Published:Updated:

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? | Doubt of Common Man

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம்

கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஏழை, எளியோர், பொருளாதாரத்தில் நலிவுற்றோர்க்கு வீடு கட்டுவதற்கு என மானியத்துடன் கூடிய நிதியுதவியை மத்திய அரசு வழங்கிவருகிறது.

Published:Updated:

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? | Doubt of Common Man

கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஏழை, எளியோர், பொருளாதாரத்தில் நலிவுற்றோர்க்கு வீடு கட்டுவதற்கு என மானியத்துடன் கூடிய நிதியுதவியை மத்திய அரசு வழங்கிவருகிறது.

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் ரகுவரன் என்ற வாசகர், "பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு பணம் கிடைக்கும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

நம்மில் பெரும்பாலானோருக்குச் சொந்தமாக ஒரு வீடு என்பது பெருங்கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற நாம் தொடர்ந்து உழைத்துவருகிறோம். நம்முடைய இந்தச் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் சில பல திட்டங்கள் மூலம் உதவி செய்கின்றன. நிறைய பேருக்கு இந்தத் திட்டங்களைப் பற்றித் தெரிந்திருந்தாலும், கூடவே சில சந்தேகங்களும் இருக்கின்றன. நம் வாசகருக்கும் இந்த வீடு வழங்கும் திட்டம் குறித்து ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

சொந்தவீடு
சொந்தவீடு
வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ளும் பொருட்டு சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த கண்ணையன் அவர்களை அணுகினோம்.

இதுகுறித்து அவர் கூறியதாவது "மத்திய அரசின் 'அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்' 2015-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் ஏழை, எளியோர், பொருளாதாரத்தில் நலிவுற்றோர்க்கு வீடு கட்டுவதற்கு என மானியத்துடன் கூடிய நிதியுதவியை மத்திய அரசு வழங்கிவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் 'பசுமை வீடுகள்' என்ற திட்டம் ஊராட்சிப் பகுதிகளில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. தொடர்ந்து மத்திய அரசின் 'அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்' அறிவிக்கப்பட்ட பின் 'பசுமை வீடுகள்' திட்டமும் அதனோடு இணைந்து ஊராட்சிப் பகுதிகளில் பயனாளிகளைத் தேர்வு செய்து வீடு வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்திவருகிறது. கிராமப் பகுதிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்பகுதிகளில் பயனாளிகளைத் தேர்வு செய்து அவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றி, பணி ஆணைகளை வழங்கி, கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்து உரிய ஆவணங்களைப் பதிவேற்றும் பணிகளைத் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செய்கிறது.

கண்ணையன், சட்டப்பஞ்சாயத்து இயக்கம்
கண்ணையன், சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

மத்திய அரசு மற்றும் மாநில அரசுப் பங்களிப்பில் மானியத்தொகை பயனாளரின் வாங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்குத் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்ந்த அலுவலகங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை, நில உரிமை ஆவணம், நில உரிமை உடையவரின் வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் நம்முடைய குடும்ப அட்டையில் யார் யார் பெயர் இணைக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் இன்னொருமுறை இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது. காலி இடமாகவோ, குடிசை வீடாகவோ, ஓட்டு வீடாகவோ வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, பயனாளி ஆகலாம். உயர் வருவாய் உள்ள பிரிவினர் வீடு கட்டும்பொழுது வங்கிகள் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும். வீடு கட்ட அவர்கள் பெறுகின்ற கடன் தொகையில் ஆறு லட்சம் வரை வட்டியில்லாக் கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆறு லட்சத்திற்கான வட்டித் தொகையை அரசு மானியமாக வங்கிகளுக்குச் செலுத்திவிடும். சரியான ஆவணங்களைக் கொண்டு PMAY இணையதளத்தின் மூலம் நாம் விண்ணப்பிக்க முடியும். ஆனால் பெரும்பாலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமே விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுப் பணி ஆணைகளை வழங்கிவருகிறது" எனக் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்களின் குடும்ப நிதி நிலைமையைப் பொறுத்து சில பிரிவுகளாகப் பிரிக்கப்படுவர். அதன்படி அவர்களுக்குக் கிடைக்கும் நிதியில் மாறுபாடு இருக்கும். குடும்ப வருவாயைப் பொறுத்து EWS (Economically Weaker Section), LIG (Low Income Group), MIG I (Middle Income Group) மற்றும் MIG II என நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறார்கள். 3 லட்சத்திற்கும் குறைவாக குடும்ப வருவாய் உள்ளவர்கள் EWS பிரிவின் கீழும், 3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்கள் LIG பிரிவின் கீழும் வருவார்கள். இந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 6.5% வரை மானியம் வழங்கப்படுகிறது. 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் MIG I பிரிவின் கீழ் வருகிறார்கள். இவர்களுக்கு 4% வரையும், 12 லட்சம் முதல் 18 லட்சம் வரை குடும்ப வருமானம் உள்ளவர்கள் MIG II பிரிவிலும், அவர்களுக்கு 3% வரை மானியமும் வழங்கப்படுகிறது. 18 லட்சம் ரூபாய்க்கும் மேல் குடும்ப வருமானம் உள்ளவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.

வீடு
வீடு

அதன்படி EWS மற்றும் LIG பிரிவின் கீழ் வருபவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 6.5 சதவிகிதம் வரை வட்டியில் மானியம் வழங்கப்படுகிறது. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், மேற்கூறிய இரண்டு பிரிவின் கீழ் வரும் நபர் ஒருவர் PMAY திட்டத்திற்கு விண்ணப்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்றைக் கட்டுகிறார் என்றால், அதற்குக் குறைந்தபட்சம் 20 சதவிகித பணத்தை மானியம் பெறுபவர் செலுத்தவேண்டும். அப்படி என்றால் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு 3 லட்சம் ரூபாயை அவர் முதலில் அளிக்க வேண்டும். மீதம் இருக்கும் 12 லட்சம் ரூபாய்க்குக் கடன் ஏற்பாடு செய்யப்படும். அந்த 12 லட்சம் ரூபாய்க் கடனில் 6 லட்சம் ரூபாய் வரையிலான கடனின் வட்டியில் 6.5% மானியத்தை அரசு கொடுக்கும். அதிகபட்சமாக 2.67 லட்சம் ரூபாய் வரையான மானியம் மேற்கூறிய இரண்டு பிரிவுகளின் கீழ் இருக்கும் விண்ணப்பிப்பவர்களுக்குக் கிடைக்கும். மீதம் இருக்கும் 6 லட்சம் ரூபாய்க்கான வட்டியை நாம் முழுமையாகச் செலுத்த வேண்டும். அந்த வட்டிக்கு மானியம் எதுவும் கிடையாது.

இதே போல் MIG I பிரிவின் கீழ் வருபவர்களுக்கு 9 லட்சம் வரையிலான கடனுக்கு 4% வரை வட்டியில் மானியம் வழங்கப்படும். இந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2.35 லட்சம் ரூபாய் வட்டியில் மானியம் கிடைக்கும். MIG II பிரிவின் கீழ் வருபவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 3% வரை வட்டியில் மானியமாக அதிகபட்சமாக 2.3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்காக இத்திட்டத்திற்கான மத்திய அரசின் ஆவணம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
download

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man