Published:Updated:

``அம்மா சிறை சென்றதற்குக் காரணம் டி.டி.வி.தினகரன்; அவர் வைத்திருப்பது கட்சியல்ல..!" - சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

"முதலமைச்சருக்கும், தங்கம் தென்னரசுக்கும், செந்தில் பாலாஜிக்கும் நேரடியாக நாங்கள் சவால்விடுகிறோம்.... 'சென்னையில் ஒரு பார்கூட செயல்படவில்லை' என்று தைரியம் இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்." - சி.வி.சண்முகம் காட்டம்

Published:Updated:

``அம்மா சிறை சென்றதற்குக் காரணம் டி.டி.வி.தினகரன்; அவர் வைத்திருப்பது கட்சியல்ல..!" - சி.வி.சண்முகம்

"முதலமைச்சருக்கும், தங்கம் தென்னரசுக்கும், செந்தில் பாலாஜிக்கும் நேரடியாக நாங்கள் சவால்விடுகிறோம்.... 'சென்னையில் ஒரு பார்கூட செயல்படவில்லை' என்று தைரியம் இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்." - சி.வி.சண்முகம் காட்டம்

சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், "கடந்த ஒன்றரை ஆண்டுக்காலமாக இந்த அரசு செயல்படாத அரசாக இருந்துவருகிறது. இந்த அரசின் ஒரே நோக்கம், ஸ்டாலின் குடும்பத்துக்குச் சொத்து சேர்ப்பது மட்டுமே. இன்றைக்கு... நாட்டிலும், அவருடைய அரசாங்கத்திலும், அமைச்சரவையிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாத ஒரு முதலமைச்சர் ஸ்டாலின். கட்சியும் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை. `என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்குத் தூக்கம் வரவில்லை' என வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதலமைச்சர் அவர். 

சி.வி.சண்முகம் - விழுப்புரம்
சி.வி.சண்முகம் - விழுப்புரம்

இன்றைக்கு அமைச்சர்களுக்குள்ளாகவே மோதல் நிலவுகிறது. நிதியமைச்சர் ஒரு கருத்து சொல்ல, அதற்குக் கூட்டுறவுத்துறை அமைச்சர் எதிர்வினை ஆற்றுகிறார். திறமை இல்லாத ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். இப்படிப் பொறுப்பற்ற, செயல்பட முடியாத முதலமைச்சரால் இன்றைக்குத் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு கேபிள் டி.வி-யை அம்மா அவர்கள் கொண்டுவந்தார்கள். அது கடந்த 10 நாள்களாக முற்றிலும் முடங்கியிருக்கிறது. அதிலுள்ள பிரச்னையைச் சரிசெய்து மீண்டும் நல்ல முறையில் இயக்குவதற்கான எந்த முயற்சியையும் இந்த அரசு எடுக்கவில்லை. ஊழலுக்காகவே ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசு, தனியார் முதலாளிகளிடம் பெறவேண்டியதை பெற்றுக்கொண்டு அரசு கேபிள் டி.வி-யை முற்றிலுமாக முடக்கி, தனியார் சேனல்களை வழங்கிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய ஊழலை இந்த அரசு செய்துகொண்டிருக்கிறது. 

எங்களுடைய எடப்பாடியார் தலைமையில் ஆளுநரைச் சந்தித்து... இந்த தி.மு.க ஆட்சியின் ஊழல், சீரழிந்திருக்கும் சட்டம் ஒழுங்கு, சட்டவிரோத சாராய விற்பனை, சட்டவிரோதமாக இயங்கும் பார்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விற்கப்படும் போதைப்பொருள்கள் பற்றிப் புகார் அளித்தோம். அந்தப் புகாருக்கு பதில் சொல்லும்விதமாக, தொழில்துறை அமைச்சர் 'ஆதாரத்தைக் கொடுத்தீர்களா?' என்று சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். நாங்கள் ஆதாரத்தை இணைத்துத்தான் கொடுத்தோம். அதை அவர் படித்தாரா, படித்தும் மறைத்துவிட்டாரா எனத் தெரியவில்லை. பெயர் வைப்பதில் மட்டும் தி.மு.க-வுக்குக் குறைச்சலே இல்லை. 'நம்ம ஊர் சூப்பர்' என்கிறார்கள். இதற்கு பேனர் வைப்பதற்கான தொகை 7,906 ரூபாயாம். ஆனால், அதற்கு அதிகபட்சம் 350 ரூபாய்தான் ஆகும். அப்படியென்றால் தமிழகத்திலுள்ள சுமார் 12,000 ஊராட்சிகளில் எவ்வளவு தொகை ஆச்சு என்று பாருங்கள்! இந்தப் பணமெல்லாம் எங்கே போகிறது.

