தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் 44 பேர் மரணம் அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்தைக் கொண்டுவர தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த சட்ட முன்வடிவுக்கு சில விளக்கங்கள் வேண்டும் எனக் கேட்டார்.

தமிழக அரசு சார்பாக அவர் கேட்ட கேள்விகளுக்குச் சரியான விளக்கமளித்த பின்னர், `மாநில அரசுக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை’ எனத் திருப்பி அனுப்பினார். இந்த அமைச்சரவைக் கூட்டத்தொடரில் மீண்டும் ஆன்லைன் தடைச் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. தமிழக அரசு சார்பாக இரண்டாவது முறையாகச் சட்டம் இயற்றப்பட்டால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். தவிர வேறு வழியில்லை என்னும் வாதத்தை முன்வைத்தனர்.
ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவில் சர்வீஸ் தேர்வழுதும் மாணவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர், “ஒரு சட்ட முன்வடிவை ஆளுநர் நிலுவையில் வைத்தால், கிட்டத்தட்ட அது நிராகரிப்பதாகவே அர்த்தம்” என்று பேசியிருந்தார். இந்த நிலையில், ஆளுநருக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. தீர்மானம் கொண்டுவந்த அன்று மாலையே ஆளுநர் தரப்பிலிருந்து ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது.

ஆன்லைன் தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்து பேசியதைக் குறிப்பிட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். இன்றைய தினமே தடைச் சட்டத்தை அரசிதழில் ஏற்றும் மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். இப்படியாகத் தொடர்ந்து போராடி பெறப்பட்ட ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை தமிழக அரசு எவ்வாறு நடைமுறைப்படுத்தவிருக்கிறது?
ஆணையம் அமைக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் அரசு, அதற்கான தண்டனை விவரங்களும் வெளியிடப்பட்டிருக்கிறது. எனினும் 100% இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுகளைத் தடைசெய்ய முடியுமா... டிஜிட்டல் தளத்தில் இருக்கும் சிக்கல் குறித்து சைபர் தடுப்பு வல்லுநர்களிடம் பேசினோம்.
இது குறித்து நம்மிடம் பேசிய டிஜிட்டல் செக்யூரிட்டி அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவரும், சைபர் வழக்கறிஞருமான ராஜேந்திரன், “இது எழுத்து வடிவத்துக்குச் சரியான சட்டமாக இருக்கலாம். ஆனால், நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிக்கல் இருக்கிறது. ஆன்லைனில் விளையாடும் நபர்களை ஐ.பி அட்ரெஸ் (IP Address) கொண்டு தேட முடியும். ஆனால், இப்போதைய டிஜிட்டல் உலகில் பலரும் தங்களின் லோகேஷனை மாற்றியோ வேறு சில வழிகளிலே சட்டவிரோதமாக விளையடுகிறார்கள். அப்போது அவர்கள் வேறு நாட்டில் விளையாடுவதைப்போல் காட்டும். இதில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அரசு திட்டமிட வேண்டும்.

அதே போன்று சில நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்துகொண்டு சட்ட விரோதமாக இங்கு இருப்பவர்கள் விளையாட வழி ஏற்படுத்திக்கொடுக்கும். அவர்களை எப்படி அரசு கைதுசெய்யும்... அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது...’Extra territorial Jurisdiction’ என்னும் அடிப்படையில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் தடைச் சட்டம் பொருந்தும் என கொண்டுவருமா... அப்படியானால், அதற்கு மத்திய அரசின் துணை தேவைப்படும். தன்னிச்சையாக மாநில அரசு பிற நாட்டின்மீது குற்றம் சொல்லமுடியாது.
மத்திய அரசின் உதவியில்லாமல் எதையும் தமிழக அரசால் செய்ய முடியாது. இதனால்தான், இந்தியாவில் கேரளா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலம் கொண்டுவந்த ஆன்லைன் தடைச் சட்டம் செல்லாது என நீதிமன்றமே அறிவித்தது. இந்த விவகாரத்தில்தான் தமிழகத்துக்கும் ஆளுநருக்குமிடையேயான மோதல் போக்கு அதிகரித்தது. ஆனால், இதை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மிகக் கடினம். மேலும், இந்தச் சட்டத்துக்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தால், தமிழக அரசு ஜெயிக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

மக்கள் இதை விளையாடுவதைக் கண்டுபிடிக்க மற்றொரு வழி, இந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் சார்பாக, தனிநபரின் வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டாலோ, போடப்பட்டாலோ, அதன் மூலமாகவும் விளையாடிய நபர் யாரென கண்டறிந்து தண்டனை அளிக்க வாய்ப்பிருக்கிறது.
எனினும், டிஜிட்டல் தளத்துக்கு எந்த எல்லையும் இல்லை. மற்ற நாடுகளில் இது தொடர்பாகத் தடைச் சட்டம் கொண்டுவரப்படவில்லை. 100% ஆன்லைன் தடை சாத்தியம் என்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தண்டனையைவிட மேலும் கடுமையாக்கினால் பயன்பாடு குறையலாம். அதைத் தமிழக அரசு எப்படிக் கையாளயிருக்கிறது என்பதுதான் கேள்வியே” என்றார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசால் `தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம்' என்கிற புதிய ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆன்லைன் விளையாட்டு ஆணையத்துக்கு ஓய்வுபெற்ற, தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும், ஓய்வுபெற்ற காவல்துறை ஐ.ஜி., தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்றவர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். மேலும், இந்த ஆணையம் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுபவர்களைக் கண்காணிக்கும். அது குறித்தான தரவுகளைப் பராமரிக்கும். அதேபோல, ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களையும் கண்காணிக்கும்; அவர்களைப் பற்றிய தரவுகளையும் ஆணையம் பராமரிக்கும்.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகளின் தன்மைப்படி அவற்றை தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் வரிசைப்படுத்தும். உள்ளூர் ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்குப் பதிவுச்சான்றிதழ் வழங்கும். புதிய வழிகாட்டு முறைகளில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை அரசு எப்படி கையாளப்போகிறது என்பதில்தான் எந்த அளவுக்கு இதைக் கட்டுப்படுத்த முடியும் என்பது தெரியவரும்!