கடந்த 12.1.2023-ம் தேதி நடந்த சட்டசபையில் தமிழ்நாட்டின் 150 ஆண்டுக்கால கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இந்தத் திட்டம் குறித்து முதலமைச்சர் சட்டசபையில் உரையாற்றியபோது, `அண்ணா, கலைஞர் கருணாநிதி அவர்களால் நிறைவேற்ற பாடுபட்ட திட்டம்’ என குறிப்பிட்டுப் பேசினார். `அதை நிறைவேற்றும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது’ என்றார்.

``1998-ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய், இந்தத் திட்டத்துக்கான ஆய்வுப் பணிக்கு நிதி ஒதுக்கினார். குறிப்பாக, பா.ஜ.க ஆட்சியில் சேது சமுத்திர திட்டத்துக்கான பாதை எது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்பின், 2004-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையில் தி.மு.க-வை உள்ளடக்கிய கூட்டணி அமைந்தது. அப்போது, 2,427 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் தொடங்கிய நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க சார்பாக இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

அதேபோல் இந்தத் திட்டத்தை ஆரம்பம் முதலே ஆதரித்து வந்த அ.தி.மு.க திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்தத் திட்டத்துக்கு எதிராக வழக்கு போட்டார்கள்” என்பது குறித்து பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். ``இந்த அரசியல் முட்டுக்கட்டை நடக்காமல் இருந்தால், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டுக்காலத்தில் ஏராளமான பயனை தமிழ்நாடு அடைந்திருக்கும்” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், `` `ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்’ என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். ராமர் பாலம் இருக்கும் காரணத்தைக் கூறியே முன்னர் முட்டுக்கட்டை போடப்பட்டது. அதையே நிராகரிக்கக்கூடிய வகையிலே, தற்போது மத்திய அமைச்சரே கருத்து கூறியிருக்கிறார். எனவே, இனியும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” எனப் பேசினார்.

ராமர் பாலம் என்பதற்கு ஆதாரமில்லை!
கடந்த 24.12.2022 அன்று மாநிலங்களவையில் ராமர் பாலம் குறித்து உறுப்பினர் கார்த்திகேய சர்மா கேள்வி எழுப்பினார். அதற்கு விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அவர் கூறியதாவது, "இஸ்ரோ நிறுவனம் செய்த ஆய்வில் அங்கு துல்லியமாகப் பாலம் இருந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக, ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே சுண்ணாம்புக்கல் திட்டுக்கள் இருக்கிறது. ஆனால், அது சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, மிச்ச சொச்சம் என்றோ கூற முடியாது.18,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு என்பதால், அதைத் துல்லியமாகக் கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது. அங்கு 56 கிமீ தூரம் கட்டமைப்பு இருக்கிறது என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிகிறது. ஆனால், அது பாலத்தின் கட்டமைப்புதான் எனக்கூற முடியாது” என்றார்.
இவ்வாறு, வரலாற்றில் இதற்கு முன்பு ராமர் பாலம் குறித்து பாஜக-வுக்குள் பல்வேறு மாற்றுக் கருத்து இருந்ததுபோல், தற்போது தமிழ்நாடு பாஜக-வினர் சட்டசபையில் உள்ளேயும் வெளியேயும் சேது சமுத்திர திட்டம் குறித்து மாற்றுக் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

சட்டசபையில் ஆதரவு, வெளியில் எதிர்ப்பு!
தீர்மானம் குறித்து சட்டசபையில் பேசிய பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நகேந்திரன், ``இந்தத் திட்டத்தைப் பாஜக சார்பாக ஆதரிக்கிறோம். ஆனால், ராமர் பாலத்துக்கு எந்த சேதமும் இல்லாத வகையில் திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே எங்களின் ஆதரவு இருக்கும்” எனப் பேசியிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ``2018-ல் மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த பிரமாண பத்திரத்தில் 4ஏ சீரமைப்புப்படி திட்டத்தை நிறைவேற்றினால் பாஜக நடைமுறைப்படுத்தாது. இதைத்தான் 2008-லிருந்து பாஜக பேசி வருகிறது. எனவே, தற்போது கொண்டுவந்திருக்கும் இந்தத் தீர்மானமும் பழைய சீரமைப்பு 4ஏ அடிப்படையில் தமிழக அரசு கொண்டுவர நினைத்தால் பாஜக அதைக் கடுமையாக எதிர்க்கும். அந்தத் திட்டம் தமிழகத்துக்குள் நுழைய பாஜக விடாது. காரணம், அதன்படி திட்டத்தை நிறைவேற்றினால் ராமர் பாலம் நிச்சயம் சேதமடையும். மேலும், இயற்கை உயிர்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இதனால் மீனவர்களுக்கோ நாட்டுக்கோ எந்தப் பயனும் இல்லை. இதனால் பயனடையப்போவது டி.ஆர்.பாலுவின் 'மீனம் பிஷெரீஸ்', கனிமொழியின் 'ஈஸ்ட் கோஸ்ட், வெஸ்ட் கோஸ்ட் லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனங்கள் மட்டும்” என விமர்சித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து பாஜக சார்பாக ராமர் பாலம் இடையே கொண்டுவரும் சேது சமுத்திர திட்டம் குறித்து பல்வேறு நிலைப்பாடுகள் இருக்கிறது. இந்த நிலையில், அங்கு திட்டம் செயல்பட சட்டசபையில் பாஜக ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. ஆனால், சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பாஜக-வின் உண்மை நிலைப்பாடு என்ன? இது குறித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வத்தாமனிடம் விளக்கம் கேட்டோம். "இராமாயணம் என்பது கதை அல்ல. அது ஓர் இதிகாசம். இதிகாசம் என்பதே,`இது இப்படி நிகழ்ந்தது’ என்று சொல்வது தான். எனவே, அதில் கூறப்படும் 'ராமர் பாலம்' என்பது இந்துக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, அது இந்தியாவின் வரலாறு கூட. ஆனால், தொழில் மற்றும் வளர்ச்சிரீதியாக இது தேவைப்படுகிறது என்னும் பட்சத்தில் மாற்றுப் பாதையில் செயல்படுத்தலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டமைக்கப்பட்ட பாலம் மனிதனால் உருவானதா... இல்லை இயற்கை அமைப்பா... என்பதைக் கண்டறிவது கடினம். இப்படி அதை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதைத்தான் மத்திய அமைச்சர் பேசியிருந்தார். ஆனால், `ராமர் பாலம் இல்லை என’ அவர் குறிப்பிடவில்லை. எனவே, பாலத்துக்குப் பாதிப்பு ஏற்படாமல், புதிய பாதையை அமைத்தால் நாங்கள் ஆதரிப்போம் என்பதைத்தான் சட்டசபையின் உள்ளேயும் வெளியேயும் பேசியிருக்கிறோம்" என்றார்.