இந்தியா முழுவதும் உள்ள ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்காக இந்திய ரயில் நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் பயணிகள் சரியான பொது நடத்தையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அந்த விதிமுறை களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகள் மட்டுமன்றி ரயிலில் பணிப்புரியும் டிக்கெட் பரிசோதகர் (TTE), கேட்டரிங் பணியாளார்கள் மற்றும் ரயிலில் செயல்படும் பிற பணியாளர்கள் என அனைவருக்கும் இந்த விதிகள் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் மற்றும் பணியாளர்கள் என யாராக இருந்தாலும் புகை பிடித்தல், மது அருந்துதல் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது IRCTC கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள விதிமுறைகள்...
* பயணிகள் தங்கள் இருக்கைகளில் இருந்து போன் அல்லது தங்கள் சக பயணிகளுடன் உரையாடும்போதும், குழுவாக பயணம் செய்யும்போதும் உரத்தக்குரலில் பேசக்கூடாது.
* இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் பிறருக்குத் தொந்தரவு தரும் வகையில் இசை, பாடல்களை ஒலிக்கவிடக் கூடாது.
* இரவு 10 மணிக்கு மேல் இரவு விளக்குகளைத் தவிர மற்ற விளக்குகள் எரிய அனுமதியில்லை.
* இரவு 10 மணிக்கு மேல் பயணிகளின் டிக்கெட்டுகளை TTE வந்து சோதனை செய்ய அனுமதியில்லை.
* மிடில் பர்த் எந்த நேரத்திலும் திறக்கலாம் அதற்கு கீழ் பெர்த் பயணிகள் அதைப் பற்றி புகார் செய்ய முடியாது.

* ஆன்லைன் உணவு சேவைகள் இரவு 10 மணிக்கு மேல் வழங்கப்பட மாட்டாது. இருப்பினும் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் உங்கள் உணவை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
* ஏசி கோச்சுகளில் பயணம் செய்யும் பயணிகள் 70 கிலோ பொருள்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள்.
* ஸ்லீபர் கோச்சில் பயணம் செய்யும் பயணிகள் 40 கிலோ வரையிலும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணிகள் 35 கிலோ வரையிலும் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
* ஏசி கோச்சில் கூடுதலாக 150 கிலோவும் ஸ்லீபர் கோச்சில் 80 கிலோவும், இரண்டாவது இருக்கையில் 70 கிலோ வரையிலும் கூடுதல் கட்டணம் செலுத்தி எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.