Published:Updated:

'500 டாஸ்மாக் கடைகள் குறைப்பு' - ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது என்ன?!

செந்தில் பாலாஜி

கள்ளச்சாராய மரணங்கள் மீதான விமர்சனங்கள் தலைதூக்கியிருக்கும் நிலையில், இந்த ஆய்வுக் கூட்டங்களில் கறார் காட்டவேண்டிய கட்டாயம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எழுந்திருக்கிறது.

Published:Updated:

'500 டாஸ்மாக் கடைகள் குறைப்பு' - ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது என்ன?!

கள்ளச்சாராய மரணங்கள் மீதான விமர்சனங்கள் தலைதூக்கியிருக்கும் நிலையில், இந்த ஆய்வுக் கூட்டங்களில் கறார் காட்டவேண்டிய கட்டாயம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எழுந்திருக்கிறது.

செந்தில் பாலாஜி

தலைமைச் செயலகத்தில் கடந்த 23-ம் தேதி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்துத் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறைச் செயலாளர் அமுதா, ஆணையர் மதிவாணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆய்வுக் கூட்டம்
ஆய்வுக் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாரய மரணங்களுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படும் ’மெத்தனால்’ பயன்பாட்டைத் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டார். அதேபோல், கடலோர மாவட்டங்களிலிருந்து மதுபானங்கள் நுழையாமல் இருக்க தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள், எஃப்.எல்.2 (மனமகிழ் மன்றங்கள்), எஃப்.எல்.3 ஹோட்டல் ஆகியவற்றில் விதிமீறல் ஏற்பட்டிருக்கிறாதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு அதிரடிகாட்டினார். குறிப்பாக, விடுமுறை நாள்களில் கடைகள் மூடப்பட்டிருக்கின்றனவா என்பதையும் கள ஆய்வு செய்து உறுதிசெய்ய வேண்டுமென அடுக்கடுக்கான கட்டளைகளை வெளியிட்டார்.

டாஸ்மாக் மதுபான கடை
டாஸ்மாக் மதுபான கடை

இதைத் தொடர்ந்து மீண்டும் 26-ம் தேதி, அமைச்சர் மற்றும் செயலாளர்கள் தலைமையில் ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை ஆட்சியர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில் பல அறிவுரைகளை அமைச்சர் வழங்கியிருக்கிறார்.

`அனைத்து மதுபானக் கடைகளும் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டும்தான் இயங்குகின்றனவா, அனைத்துப் பதிவேடுகளும் தினசரி பராமரிக்கப்படுகின்றனவா என்பதை மேலாளர்கள் ஆய்வுசெய்ய வேண்டும். மேலும், மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனையாவதைத் தடுக்க விலைப்பட்டியலை அனைவருக்கும் தெரியும்படி கடைகளில் ஒட்ட வேண்டும்’ என மேலாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

மதுபானங்கள்
மதுபானங்கள்

மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் நடப்பதையும், கள்ளச்சாரயம், போலி மதுபானங்கள் விற்பனை செய்வதும் உறுதியானால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வழிசெய்ய வேண்டும். மதுபான வகைகள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட மேலாளர்கள் தினமும் ஆய்வுசெய்ய வேண்டும். தவறு நடந்திருப்பது உறுதியானால் அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். இப்படியான ’பெரிய லிஸ்ட்டை’ அனைத்து அதிகாரிகள் முன்பும் வாசித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

இத்துடன், சட்டசபையில் அமைச்சர் அறிவித்ததுபோல், 500 டாஸ்மாக் கடைகளைக் குறைப்பதற்கான முடிவுகளும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ’வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் அப்புறப்படுத்தப்படும். மேலும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்தான கணக்கெடுப்பைத் தொடங்க அமைச்சர் உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு இது 50 மீட்டர் என இருந்தது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதைத் தடுக்க மாவட்டவாரியாக ’வாட்ஸ்அப் குழுக்கள்’ அமைத்து, புகார்கள் மேல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பறந்திருக்கிறது.

இப்படியான முக்கிய அறிவுரைகளுடன் நிறைவடைந்திருக்கிறது ஆய்வுக் கூட்டம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

’கள்ளச்சாராய மரணங்கள்’ மீதான விமர்சனங்கள் தலைதூக்கியிருக்கும் நிலையில், இந்த ஆய்வுக் கூட்டங்களில் அமைச்சர் கறார் காட்டவேண்டிய நிலை எழுந்திருக்கிறது. இதற்கு மற்றொரு காரணமாகச் சொல்லப்படுவது புதுச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ். இது உத்தரவோடு மட்டும் நிற்குமா இல்லை அவை பின்பற்றப்படுமா... என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!