்டிவிட்டதாலேயே கவுன்சிலர் இமயவர்மன், என்னைக் கீழே இறங்கச் சொல்லி தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார். அப்படிச் செய்தால், அவரை முன்வரிசையில் அமரவைப்பதாகவும் அவருடைய வார்டுக்குக் கூடுதல் நிதி வழங்குவதாகவும் உறுதியளித்திருக்கிறார். ‘உனக்கு முன்வரிசையில சேரும் தாரேன்... ஷேரும் தாரேன்’ என்று மேயர் தன்னிடம் பேரம் பேசியதாக இமயவர்மனே என்னிடம் சொல்லிவிட்டார். எனவே, அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுவரை கூட்டணி தர்மத்தை நிலைநாட்டும் வகையில் நான் அவர்களோடு ஒற்றுமையாகத்தான் செயலாற்றிவருகிறேன். அவர்கள்தான் பிரச்னை செய்கிறார்கள்” என்றார் கொதிப்பாக.

துணை மேயரின் குற்றச்சாட்டு குறித்து இமயவர்மனிடம் கேட்டபோது, “சட்டப்படி துணை மேயர் என்பவர் மற்ற மாமன்ற உறுப்பினர்கள் அமரும் வரிசையில்தான் அமரவைக்கப்பட வேண்டும். ஆனால், சேலத்தில் மேயருக்கு அருகிலேயே துணை மேயரும் அமர்த்தப்பட்டிருக்கிறார். கூட்டணிக் கட்சிக்குள் முடிவெடுத்துத்தான் இப்படி அமர வைத்திருக்கிறார்கள் என்றால், `நானும்தான் கூட்டணிக் கட்சி; எனக்கு முன்வரிசையில் உட்கார இடம் தாருங்கள்’ என்று ரொம்ப நாள்களாகக் கேட்டுவருகிறேன். ஆனால், அதை மட்டும் யாரும் செய்து தரவில்லையே ஏன்... அதனால்தான் தீர்மானம் கொண்டுவந்தேன். மற்றபடி என்னிடம் மேயர் எதுவும் சொல்லவில்லை; நானும் இது விஷயமாகத் துணை மேயரிடம் எதுவும் பேசவும் இல்லை” என்றார்.

இதையடுத்து மேயர் ராமச்சந்திரனிடம் விளக்கம் கேட்டுப் பேசினோம். “துணை மேயர் நாற்காலி தொடர்பாக நான் யாரையும் தூண்டிவிட்டு பேசச் சொல்லவில்லை. அது முற்றிலும் தவறான விமர்சனம். துணை மேயர் நேரடியாக அவர்களின் தலைவர் கே.எஸ்.அழகிரி மூலம் முதல்வரிடம் பேசி மேலே அமர்த்தப்பட்டிருக்கிறார். எனவே, இதில் நான் பேசுவதற்கு ஒன்றும் இல்லை’’ என்று முடித்துக்கொண்டார்.
ஓட்டுப்போட்ட மக்களுக்கு நன்மை செய்வதில் போட்டி போடுங்கள் கனவான்களே!