ஸ்டாலின், செந்தில் பாலாஜி
ஸ்டாலின், செந்தில் பாலாஜி

இன்றைய ஆட்சியிலே மருந்துத் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு அரசின் பணி என்ன... மக்களுக்கு உணவு, கல்வி, தரமான மருத்துவ வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதானே... ஆனால் இவை எதையுமே செய்ய வக்கில்லாத அரசு ஸ்டாலின் அரசு. இன்றைக்குத் தமிழகத்தில் 24 மணி நேரமும் பார்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அங்கு மதுபானங்கள் சட்டவிரோதமாக வைத்தும், கூடுதல் விலைக்கும் விற்கப்படுகின்றன. ஜூனியர் விகடனிலும் கரூர் கம்பெனி பற்றிய செய்தி வந்திருக்கிறது. கரூர் கம்பெனி யார்... மின்சாரத்துறை அமைச்சர். அசோக் யார், மின்சாரத்துறை அமைச்சரின் தம்பி. அவர்களால்தான் தமிழகம் முழுவதும் சட்டவிரோத பார்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூரிலே பார்களில் காலக்கெடு முடிந்து இன்றைக்கு மூடப்பட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம் முழுவதும் பார் நடக்கிறது. இதற்கெல்லாம் ஆதாரத்தோடுதான் புகார் கொடுத்திருக்கிறோம். முதலமைச்சருக்கும், தங்கம் தென்னரசுக்கும், செந்தில் பாலாஜிக்கும் நேரடியாக நாங்கள் சவால்விடுகிறோம்.... 'சென்னையில் ஒரு பார்கூடச் செயல்படவில்லை' என்று தைரியம் இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். அப்படி அந்த பார்களில் சட்டவிரோதமாக விற்கப்படும் பாட்டில்களுக்கான கோடிக்கணக்கான பணம் எங்கே போகிறது?

டாஸ்மாக்
டாஸ்மாக்

அந்தப் பணம் யாருக்குப் போகிறது... தி.மு.க-வின் குடும்பத்துக்கும், முதலமைச்சருக்கும் தெரியாமல் இது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. 25 முதல் 28% கமிஷன் கேட்பதால் தமிழகத்திலே ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் எடுப்பதற்குத் தயங்குகிறார்கள். அதனால்தான் ஜீப், பம்ப் மீதெல்லாம் ரோடு போடுகிறார்கள். தளவானூர் பாலம் உடையும்போது இங்கிருந்த தி.மு.க-வினர் குதித்தார்களே... இப்போது ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆச்சு, என்ன பண்ணுனீங்க... என்னுடைய சொந்த ஊரில் (அவ்வையார் குப்பம்) உள்ள குளத்தில் மழை பெய்து தண்ணீர் நிரம்பியிருக்கிறது. அந்தத் தண்ணீரை வெளியேற்றிவிட்டு வேலை செய்யப்போகிறார்களாம். இந்த மக்களை ஏமாற்றிக்கொண்டு ஒரு குடும்பம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே, இந்த அரசின் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

'என்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது' எனும் மமதையில் இன்றைக்கு ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் ஸ்டாலின். டி.டி.வி.தினகரன் வைத்திருப்பது கட்சி அல்ல, அது ஒரு கூட்டம். `எடப்பாடி பழனிசாமியை நம்பிப் போனால் அவர்கள் அநாதையாக போய்விடுவார்கள்' என்கிறார். நான் கேட்கிறேன், இதே டி.டி.வி.தினகரனை நம்பிச் சென்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைமை என்ன... நடுரோட்டில் நிற்கிறார்கள். அம்மாவுக்கு துரோகம் செய்தவர் இந்த டி.டி.வி.தினகரன். அம்மா சிறைக்குச் செல்வதற்கு முழுக்க முழுக்கக் காரணம் டி.டி.வி.தினகரன். அம்மாமீது சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்டபோது, டி.டி.வி.தினகரனால் லண்டனில் வாங்கப்பட்ட ஹோட்டல் சேர்க்கப்பட்டது. அன்று கருணாநிதியுடன் சேர்ந்துகொண்டு, தன்மீதிருக்கும் பழியை மட்டும் டி.டி.வி.தினகரன் நீக்கியதால்தான் அம்மாவுக்கு அந்த நிலைமை வந்தது. அதனால்தான் அம்மா அவர்களை போயஸ் கார்டனைவிட்டு அடிக்காத குறையாக விரட்டினார்கள்.

டிடிவி.தினகரன்
டிடிவி.தினகரன்

எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுக்காலம் சிறப்பாக ஆட்சி செய்தார், கட்சியையும் காப்பாற்றினார். அலிபாபாவும் 40 பேர் கூட்டத்தையும் நீ பார்த்துக்கோ, எங்களைச் சொல்லாதே. நாங்கள் போய் கவர்னரைச் சந்தித்ததால் கூட்டணி சேரவா என்று சொல்கிறார்களே... அப்போ அமித் ஷா, கனிமொழியிடம் பேசினாரே... அப்படியென்றால் தி.மு.க கூட்டணி வைக்கப்போகிறதா?’’ என்றார் ஆவேசமாக.